பூஜித், ஹேமசிறி பிணையில் விடுவிப்பு

வெளிநாடு செல்ல தடை: ஒவ்வொரு மாதமும் சி.ஐ.டி.யில் ஆஜராகவும் உத்தரவு

0 704

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களை குறைத்­துக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் குற்­ற­வியல் பொறுப்பு சாட்­டப்­பட்டு, கைது செய்­யப்­பட்ட முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர ஆகியோர் கொழும்பு நீதிவான் நீதி­மன்­றினால் பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.

கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான ஆதித்த பட்­ட­பெ­திகே மற்றும் மஞ்­சுள தில­க­ரத்ன ஆகி­யோரின் தீர்ப்பை மையப்­ப­டுத்தி கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­னகே இதற்­கான அனு­ம­தியை நேற்று வழங்­கினார்.

தலா 2 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் செல்­லவே இரு­வ­ருக்கும் மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­னகே அனு­மதி வழங்­கினார். பூஜித் ஜய­சுந்­தர மற்றும் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகியோர் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த இரு வேறு பிணை மனுக்­களை ஆராய்ந்து மேல் நீதி­மன்றம் நேற்றுக் கொடுத்த தீர்ப்­புக்கள் மேல் நீதி­மன்றப் பதி­வா­ள­ரூ­டாக உட­ன­டி­யாக நீதிவான் நீதி­மன்­றுக்கு அனுப்­பப்­பட்­ட­தை­ய­டுத்து, குறித்த இரு­வ­ரையும் அதனை மையப்­ப­டுத்தி இவ்­வாறு பிணையில் செல்ல நீதிவான் நீதி­மன்றம் அனு­ம­தித்­தது.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்­டோவின் பிணை மனுவை ஆராய்ந்த மேல் நீதி­மன்ற நீதி­பதி மஞ்­சுள திலக­ரத்ன, அவரை பிணையில் விடு­விப்­ப­தற்­கான உத்­த­ரவை நேற்று முற்­பகல் பிறப்­பித்தார். இத­னை­ய­டுத்து கட்­டாய விடு­முறை வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவை பிணையில் விடு­விப்­ப­தற்­கான உத்­த­ரவை அவ­ரது பிணைக் கோரிக்கை மனுவை ஆராய்ந்த மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்த பட்­ட­பெ­திகே பிறப்­பித்தார். இரு நீதி­ப­தி­க­ளி­னதும் தீர்ப்பில், அவ்­வி­ரு­வ­ரையும் தலா, இரண்­டரை இலட்சம் ரூபா ரொக்­கப்­பி­ணை­யிலும் தலா 25 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 2 சரீரப் பிணை­க­ளிலும் விடு­விப்­ப­தற்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. 2 சரீரப் பிணை­யா­ளர்­களும் கொழும்பில் வசிப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்­டு­மென நீதி­மன்றம் கூடுதல் நிபந்­த­னையும் விதித்­தி­ருந்­தது. இத­னைத்­த­விர, இரு­வரும் மாதாந்தம் இறுதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் முன்­னி­லையில் ஆஜ­ராகி கையெ­ழுத்­திட பிணை உத்­த­ரவில் கூடுதல் நிபந்­தனை சேர்க்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னை­விட இரு­வரின் வெளி­நாட்டுப் பய­ணங்­களும் தடை செய்­யப்­ப­டு­வ­தா­கவும், கட­வுச்­சீட்­டு­களை நீதிவான் நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கவும் உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது.

சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்தல் அல்­லது அழுத்தம் கொடுத்தல், விசா­ர­ணை­க­ளுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எத­னையும் செய்யக் கூடா­தெ­னவும் இரு­வ­ருக்கும் நீதி­ப­திகள் எச்­ச­ரிக்கை விடுத்­தனர். இவ்­வி­ரு­வ­ரதும் பிணை மனுக்­களை ஆராய்ந்­த­போது, அவர்கள் இரு­வரும் 4 மாதங்­க­ளுக்கும் அதிக காலம், விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டதால் அவர்­க­ளுக்குப் பிணை வழங்­கு­வதில் ஆட்­சே­பனை இல்­லை­யென சட்­டமா அதிபர் சார்பில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தனது வாதங்­க­ளின்­போது இரு மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளி­டமும் தெரி­வித்­தி­ருந்த நிலை­யி­லேயே பிணையில் விடு­விப்­ப­தற்­கான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. “இந்த விவ­கா­ரத்தில் 80 பேரிடம் வாக்­கு­மூலம் பெற்­றுள்ளோம். அசாத் சாலி, ரவூப் ஹக்கீம், றிஷாட் பதி­யுதீன், முன்னாள் ஜனா­தி­பதி, முன்னாள் பிர­தமர், பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளெனப் பலர் அதில் உள்­ள­டங்­கு­கின்­றனர். இன்னும் 10 பேர் வரையில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். இவ்­வி­ரு­வரும் சுமார் 4 மாதங்­க­ளுக்கு மேலாக விளக்­க­ம­றி­யலில் உள்­ளனர். இந்­நி­லையில் இவர்கள் தொடர்பில் கரு­ணை­ய­டிப்­ப­டையில் ஆராய்ந்தே சட்­டமா அதிபர் இவர்­க­ளது பிணைக்கு ஆட்­சே­பனை தெரி­விப்­ப­தில்லை என்ற தீர்­மா­னத்தை எடுத்தார். இவர்­க­ளுக்கு பிணை வழங்­கு­வதால் பிணை சட்­டத்தின் 14 ஆம் அத்­தி­யாயம் மீறப்­ப­டாது” என பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மேல் நீதி­மன்றில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இத­னை­ய­டுத்தே பிணை நிபந்­த­னை­களை பூர்த்­தி­செய்ய கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் மீள இவ்­வி­வ­கா­ரத்­துடன் தொடர்­பு­டைய குற்­ற­வியல் வழக்கு நேற்று பிற்­பகல் மீள விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது, சந்­தேக நபர்­க­ளான பூஜித் மற்றும் ஹேம­சிறி சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­தே­கொட மன்றில் ஆஜ­ரானார்.

இந்­நி­லையில் மேல் நீதி­மன்றின் பிணைத் தீர்ப்பு இதன்­போது சந்­தேக நபர்­க­ளுக்கு வாசித்துக் காட்­டப்பட்­டது. இத­னை­ய­டுத்து மன்றில் ஆஜ­ரான குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­காரி, பிர­தான பெண் பொலிஸ் பரி­சோ­தகர் ஹெல உடகே தலை­மை­யி­லான குழு, இந்த விசா­ர­ணை­களில் இது­வரை 80 பேரிடம் வாக்­கு­மூலம் பதிவு செய்­துள்­ள­தா­கவும், அதன்­படி இவ்­விரு சந்­தேக நபர்­க­ளி­டமும் மீள வாக்­கு­மூலம் பெற அவர்­களை அழைத்தால் உட­ன­டி­யாக அவர்கள் விசா­ர­ணைக்கு வர­வேண்­டு­மென அவர்­களை எச்­ச­ரிக்­கு­மாறும் கோரினர். இதனைக் கருத்­திற்­கொன்ட நீதிவான் பிரி­யந்த லிய­னகே, சி.ஐ.டி. விசா­ர­ணை­க­ளுக்கு அழைத்தால் அதற்­காக ஆஜ­ராக வேண்­டு­மென சந்­தேக நபர்­களை எச்­ச­ரித்தார்.

4/21 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு அல்­லது அதன் தாக்­கங்­களை குறைத்­துக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் குற்­ற­வியல் பொறுப்பு சாட்­டப்­பட்டு பூஜித் ஜய­சுந்­த­ரவும், ஹேம­சிறி பெர்­னாண்­டோவும் கடந்த 2019 ஜுலை மாதம் 2 ஆம் திகதி சி.ஐ.டியி­னரால் கைது செய்­யப்­பட்­டனர். இந்­நி­லையில் குறித்த இரு­வ­ரையும் பிணையில் செல்ல கடந்த 2019 ஜுலை 9 ஆம் திகதி கொழும்பு பிர­தான நீதிவான் உத்­த­ர­விட்­டி­ருந்தார். அவ்­வாறு அளித்த பிணை உத்­த­ரவு தவ­றா­ன­தென்­பதை சுட்­டிக்­காட்டும் 7 விட­யங்­களை உள்­ள­டக்கி சட்­டமா அதிபர் மீளாய்வு மனுவை கொழும்பு மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­தி­ருந்தார். இந்த மனு கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி விக்கும் களு ஆராச்சி முன்­னி­லையில் விசா­ரிக்­கப்­பட்­டது. சந்­தேக நபர்­க­ளான ஹேம­சிறி சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்­னவும், பூஜித் ஜய­சுந்­தர சர்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுர மெத்­தெ­கொ­டவும் ஆஜ­ராகி வாதிட்­டி­ருந்­தனர். சட்­டமா அதிபர் சர்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் வாதிட்­டி­ருந்தார். பிர­தான நீதிவான் சட்­டத்தை தவ­றாகப் புரிந்து கொண்­டுள்­ளமை, சம்­பவ சான்­று­களை மையப்­ப­டுத்தி முன்­வைக்­கப்­பட்ட தண்­டனை சட்டக் கோவையின் 296 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் குற்­றச்­சாட்டு சுமத்த முடி­யா­தெனக் கூறி­யமை, உறு­தி­யான உள­வுத்­த­க­வல்­களை தெளி­வற்ற உளவுத் தக­வல்­க­ளெனத் தனது தீர்ப்பில் குறிப்­பிடல், சந்­தேக நபர்கள் ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ர­ணைக்­குழு அறிக்­கையை மையப்­ப­டுத்­தியே கைது செய்­யப்­பட்­ட­தாக நீதிவான் தீர்ப்பில் தெரி­வித்­தமை, அடிப்­ப­டை­யற்ற பக்­க­சார்­பான உத்­த­ரவு, சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னைக்­க­மைய மட்­டுமே செயற்­பட வேண்­டி­ய­தில்­லை­யென நீதிவான் கூறி­யுள்ள விதம் உள்­ளிட்ட 7 விட­யங்­களை மையப்­ப­டுத்தி சட்­டமா அதி­பரால் மீளாய்வு மனு தொடர்பில் வாதங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

எனினும், சந்­தேக நபர்கள் தரப்பில் நீதி­வானின் உத்­த­ரவு சரி­யா­ன­தே­யென வாதி­டப்­பட்­டது. இந்தப் பின்­ன­ணி­யி­லேயே குறித்த மீளாய்வு மனு தொடர்பில் 2019 ஒக்­ரோபர் 9 ஆம் திகதி தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. இதன்­போது கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி நீதிவான் லங்கா ஜய­ரத்ன வழங்­கிய பிணைத் தீர்ப்பு தவ­றா­ன­தெ­னவும் அதனை இரத்து செய்­வ­தா­கவும் மேல் நீதி­மன்றம் அறி­வித்­தது.

அதனால் ஜுலை 9 ஆம் திகதி பிணை தீர்ப்­புக்கு முன்னர் இருந்த நிலை­மையே சந்­தேக நபர்கள் இருவர் தொடர்­பிலும் செல்­லு­ப­டி­யாகும் எனவும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிடுவதாகவும் அந்த மேல் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஹேமசிறியும் பூஜித்தும் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இத­னை­ய­டுத்து விளக்­க­ம­றி­யலில் அடைக்­கப்­பட்ட பூஜித்தும் ஹேம­சி­றியும், மீள கொழும்பு மேல் நீதி­மன்றில் தனித்­த­னி­யாக பிணை விண்­ணப்பம் செய்­தனர். அவை தொடர்பில் ஆராய்ந்தே நேற்றுத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. அதன்­ப­டியே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கடந்த ஜுலை 2 ஆம் திகதி தண்டனை சட்டக் கோவையின் 296, 298, 326,327,328 மற்றும் 410 ஆம் அத்தியாயங்களின் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்றைப் புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.