இலங்கை அந்நிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்று 2020 பெப்ரவரி 04 ஆம் திகதியுடன் 72 வருடங்கள் நிறைவடைகின்றன. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட புதிய அரசியல் மாற்றத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரைக் கொண்ட ஒரு புது யுகத்தில் 72 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. முரண்பாடான அரசியல் சூழலொன்று நிலவி வருகின்ற நிலையில் இம்முறை சுதந்திர தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. இன அடிப்படையிலான ஒற்றுமை, சகவாழ்வு நல்லிணக்கம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கை திருநாட்டை ஆட்சி செய்வதற்கு புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அடியெடுத்து வைத்துள்ள நிலையில் 72 வருடங்களுக்கு முன்னர் இலங்கை சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள இந்நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் ஏனைய இனங்களோடு இணைந்து எத்தகைய தியாகங்களையும் பங்களிப்பையும் செய்தது என்பது பேசப்பட வேண்டிய விடயமாகும்.
இலங்கையின் கரையோர பிரதேசங்களை 1505 – 1658 ஆம் ஆண்டு வரையில் போர்த்துக்கேயரும் 1658 – 1796 ஆம் ஆண்டு வரையில் ஒல்லாந்தரும் 1796 – 1948 ஆம் ஆண்டு வரையில் ஆங்கிலேயர்களும் இலங்கையை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஆங்கிலேயர் 1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியத்தை கைப்பற்றியதோடு இலங்கை முழுவதையும் ஆண்ட ஐரோப்பியர் என்ற பெருமையை பெறுகின்றனர்.
சுதந்திரத்திற்கு முன்னைய அரசியல் வரலாற்றை சற்றுப் பின்னோக்கி பார்த்தால் பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த 150 வருடங்களுக்குள் 1833 ஆம் ஆண்டு கோல்புரூக், 1920 ஆம் ஆண்டு மெனிங், 1924 ஆம் ஆண்டு மக்கலம், 1931 ஆம் ஆண்டு டொனமூர், 1947 ஆம் ஆண்டு சோல்பரி என்ற அடிப்படையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை இலங்கைக்கு முன்வைத்து நிர்வாகத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றது. இவ்வாறாக இலங்கை சுமார் 450 வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியரின் ஆதிக்கத்தின் கீழிருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக 1948 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சுதந்திரத்திற்கு முற்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கைக்கும் அரேபிய தேசங்களுக்கும் இடையில் நீண்ட உறவு இருந்துள்ளதையும் இலங்கை வரலாற்றுப் பதிவுகளில் நாம் காணலாம். அதுமட்டுமல்லாது இலங்கையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்து இலங்கைத் தேசத்தின் புகழை உலகிற்குப் பரவச் செய்தவர்கவர்களாகவே வரலாற்றுக் குறிப்புக்களில் அரேபியர்கள் பற்றிய தகவல்கள் கூறுகின்றன.
இலங்கை 1948 ஆம் ஆண்டு டொமினியன் அந்தஸ்துடனான சுதந்திரத்தைப் பெறுக் கொண்டதாயினும் 1972 ஆம் ஆண்டு வரையில் இந்நாட்டை ஆட்சி செய்வதற்கான அரசியல் யாப்பொன்றை வரைந்து கொள்ள முடியாத நிலை இருந்துவந்தது. 1970 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஸ்ரீல.சு.க. தலைமையிலான கூட்டு முன்னணி அரசாங்கம் தேர்தலில் பெற்றுக்கொண்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தால் பிரித்தானியரது நிர்வாகத்தின் கீழான டொமினியன் அந்தஸ்தை முற்றாக ஒழித்துக்கட்டி 1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பொன்றை வரைந்து கொண்டதன் மூலம் முதலாவது குடியரசு என்ற பெயரில் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட நாடாக இலங்கைத் தேசம் மலர்ந்தது. 1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு அறிமுகம் செய்யப்பட்டதோடு இலங்கையை இலங்கையராலே முழுமையாக ஆட்சி செய்யும் நிலை உருவாகியது. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே.க. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பிரதிபலனாக 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பு வரையப்பட்டு 1972 ஆம் ஆண்டின் முதலாவது குடியரசு யாப்பை முற்றாக மாற்றம்செய்து இரண்டாவது குடியரசு யாப்பு நடைமுறைக்கு வந்தது.
சுதந்திரப் போராட்டமும் முஸ்லிம்களும்
இலங்கையில் பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் 1817 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா – வெல்லஸ்ஸ கலகத்துடன் ஆரம்பமாகியது எனலாம். அதன் பின்னர் 1848 ஆம் அண்டு மாத்தளை கலகம் பிரித்தானியருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடும் இலங்கை தேசிய காங்கிரஸ், 1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த தேசிய காங்கிரசின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக காசிம் உமர், மக்தான் இஸ்மாயில், எஸ்.என். இஸ்மாயில், ரி.பி. ஜாயா, எல்.எம். சபர், எம்.கே. சால்தீன் ஆகியோர் 1922 ஆம் ஆண்டு இணைந்து கொண்டனர். அதன்மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கான இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு ஆரம்பமாகியது. அன்றைய காலகட்டத்தில் இந்த முஸ்லிம் தலைவர்கள் மிகவும் பிரபல்யமிக்க தலைவர்களாகக் கருதப்பட்டவர்களாவர். 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் திகதி இந்த தேசிய காங்கிரஸின் உதவித் தலைவராக ரி.பி. ஜாயா தெரிவு செய்யப்பட்டார். ரியால் முஹம்மத் என்ற முஸ்லிம் தலைவர் இலங்கை தேசிய காங்கிரஸின் செயலாளர்களுள் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1924 ஆம் ஆண்டு மனிங் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ஆட்சேபித்தபோது சிங்களத் தலைவர்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் பூரணமான ஒத்துழைப்பை வழங்கினர்.
1927 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு இலங்கை வந்தபோது இலங்கைக்காக மற்றுமொரு அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான கருத்துக்களை வழங்கியவர்களில் என்.எச்.அப்துல் காதர், சேர் மாக்கான் மாக்கார், ரி.பி .ஜாயா ஆகியோர் இடம்பெற்றனர். அதனைத் தொடர்ந்து இலங்கை தேசிய காங்கிரஸால் 1930 ஜனவரி 23 ஆம் திகதி இங்கிலாந்து மகாராணியை சந்தித்து இலங்கையின் நிலைவரம் மற்றும் சுதந்திரம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அனுப்பப்பட்ட தூதுக்குழுவில் காசிம் இஸ்மாயில் என்பவரும் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தமை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் சுதந்திர வேட்கையில் பாடுபட்ட ஏ.ஈ.குணசிங்க, டபிள்யு.ஏ.டி.சில்வா, டி.எஸ். சேனாநாயக்கா, எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாநாயக்கா, சி.டபிள்.டபிள்யு. கன்னங்கர, பொன்னம்பலம் இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், சேர் அருணாசலம், டி.பி. ஜயதிலக போன்ற சிங்கள பௌத்த மற்றும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுடன் இணைந்து முஸ்லிம் தலைவர்களும் இந்நாட்டின் முஸ்லிம் சமூகம் சார்பான ஆதரவையும் ஒத்துழைப்பையும் சுதந்திரத்திற்காக வழங்கினர்.
அதேநேரம், தமிழ் சமூகம் சார்ந்த தலைவர்களான இராமநாதன் மற்றும் ஜீ.ஜீ பொன்னம்பலம் போன்றவர்கள் அவர்களது சமூகம் சார்பாக முக்கியமான உரிமைகளுக்கான கோரிக்கையை நிபந்தனையாக முன்வைத்து அன்றைய காலகட்டத்தில் சுதந்திர கோரிக்கைக்கான ஆதரவை வழங்கினர். தமிழ்த் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளில் தமிழர்களது சுயநிர்ணய உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட கோரிக்கை பிரதானமானதாக அமைகின்றது. அந்தக் கோரிக்கைகள் சுதந்திரத்தின் பின்னர் நிறைவேறாததன் காரணமாகவே 1956 ஆம் ஆண்டு முதல் தமிழர்களது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டது எனலாம்.
முஸ்லிம் தலைவர்களைப் பொறுத்தவரையில் எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி இந்நாட்டில் விடுதலை, இறைமை, தன்னாதிக்கம், ஐக்கியம், சமாதானம் என்ற ஒரே குறிக்கோளில் ஒத்துழைப்பை வழங்கினர் என்பது பிரதானமாகும். அன்றைய நிலையில் எந்தவிதமான உரிமைக் கோரிக்கையையும் முன்வைத்து சிங்களத் தலைவர்களை இறுக்கிப் பிடிக்கும் சந்தர்ப்பவாத தலைவர்களாக முஸ்லிம்கள் இருக்கவில்லை. உதாரணமாக 1935 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி இலங்கை முஸ்லிம் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் போராடிய சிங்கள மற்றும் தமிழ் தலைவர்களும் கலந்துகொண்ட விசேட வைபவமொன்றில் சேக் அல்–பாஸி என்ற இஸ்லாமிய அறிஞர், “சமாதானம் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஆழமான உரையொன்றை நிகழ்த்தி முஸ்லிம்களது சுதந்திர வேட்கையை தூண்டியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், தேசிய காங்கிரஸுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அகில இலங்கை முஸ்லிம் லீக், இலங்கை முஸ்லிம் சங்கம், இலங்கை சோனகர் சங்கம் (சிலோன் மூவர்ஸ் அசோசியேசன்) போன்ற சங்கங்களை உருவாக்கி அவற்றின் ஊடாக முஸ்லிம்களை ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்டத்திற்கு சிங்களத் தலைவர்களுடன் இணைந்து பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்தப் பங்களிப்பும் ஒத்துழைப்பும் இன்று வரையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சுதந்திரத்தின் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்களுடன் இணைந்து ஐக்கிய இலங்கை என்ற ஒரே தத்துவத்தின் அடிப்படையில் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். இலங்கைவாழ் முஸ்லிம் சமூகம் பெரும்பான்மை இனமான சிங்கள மற்றும் தமிழர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ள அதே நேரம், தேசிய அரசியலில் செய்கின்ற பங்களிப்பினூடாக அரசியல் உரிமைகளை அனுபவிப்பதை இலட்சியமாகக் கொண்ட ஒரு சமூகமாகும். ஒருபோதும் நாட்டை பிளவுபடுத்த அல்லது இந்நாட்டின் பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தலான சமூகமாக வாழ்ந்தவர்கள் அல்ல.
சுதந்திரத்திற்கு முற்பட்ட காலங்களிலும் முஸ்லிம்களின் இவ்வாறான அணுகுமுறை காரணமாகவே 1833 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டு வரையிலான அரசாங்க சபையில் பல முஸ்லிம்கள் அங்கம் வகித்து நாட்டிற்காகவும் முஸ்லிம்களுக்காகவும் குரல் எழுப்பியதை குறிப்பிடலாம். அவர்களுள் எம்.சி. அப்துர்ரஹ்மான், வாப்பிச்சி மரிக்கார், என்.எச்.எம். அப்துல் காதர், முஹம்மத் சுல்தான், எம்.ரி. அக்பர், ரி.பி.ஜாயா, மாக்கான் மாக்கார், எம்.சீ.எம். கலீல், சேர் ராசிக் பரீட் போன்றவர்களைக் குறிப்பிடலாம். 1833 ஆம் ஆண்டிலிருந்து 1931 ஆம் ஆண்டு வரையில் பிரித்தானியரால் முன்வைக்கப்பட்ட ஆறு அரசியல் சீர்திருத்தங்களின் கீழும் நிறுவப்பட்ட அரசாங்க சபையில் நியமன மற்றும் தெரிவு அங்கத்தவர்களாக இருந்து இலங்கையின் இறைமைக்காக முஸ்லிம் தலைவர்களும் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பினர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிளவுபட்ட தேசத்தை முஸ்லிம்கள் விரும்பியதில்லை. அத்துடன் பதவிக்கு வரும் ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சிகளும் முஸ்லிம்கள் சிறுபான்மை இனமாக இருந்தாலும் முஸ்லிம் தலைவர்களையும் அரவணைத்தே ஆட்சியை முன்னெடுத்து வருகின்ற வரலாற்றை காணலாம்.
அண்மைக்காலமாக அநகாரிக தர்மபாலவின் சிந்தனைகளால் கவரப்பட்ட ஒருசில பெரும்பான்மை சிங்களத் தலைவர்கள் முஸ்லிம்களின் 100 வருடங்களுக்கும் மேற்பட்ட தேசாபிமான பங்களிப்பை மறுத்தவர்களாக, இந்நாட்டு முஸ்லிம்களை இரண்டாந்தரப் பிரசைகளாக நடத்துவதற்கும் அவர்களை இந்நாட்டின் அடிமைகளாக்கி மேலாதிக்கம் செலுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 30 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருந்த சிவில் யுத்தத்தை 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் பௌத்த தேசப்பற்றின் போக்கில் இந்நிலைமைகள் துரிதமாக வளர்ச்சி கண்டுள்ள பரிணாம மாற்றம் எனலாம். முஸ்லிம்கள் சுதந்திரத்திற்காக வழங்கிய பங்களிப்புகளை கொச்சைப் படுத்துபவர்களாகவும் இலங்கை முஸ்லிம்களது 1200 வருடகால பழைமைவாய்ந்த வரலாற்றைக்கூட மறுக்கும் வகையிலும் சில சிங்கள பௌத்த தீவிர போக்குடைய சிந்தனைவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் முஸ்லிம் சமூகம் அச்சத்திலும் பீதியிலும் வாழும் ஒரு சமூகமாக மாறியிருக்கின்றது. இன ஒதுக்கல்களின் அடிப்படையிலான செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
அத்தகைய தலைவர்களே இந்நாட்டில் முஸ்லிம்களின் பங்களிப்பை முற்றாக மறுத்து இந்நாட்டில் எழுச்சிபெறும் முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார, வர்த்தக, வாணிப பலத்தை அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளோடு இணைந்து இலங்கையை அழிக்க திட்டமிடுகின்றனர், இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை பரப்புகின்றனர், இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளனர் என்ற அடிப்படையில் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முஸ்லிம்களை அடக்கியாள முற்பட்டு வருகின்றனர்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக பலம்பெறுவதை முடக்கி அரசியல் உரிமைகளை அனுபவிப்பதை தடுப்பதும் முஸ்லிம்களை அச்சுறுத்தி அடிமைகளாக நடத்துவதும் இவர்களது திட்டங்களாகும். 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐ.தே.மு. அரசாங்கம் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக இன நல்லிணக்க பொறிமுறையொன்றை அறிமுகம் செய்தது. ஆனாலும், முஸ்லிம்களுக்கு இந்த நல்லிணக்கம நடவடிக்கை எந்தவிதமான பிரதிபலனையும் கொண்டு வருவதாக இருக்கவில்லை.
முஸ்லிம்கள் 17 ஆம் நூற்றாண்டு முதல் இந்நாட்டில் ஒல்லாந்தர்களாலும் ஆங்கிலேயர்களாலும் வழங்கப்பட்ட பலவிதமான உரிமைகளை இன்றும் அனுபவித்து வருகின்றனர். முஸ்லிம் தனியார் சட்டம், இஸ்லாமிய மத விடயங்களுக்கான பூரண சுதந்திரம் என்பன அவற்றுள் சிலவாகும். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிங்கள ஆட்சியாளர்களாலும் இவ்வாறு வழங்கப்பட்ட அரசியல், பெருளாதார, மத, கலாசார உரிமைகள் உள்ளன. அவற்றுள் பிரதானமான ஒன்றே சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்குப் பெரும்பான்மை இன அரசியலோடு கலந்து பாராளுமன்ற உறுப்பினர்களை பெற முடியாமலிருந்த நிலைமைக்கு முடிவுகட்டும் வகையில் 12.5% என்ற வெட்டுப் புள்ளி முறை 5% வீதம் வரை குறைக்கப்பட்டமையாகும். இவ்வாறான முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார மற்றும் மத அடிப்படையில் அனுபவிக்கும் உரிமைகளை தேடிப் பூண்டோடு அழித்து முஸ்லிம் சமூகத்தை நசுக்கும் நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக் ஷ மற்றும் அதுரலியே ரதன தேரர் போன்ற முஸ்லிம் விரோதிகள் அதற்கான அடித்தளத்தை இடும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இலங்கை சுதந்திரமடைந்து 72 வருட நிறைவை பெருமையுடன் நினைவுகூரும் இந்த தருணத்தில் நாட்டின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட சிங்கள அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகம் இந்நாட்டிற்கு செய்துள்ள தியாகங்களை மறந்துவிடக் கூடாது. சுதந்திரத்தைப் பற்றி பேசுவதற்கு இந்நாட்டில் பெரும்பான்மை இனத்திற்கு நிகராக முஸ்லிம் சமூகத்தையும் மதிக்க வேண்டும். துர்ப்பாக்கியம், இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இல்லாத நிலையில் முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரசைகள், ஒரே இலங்கையர் என்ற உணர்வோடு சுதந்திர தினத்தை பௌத்த மற்றும் தமிழ் மக்களோடு கைகோர்த்து கொண்டாடுகின்றோம்.
இலங்கைத் திருநாடு அந்நிய ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறுவதற்காக முஸ்லிம் தலைவர்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் வழங்கிய பங்களிப்பின் பெருமையை இன்றைய 72 ஆவது சுதந்திர தினம் நினைவுகூரப்படுகின்ற நிலையில் ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் பெருமையை உணர்ந்தவர்களாக முஸ்லிம்களையும் சமமான அந்தஸ்துள்ள இனமாக மதித்து முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாத்து பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, சில்லறை இனவாத தேசப்பற்றாளர்களுக்கு ஆட்சியாளர்கள் விலைபோகக் கூடாது என்பதே முஸ்லிம் சமூகத்தின் ஒரே எதிர்பார்ப்பாகும். முஸ்லிம் சமூகத்தை சப்பாத்துக் காலால் ஏறி மிதித்து நசுக்கும் நிலை தொடருமானால் அது உண்மையான யதார்த்தமான சுதந்திரத்தின் அடையாளமென்று கூறமுடியாது.
- எம்.எஸ். அமீர் ஹுசைன்