2019 ஆட்சி மாற்றத்தின் பின்னர்: முஸ்லிம்கள் ஆபத்தில்
மனித உரிமைகளை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அழுத்தம் வழங்க வேண்டும்; சர்வதேச நெருக்கடிகள் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டு
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எழுந்துள்ள மாற்றங்களுக்கமைய முஸ்லிம்களின் எதிர்காலம் ஆபத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக ‘சர்வதேச நெருக்கடிகள் குழு‘ வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘கண்காணிப்பு பட்டியல் 2020‘ எனும் தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான ‘சர்வதேச நெருக்கடிகள் குழு‘ கடந்த ஜனவரி 29 ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.2020 ஆம் ஆண்டில் நெருக்கடிகள் அல்லது வன்முறைகள் ஏற்படலாம் என கருதப்படும் பத்து நாடுகளை உள்ளடக்கி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பாக கடந்த வருடம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தோன்றியுள்ள சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளில் சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் ஆபத்துகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சிபாரிசுகளும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.
‘இலங்கையில் ஓர் ஆபத்தான கடல் மாற்றம்‘ எனும் தலைப்பிலான அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் கடந்த 16 நவம்பர் 2019 இல் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இன உறவுகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கொள்கைகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
போருக்குப் பின்னரான நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பில் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கடைப்பிடித்த கொள்கைகளுக்கு முற்றிலும் தலைகீழான கொள்கைகளையே புதிய ராஜபக்ச அரசாங்கம் அறிவித்துள்ளதுடன் அவற்றில் பல முக்கிய கொள்கைளை கைவிட்டுமுள்ளது.
இந்த மாற்றங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தொடர்பான கொள்கைகளை பலத்த சவாலுக்குட்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்க வேண்டியுள்ளது.
குறிப்பாக முஸ்லிம்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பாகுபாடான வேலைத்திட்டங்களுக்கோ அல்லது தீவிரமயமாதலை குறைத்தல் அல்லது புனர்வாழ்வளித்தல் எனும் போர்வையிலான மனித உரிமைகளை பேணாத முஸ்லிம்களை இலக்குவைத்த திட்டமிட்ட வேலைத்திட்டங்களுக்கோ நிதியளிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் இலங்கை ஆழமாக துருவமயப்பட்டுள்ளதை காண்பிக்கிறது. ராஜபக்ஷ அரசாங்கத்தின் 54 அமைச்சர்களில் இருவர் மாத்திரமே தமிழர்கள். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முஸ்லிம் ஒருவர் கூட இல்லாத அமைச்சரவை இதுவேயாகும்.
கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் தீவிரப்போக்குடைய பெளத்தர்கள் பாகுபாடுகளின் அடிப்படையில் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளனர்.
நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முழுமையாகப் பங்களிப்புச் செய்து வரும் இலங்கை முஸ்லிம்களின் வாழ்வு மீதான ஆபத்து வளர்ந்து வருகிறது. 2019 இல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் உந்தப்பட்டு நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான பாகுபாடுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது தடை செய்யப்பட்டதுடன் அவ்வாறு அணிந்து சென்றவர்கள் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்பட்டனர். முஸ்லிம்களின் பொருளாதார இலக்குகள் சேதமாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின்போது கைது செய்யப்பட்ட சிங்களவர்களான சகல சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
எனினும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளுமின்றி நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கூற்றுக்கள் இன மற்றும் மத அடிப்படையிலான கட்சிகளை பலவீனப்படுத்துவதை குறிகாட்டுகின்றன.
இதனை அடிப்படையாகக் கொண்ட அரசியல் யாப்புத் திருத்தங்கள் மூலம் பாராளுமன்றத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுமானால் முஸ்லிம் கட்சிகளால் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையைத் தோற்றுவிக்கலாம். இது முஸ்லிம் சமூகத்தை மேலும் ஓரங்கட்டுவதாகவே அமையும்.
மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பான கொள்கைகளில் முழுமையான மீள்பரிசீலனைகளை மேற்கொள்வதுடன் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க முன்வர வேண்டும் என சர்வதேச நெருக்கடிகள் குழு தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli