முஸ்லிம்களின் இறுதிக் கடமையான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் திடீரென பாரிய மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கான தீர்மானம் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை காலம் வருடாந்தம் ஹஜ் ஏற்பாடுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அரச ஹஜ் குழு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்கள் என்பன மூலமே மேற்கொள்ளப்பட்டன.
இவ்வருடம் ஹஜ் முகவர்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை காலம் ஹஜ் ஏற்பாடுளில் ஹஜ் முகவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ வெற்றிபெற்றதன் பின்பு அமையப் பெற்ற அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரேனும் அமைச்சராக நியமிக்கப்படவில்லை. இதனால் கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் பொறுப்பில் இருந்த முஸ்லிம் சமய விவகார அமைச்சு கை நழுவிப்போனது. முஸ்லிம் விவகாரங்களுக்கென தனியான அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.
முஸ்லிம் சமய விவகாரமும் கலாசார அமைச்சுக்குப் பொறுப்பான பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் விடயதானங்களுக்குள் உட்பட்டது. முஸ்லிம் விவகாரங்களை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பொறுப்பேற்றுக் கொண்டதும் மர்ஜான் பளீலின் தலைமையில் ஐவர் கொண்ட ஹஜ் குழுவொன்றினை நியமித்தார்.
ஹஜ் உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் கைச்சாத்திடுவதற்கு அக்குழுவையே அனுப்பி வைத்தார். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரைக் கூட அவர் அக்குழுவில் இணைக்கவில்லை.
2020 ஆம் ஆண்டுக்கு சவூதி ஹஜ் அமைச்சு இலங்கைக்கு 3500 கோட்டா வழங்கியுள்ளது. இந்நிலையில் தான் இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை ஹஜ் குழு உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமெனவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஹஜ் முகவர்களில் பலர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதையும் ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து கூடுதலான பணத்தை அறவிடுவதையும் கருத்திற் கொண்டு ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கருதி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலம் ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்த முகவர்களில் பலர் இந்தப் புனித சேவையை ஒரு வர்த்தகமாகவே கருதிச் செயற்பட்டு வந்தனர். ஹஜ் யாத்திரிகர்களின் நலன் அன்றி இலாபமீட்டுவதே அவர்களது இலக்காக இருந்தது. உரிய கட்டணங்களைச் செலுத்தியும் இறுதி நேரத்தில் முகவர்களின் ஊழல் காரணமாக ஹஜ் கைவிடப்பட்ட சம்பவங்களும் வரலாற்றில் பதிவாகியுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது, அறிவிப்பில் பல கவர்ச்சியான இனிப்பான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. கடந்த வருடம் ஆக குறைந்த ஹஜ் கட்டணமாக 7 இலட்சம் ரூபாய் அறவிடப்பட்டது. ஒரு மில்லியன் ரூபாவும் வி.ஐ.பி. பெகேஜ் எனக் கூறி அறவிடப்பட்டது.
இன்று ஹஜ் கட்டணம் 5 இலட்சம் ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இனிப்பான செய்தியே. 4200 பேர் தங்களது ஹஜ் பயணத்தை உறுதிசெய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மேலும் பலர் பயணத்துக்கு தயாராகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. இதனால் மேலும் 1500 கோட்டாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக ஹஜ் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மக்காவிலும் மதீனாவிலும் 5 நட்சத்திர ஹோட்டல்கள், இலங்கை உணவு, மினாவில் ‘B’ தர கூடாரம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அரசு இவ்வகையான கவர்ச்சியான உறுதிகளை வழங்குவதுடன் மாத்திரமல்லாது அவ்வாறே ஹஜ் ஏற்பாடுகளை நிறைவேற்றிக் காட்ட வேண்டும். ஹஜ் யத்திரிகர்களை புனித கடமையின்போது அசெளகரியங்களுக்கு உட்படுத்திவிடக்கூடாது.
குறிப்பிட்ட கட்டணத்தில் உறுதியளிக்கப்பட்ட சேவைகளை வழங்க முடியாத நிலை உருவானால் மேலதிக செலவுகளை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
ஆயிரக்கணக்கானவர்கள் ஹஜ் கனவுகளுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது ஆசைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண வேண்டும். அத்தோடு அரசாங்கம் மேற்கொள்ளும் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் ஹஜ் யாத்திரிகர்கள் தாமதமின்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும்.-Vidivelli
கடந்த வருடத்திலிருந்து முகவர்கள் ஒப்புக்கொள்ளாத
நடப்பிலிருக்கும் சேவையை 5லட்சம் ரூபாய்க்கு செய்ய முடியும் என்று சிலரால் முன்வைக்கப்படும் கருத்து அப்பட்டமான ஏமாற்று வேலை என்பதை இந்த அரசாங்கத்திற்கு விளங்கப்படுத்த வேண்டிய கடப்பாடு ஹஜ் முகவர்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த விலை குறைப்பால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசாங்கத்துக்கு நற்பெயர் கிடைக்குமென்ற மாயையும் அவர்கள் அரசியல்வாதிகள் இடத்தில் ஏற்படுத்தி இருக்கின்றார்கள் இது உண்மைக்கு புறம்பான தகவல்களை பொறுப்பு கூறவேண்டியவர்களிடத்தில் திணித்து விட்டுள்ளனர்.
இதனால் பாதிக்கப்படப்போவது அரசாங்கம் மாத்திரமல்ல மக்களும்தான் என்பதை சமூக ஆர்வலர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.
பொதுவாக ஒரு வியாபாரத்தில் தம்மை நிலைநிறுத்த வேண்டும் என்றால் பிறரை வீழ்த்த வேண்டும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் மேற்கூறப்பட்ட சிலரால் பொய்களும் வதந்திகளும் அவிழ்த்து விடப்பட்டன அதுவே சகல குழுமங்களிலும் இன்று முன்னெடுக்கப்படுகின்றன.
இருப்பினும், மக்கள் தங்களது வசதிக்கு ஏற்றாற்போல் முகவர்களை தெரிவுசெய்யும் ஏற்பாடு இந்த ஜனநாயக நாட்டில் அமைந்திருக்கின்றது என்பதை பலரும் மறந்து விட்டார்கள் போலும்.
ஏதோ ஒரு முகவர் கொள்ளை லாபம் எடுக்கின்றார் என்று உண்மை கதையையோ அல்லது வதந்தியையோ பரப்புவதன் மூலம் இந்த முகவர் தொழிலை ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்யும் கைங்கரியத்தை செயற்படுத்துதில் பலரும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.