உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள்: டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள ஐவரிடம் தடுப்புக் காவலில் விசாரணை
மன்றில் ஆஜர்படுத்தி அனுமதியும் பெறப்பட்டது
4/21 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மையப்படுத்தி இடம்பெறும் விசாரணைகளில், டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மேலும் ஐவரை தடுத்துவைத்து விசாரிக்க சி.ஐ.டி. அனுமதி பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டுள்ள மேற்படி ஐவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டியினர் கைது செய்து பாதுகாப்பு அமைச்சின் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், நேற்று அவர்களை கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்து அவ்வுத்தரவுக்கமைய தடுப்புக் காவலின் கீழ் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி பெற்றுக்கொண்டுள்ளனர்.
குறித்த ஐவரும், கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, டுபாயில் கைது செய்யப்பட்டு அங்கு தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டியினர் கூறினர்.
எம்.எம்.எம். ஆதில், எம்.எல். ஷிஹான் அஹமட், பவுஸர் பவாஸ், ஏ.எஸ். மொஹமட் ஹாலிம், எம்.ரீ.மொஹமட் ரியாத் ஆகிய ஐந்து பேரே நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டவர்களாவர்.
ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாடுகளில் இருந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் 8 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் சிலர் நாடு கடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக சுமார் 65 பயங்கரவாத சந்தேக நபர்கள் உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் நேரடியாக தொடர்புபட்டமை, உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுகளின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, கடந்த 2019 ஜூன் 14 ஆம் திகதி 5 பயங்கரவாத சந்தேக நபர்களை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து சி.ஐ.டி. நாட்டுக்கு அழைத்து வந்தது.
30 வயதான புதிய காத்தான்குடி – 2 எனும் முகவரியைச் சேர்ந்த தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் ஆயுத பிரிவுத் தலைவராக கருதப்படும் ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் அல்லது மொஹம்மட் மில்ஹான், 34 வயதான மருதமுனை – 3 ஐச் சேர்ந்த மொஹமட் மர்சூக் மொஹமட் ரிழா, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 47 வயதான மொஹமட் முஹிதீன் மொஹமட் சன்வார் சப்றி, 29 வயதான காத்தான்குடி – 1 ஐச் சேர்ந்த மொஹமட் இஸ்மாயில் மொஹமட் இல்ஹாம், அனுராதபுரம் கெப்பித்திகொல்லாவையைச் சேர்ந்த 37 வயதான அபுசாலி அபூபக்கர் ஆகிய ஐந்து பயங்கரவாத சந்தேக நபர்களே சவூதியிலிருந்து இவ்வாறு கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களாவர்.
அதன் பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட மாவனெல்லையைச் சேர்ந்த சமத் எம். றியாஸ் எனும் சந்தேக நபர் சி.ஐ.டியால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஐ.எஸ். ஐ.எஸ். எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராகக் கருதப்படும் ஒருவரை, 4/21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து கட்டார் பொலிஸார் கைதுசெய்து தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் எனும் குறித்த சந்தேக நபரே இவ்வாறு கட்டார் பொலிஸ் நிலையம் ஒன்றால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் விசாரிக்கப்பட்டுவரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் முக்கிய உறுப்பினர் பஸ்ஹுல் சஹ்ரானும் குறித்த சந்தேக நபரும் கட்டாரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேணியுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், கட்டாரில் தடுப்பில் உள்ள சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்துவந்து விசாரிக்கும் பணிகளை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியிலேயே கட்டாரில் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப்புடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மாவனெல்லையைச் சேர்ந்த சமத் மொஹமட் றியாஸ் என்பவர் கட்டார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதம் தடுப்புக் காவல் விசாரணைகளின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் திகதி சி.ஐ.டி. விமான நிலையத்தில் வைத்து கைது செய்து தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் நாவலபிட்டி – ஹப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த 30 வயதான மொஹமட் சலீம் அப்துல் சலாம், அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதான மொஹமட் சஹான் மொஹமட் றியாஸ் ஆகியோரையும் சி.ஐ.டி.யினர் டுபாயிலிருந்து கைதுசெய்து அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்