பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷவினால் வக்பு சபைக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நியமனம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது. வக்பு சபையின் தலைவராக சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக ரபீக் இஸ்மாயில், மெளலவி பஸ்ருல் ரஹ்மான், டாக்டர் உதுமான் லெப்பை, மெளலவி அர்கம் நூர்ஆமித், ஷகி அஹமட், சிராஜ் அப்துல் வாஹிட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வக்பு சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் 2010 – 2013 காலப்பகுதியிலும் வக்பு சபையின் தலைவராகக் கடமையாற்றியவராவார். இதேபோன்று மெளலவி பஸ்ருல் ரஹ்மானும் ஏற்கனவே வக்பு சபையின் உறுப்பினராகப் பதவி வகித்தவராவார்.
வக்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ரபீக் இஸ்மாயில் நீதிச்சேவை ஆணைக்குழுவில் காதி நீதிவான்கள் தொடர்பான விவகாரங்களுக்கு செயலாளராகவும், காதிகள் சபையின் செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வக்பு சபை தனது அமர்வினை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.-Vidvielli
- ஏ.ஆர்.ஏ.பரீல்