சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்கள் 33 பேரும் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் எவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளதாக இதுவரையில் கண்டறியப்படவில்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,
சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினால் பொது மன்னிப்புகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்போது கடந்த வருடம் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்திலிருந்து இடைவிலகியிருக்கும் இராணுவத்தினர் அவர்களது ஓய்வு காலத்தை உறுதி செய்துகொள்ளவும், மீண்டும் பணியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் இணைந்து கொள்ளவும் ஏற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இவ்வாறு இணைந்துகொள்ள விரும்பும் இடைவிலகியுள்ள இராணுவத்தினர் அவர்கள் இறுதியாகக் கடமையாற்றிய இராணுவ முகாம்களிலோ அல்லது அருகிலிருக்கும் இராணுவ முகாமுக்கோ சென்று இவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் இணைந்துகொள்ள முடிவதுடன் , ஓய்வுபெற விரும்புவர்களும் இவ்வாறு சென்று தமது ஓய்வைப் பதிவு செய்துகொள்ள முடியும்.
இதேவேளை, அனுமதியற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களும் இந்தக் காலத்திற்குள் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தம்மிடமுள்ள துப்பாக்கிகளை கையளிக்க முடியும். இதன்போது அவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது. இந்தக் காலத்திற்குள் ஒப்படைக்கத் தவறுபவர்கள் மற்றும் சேவையில் இணைந்துகொள்ளாத இராணுவத்தினர் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போது உலகளாவிய ரீதியில் பெரிதும் அவதானம் பெற்றிருக்கும் கொரோனா வைரஸின் காரணமாக சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்நாட்டு மாணவர்கள் 33 பேரும் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனைகளுக் குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களில் எவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளதாக இதுவரையில் கண்டறியப்படவில்லை. அதேவேளை, அனைவரும் தனித்தனியான அறைகளில் பாதுகாப்பான முறையில் இருக்கின்றனர்.-Vidivelli