18 நாடுகளுக்கு பரவியிருக்கும் கொரோனா வைரஸ்
சீனாவிலிருந்து வெளிநாட்டு பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதம்
கொரோனோ வைரஸ் தொற்றினால் சீனாவில் நேற்று புதன்கிழமை வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்திருப்பதுடன், அங்கு புதிதாக 1500 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதாக சீன அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதுவரையில் உலகின் 18 நாடுகளுக்கு அந்த வைரஸ் பரவியிருக்கிறது. அந்த நாடுகளில் 67 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், சீனாவிற்கு அடுத்ததாக அதிக சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் எவரும் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகவில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது.
இதேவேளை, கொரோனோ வைரஸ் தொற்றின் மையநிலையமான சீனாவின் வூஹானிலிருந்து தங்களது பிரஜைகளை தத்தமது நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு உலகநாடுகள் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவும், ஜப்பானுமே அவற்றின் நூற்றுக்கணக்கான பிரஜைகளை விமானம் மூலம் ஏற்றிச்சென்றிருக்கின்றன.
ஜப்பானிய அரசாங்கத்தினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானமொன்று 206 ஜப்பானியப் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு வூஹானிலிருந்து டோக்கியோவை புதன்கிழமை காலை சென்றடைந்திருக்கிறது. அந்தப் பயணிகளில் இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், மூன்று ஆண்களும் மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காகத் தனித்தனியான அம்பியூலன்ஸ் வண்டிகளில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினர். கொரோனோ வைரஸின் தொற்றுக்கு இவர்கள் உள்ளாகியிருக்கிறார்களா, இல்லையா என்பது நேற்று முன்தினம் இரவு வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஜப்பானிய அரசின் உயர்மட்டப் பேச்சாளர் யொஷிஹிடே சுஹா கூறினார்.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துமாறு சீனா மீதான நெருக்குதல்கள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன. வைரஸின் விளைவாக மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை செவ்வாயன்று 26 பேரினால் அதிகரித்த அதேவேளை, புதிதாகத் தொற்றுக்கு இலக்கான சகலரும் (மக்கள் பிரவேசிக்கவும், வெளியேறவும் தடைசெய்யப்பட்டிருக்கும்) ஹுபே மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 5, 974 ஆக உயர்ந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனப்பெருநிலப்பரப்பில் சார்ஸ் நோய் தீவிரமாகப் பரவிய காலகட்டத்தில் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கையையும் விட (5, 327) இது கூடுதலானதாகும். சார்ஸ் நோய் சீனப்பெருநிலப்பரப்பில் 349 பேர் உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் 770 இற்கும் அதிகமானவர்களைப் பலியெடுத்தது.
இதனிடையே வூஹானிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட சுமார் 200 அமெரிக்கப் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு வாடகை விமானமொன்று புதன்கிழமை காலை வூஹானிலிருந்து கிளம்பியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். இந்தப் பயணிகளினதும் ஏனைய அமெரிக்கர்களினதும் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மிகவும் கவனமாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவர் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓர்டாகஸ் கூறினார்.
சீனாவிற்கு நேரடி விமானசேவைகளை நிறுத்திய பிரிட்டிஷ் எயார்வேஸ்
சீனப்பெருநிலப்பரப்பிலிருந்து பிரிட்டனுக்கும், பிரிட்டனிலிருந்து சீனாவிற்குமான சகல நேரடி விமான சேவைகளையும் இடைநிறுத்தியிருப்பதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் புதன்கிழமை அறிவித்தது. அவசியத் தேவையைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்காகவும் சீனாவிற்கு பிரிட்டிஷ் பிரஜைகள் பயணிக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்ததையடுத்தே பிரிட்டிஷ் எயார்வேஸ் இவ்வாறு அறிவித்திருக்கிறது. ஜனவரியிலிருந்து பெப்ரவரி வரை சீனாவிற்கு நேரடி விமான சேவைகள் கிடையாது என்பதை பிரிட்டிஷ் எயார்வேஸ் இணையத்தளம் காண்பிக்கிறது. ‘வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக நாம் மன்னிப்புக் கோருகின்றோம். ஆனால் வாடிக்கையாளர்களினதும், விமானசேவை ஊழியர்களினதும் பாதுகாப்பே எமது முன்னுரிமைக்குரியவை’ என்று அந்த விமான சேவையின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைப்பு
பாதிக்கப்படக்கூடிய அல்லது தனிமைப்படுத்தப்படக்கூடிய தனது பிரஜைகள் வூஹான் அமைந்திருக்கும் ஹுபே மாகாணத்திலிருந்து வெளியேற உதவிகள் செய்யப்படும் என்று அவுஸ்திரேலியா புதன்கிழமை அறிவித்தது. அவ்வாறு வெளியேறுகின்றவர்கள் இந்து சமுத்திரத்திலுள்ள அவுஸ்திரேலியப் பிராந்தியமான கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்படுவர் என்றும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோருக்கான சர்ச்சைக்குரிய தடுப்புநிலையம் அந்த கிறிஸ்மஸ் தீவிலேயே அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வூஹானிலிருந்தும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் தனது பிரஜைகளைத் திருப்பியழைப்பதற்கான திட்டங்களை பிரிட்டன் பூர்த்திசெய்து கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் பிரஜைகளை இரு பிரெஞ்சு விமானங்களில் இவ்வாரம் ஏற்றிக்கொண்டு செல்லவிருக்கிறது. கொரியாவும் அவ்வாறே செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளை ஏனைய பல நாடுகள் தங்களுக்கு இருக்கும் தெரிவுகளை ஆராய்ந்த வண்ணமிருக்கின்றன.
‘வூஹானிலிருந்து விமானம் கிளம்புவதற்கு முன்னதாக சகல பயணிகளினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. பிறகு மீண்டும் விமானம் பறந்துகொண்டிருந்த போது மருத்துவர்கள் உடல் வெப்பநிலையைப் பரிசோதித்தனர். வூஹான் நகரிலுள்ள சகலரும் முகமூடி அணியத்தொடங்கினார்கள்.
ஜனவரி 23 ஆம் திகதி வூஹானுக்கான போக்குவரத்து தடைசெய்யப்பட்டதும் நாம் பெரும் அச்சமடைந்தோம். இன்னமும் 400 இற்கும் அதிகமான ஜப்பானியர்கள் வூஹான் நகரில் இருக்கிறார்கள். அவர்கள் சகலரும் நாடு திரும்பவே விரும்புகின்றார்கள்’ என்று டோக்கியோ வந்திறங்கிய தகாயுகி காடோ என்ற பயணி த கார்டியனிடம் தெரிவித்தார்.
சகல பயணிகளும் மேலும் சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்றும், வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எஞ்சிய பயணிகள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என்று பிரகடனம் செய்யக்கூடியதாக இருக்கும்வரை அவர்களது வீடுகளில் சுயதடுப்புக்காவலில் இருக்கவேண்டும். ஜப்பான் மேலதிக விமானங்களையனுப்பி, வூஹானிலுள்ள சுமார் 650 ஜப்பானியர்களையும் அழைத்து வருவதற்கான அடுத்த ஏற்பாடுகளில் புதன்கிழமை ஈடுபட்டது.
வூஹான் நகருக்கு முதலில் வந்த ஜப்பானிய விமானம் 15 ஆயிரம் முகமூடிகள், 50 ஆயிரம் சோடி கையுறைகள், 8 ஆயிரம் பாதுகாப்புக் கண்ணாடிகள் உட்பட அவசரகால விநியோகங்களை ஏற்றிவந்தது என்று வெளியுறவு அமைச்சு கூறியது. வூஹானிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வெளியில் எங்கும் செல்ல முடியாதவாறு அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.-Vidivelli
- த கார்டியன், ராய்ட்டர்ஸ்