ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்புரிமையிலிருந்து நீக்கினாலும் கட்சியை பாதுகாத்துக்கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ந்து செயற்படுவேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான அஜித் பி பெரேரா, பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோர் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட செய்தி தொடர்பாக வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நான் கட்சிக்கோ கட்சியின் ஒழுக்கவிதிகளுக்கோ எதிராக எதனையும் மேற்கொண்டதில்லை. என்றாலும் நான் அனைத்து விடயங்களுக்கு ஆமாம் போடுபவனாக இருந்ததில்லை. அதனால்தான் கட்சியின் செயற்குழுவிலிருந்து என்னை நீக்கியிருக்கவேண்டும். அத்துடன் என்னிடம் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை. அதனால் எனக்குப் பதவிகள் எதுவும் அவசியமும் இல்லை.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடும்போது அதுதொடர்பான அழைப்பு விடுக்கப்படுகின்றது. என்றாலும் இன்று (நேற்று) கட்சியின் செயற்குழு கூடுகின்றபோதும் அதற்கான அழைப்பு எனக்கு கிடைக்கவில்லை. கட்சியின் செயற்குழுவிலிருந்து என்னை நீக்கியிருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் இருந்தே எனக்கு அறிந்துகொள்ள முடியுமாகியது.
அத்துடன் கட்சியின் செயற்குழுவிலிருந்து என்னை நீக்கியமை தொடர்பில் நான் ஆச்சரியப்படுவதில்லை. என்றாலும் கவலையடைகின்றேன். கட்சியின் ஒற்றுமை, ஜனநாயகம் மற்றும் கட்சியின் உறுதிப்பாட்டுக்காக கடந்த காலங்களில் நான் தொடர்ந்து செயற்பட்டு வந்தேன். ஆனால் ஒருபோதும் ‘ஆமாம்’ போடுபவனாக இருக்கவில்லை என்றார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவிக்கையில், நான் உட்பட இன்னும் சில உறுப்பினர்கள் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். என்றாலும் அதுதொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை. கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவரை நீக்குவதாக இருந்தால் செயற்குழு கூடியே அதுதொடர்பில் தீர்மானிக்கவேண்டும். ஆனால் அவ்வாறான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார்.-Vidivelli
- எம்.ஆர்.எம்.வஸீம்