2012 ஆம் ஆண்டு முதல் சிங்கள தீவிரவாதத்தால் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது அதற்கு எதிராக முதலில் நானே குரலெழுப்பினேன். இந்நாடு இங்கு வாழும் எல்லா இனத்தினருக்கும் உரியதாகும். முஸ்லிம், தமிழர், சிங்களவர் அனைவரும் சமமாகவே ஆளப்பட வேண்டும். எமக்குள் பிளவுகள் இருக்கலாகாது. நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களே என்று கூறியதாலேயே பொதுபலசேனா போன்ற அமைப்புகள் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தன.
நான் குற்றமெதுவும் செய்யாத நிலையிலேயே கைது செய்யப்பட்டு 11 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தேன். இதற்கான நஷ்டஈட்டைப் பெறவே நான் சட்டத்தரணிகளின் ஆலோசனையைக் கோரியுள்ளேன். பெளத்த தீவிரவாதத்துக்கு எதிரான எனது போராட்டம் இனியும் தொடரும். அதற்கு இந்நாட்டை நேசிக்கும், இனக்கலவரங்களை எதிர்க்கும் பெளத்த, இந்து, முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வட்டரக்க விஜித்த தேரர் கூறியுள்ளார்.
பேரினவாதிகளால் நான் கொல்லப்படலாம், என் உடல்துண்டு துண்டாக வெட்டப்படலாம் எனினும் நான் எனது கொள்கையிலிருந்தும் மாறப்போவதில்லை எனவும் அவர் கூறினார். இவர் ஜாதிக பலசேனா என்னும் அமைப்பின் பொதுச் செயலாளராவார். கலகொட அத்தே ஞானசார தேரர் பொதுபல சேனாவின் செயலாளர். இவர் ஜாதிக பலசேனாவின் செயலாளர். இருவரும் பிக்குகள்.
பிக்கு அமைப்புகளுக்கே இருவரும் செயலாளர்களாக இருக்கின்றார்கள். இவ்விருவரினதும் கொள்கைகள் இவர்களின் அமைப்புகள் நேர் எதிரானவையாகும். கலகொட அத்தே ஞானசார தேரர் மத இனமேலாதிக்கத்தை முதன்மைப் படுத்துகையில் வட்டரக்க விஜித்த தேரர் மனிதநேயத்தையே முதன்மைப் படுத்துகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுபல சேனாவாலும் சில பெளத்த அமைப்புகளாலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக்கூறி வட்டரக்க விஜித்த தேரர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதம் எழுதி பதில் கிடைக்காததால் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் முன்னால் பதாகை ஏந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஞானசாரதேரரும் மாகல்கந்தே சுதந்த தேரரும் சில பிக்குகளும் அங்கு வாகனத்தில் வந்து பொலிஸாரின் மத்தியிலேயே அச்சுறுத்தி விட்டுப் போயிருந்தார்கள்.
பின்னர் வட்டரக்க விஜித்த தேரர் தமது கடமைகளுக்கு இடையூறு செய்ததாகப் பொலிஸார் குற்றஞ்சாட்டி அவரைக் கைது செய்து கோட்டை நீதிமன்றத்தில் நிறுத்தியதால் 11 நாட்கள் கழித்தே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு தான் எந்த குற்றமும் செய்யாமல் அநியாயமாக கைது செய்யப்பட்டு 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததற்காக நஷ்டஈடு கோரும் நிலைக்கு வட்டரக்க விஜித்த தேரர் வந்திருக்கிறார். இவர் அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி மாளிகைக்கு முன் பதாகையை ஏந்திக்கொண்டு உண்ணாவிரதம் இருந்ததும் குற்றம் மாற்று தரப்பினர் வாகனத்தில் வந்து இவர்களை அச்சுறுத்தியதும் குற்றமேயாகும். எனினும் கூட இவரை அச்சுறுத்தியோர் மீது குற்றச்சாட்டும் இல்லை, தண்டனையும் இல்லை. இதில் பாரபட்சம் காணப்படவே செய்கிறது.
தனது உயிருக்கு அச்சுறுத்தலென ஒரு பிக்குவே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கூறியும்கூட அது புறக்கணிக்கப்பட்டிருக்குமாயின் சாதாரண மனிதருக்குரிய பாதுகாப்புக்குரிய உத்தரவாதம் தான் என்ன?
யாப்பில் பெளத்த தர்மத்துக்கும் சாசனத்துக்கும் முன்னுரிமை இருக்கையில் ஒரு பிக்குவே தெருவில் பதாகை ஏந்தி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் நிலை இருக்குமாயின் அத்தகைய முன்னுரிமைகளின் அர்த்தம் தான் என்ன? கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் மாகல் கந்தே சுதந்த தேரருக்கும் வித்தியாசம் காட்டப்பட்டிருக்கிறதே?
திபேத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்குப் பின் காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித்த தேரரும், தம்பர அமில தேரரும், வட்டரக்க விஜித்த தேரரும் புத்தபெருமானின் சத்திய சாட்சியாளர்களாவர். அதற்கு மாறான மியன்மாரின் துஷானா தேரரினதும் அசின் விராது தேரரினதும் வழிவாறுகளே கலகொட அத்தே ஞானசார தேரரும் மாகல் கந்தே சுதந்த தேரரும் அதுரலியே ரதன தேரருமாவார்கள். அண்மையில் அஸ்கிரிய பெளத்த பீட மகாநாயக்க தேரரே முஸ்லிம்களோடு கவனமாக இருங்கள். அவர்களின் கடைகளில் எதையும் வாங்காதீர்கள் எனக் கூறியிருக்கையில் இவர்கள் எம்மாத்திரம், அவரது கருத்தை தலாய்லாமா ஆட்சேபித்திருந்தார்.
இலங்கையில் வாழ்ந்த பிக்குகளில் மாபிட்டிகம புத்தரகித்த தேரரையும் கல்வதுவ சோமராம தேரரையும் விடத் தரம் தாழ்ந்தவர்கள் எவரும் இல்லை.
காரணம் அவர்களே 1959 ஆம் ஆண்டு பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவைக் கொலை செய்தவர்கள். இதற்கு மாறாக மாதுளுவாவே சோபித தேரரைப் போல் சிரேஷ்டரும் எவரும் இல்லை. இவரே 2015 ஆம் ஆண்டு சர்வாதிகாரம், மனித உரிமை மீறல் ஆகியவற்றை எதிர்த்து சமூக நீதிக்காக முன்நின்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர். இவர் காலனித்துவக் கொடியை எரித்த சுமங்கலத் தேரருக்கு நிகரானவர். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் கொடியை ஒரு பிக்கு எரிப்பதாயின் அதற்கு எந்த அளவுக்கு தைரியம் வேண்டும்? அதுபோல்தான் தனிமனித நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரமும் வலிமை பொருந்திய 18 ஆம் ஷரத்தும் 2015 ஆம் ஆண்டு இருக்கையில் அவற்றுக்கு எதிராக இவர் முன்வந்து தலைமை வகித்ததுமாகும்.
அன்று சுமங்கல தேரரின் செய்கை, கரணம் தப்பினால் மரணம் என்றிருந்தது போன்றே பின்பு மாதுளுவாவே சோபித்த தேரரின் செய்கையும் அமைந்திருந்தது. திபேத்திய பெளத்தரின் சுயநிர்ணயத்துக்காகவும் இறைமைக்காகவும் சீனாவையே எதிர்த்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த தலாய்லாமாவை இன்றளவும் உலகம் புகழ்கிறது.
ஒருமுறை டி.பி.ஜாயாவின் நினைவுதின கூட்டத்தில் மாதுளுவாவே சோபித தேரர் பேசுகையில் 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இலங்கைக்கு டொமினியன் சுயாதீனம் வழங்கவும் தயங்கினார்கள். அதற்கு என்ன காரணம்?
தமிழ் தரப்பினர் தமக்குரிய பங்கை உத்தரவாதப்படுத்தாது வழங்கக்கூடாதெனக் கூறியதேயாகும். அப்போது டி.பி.ஜாயா இந்த முக்கிய இக்கட்டான காலகட்டத்தில் அத்தகைய கோரிக்கை சுயாதீனத்துக்கு முட்டுக்கட்டையாகிவிடும். எனவே முதலில் சுயாதீனம் அதன் பிறகே இன ரீதியிலான ஒத்தொருமிப்பு என்றார். அதன் பிறகே சுயாதீனம் கிடைத்தது எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் முஸ்லிம்கள் இல்லாதிருந்தால் இலங்கைக்கு உரியநேரத்தில் சுதந்திரமே கிடைத்திருக்காது என்றும் விளக்கியிருந்தார். இந்த உண்மை மறக்கடிக்கப்படக்கூடாது. முஸ்லிம்களுக்குரிய அதற்கான நன்றிக் கடனை செலுத்துவது போன்றே தம்பர அமில தேரரினதும் வட்டரக்க விஜித்த தேரரினதும் முஸ்லிம்களோடுள்ள நல்லுறவு அமைந்திருக்கிறது.
சிங்களத் தீவிரவாதம் கூடாது. சிங்கள தீவிரவாதத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது. இலங்கை, சிங்களவருக்கும் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாகும். இவர்கள் சமமாக ஆளப்பட வேண்டும். இவர்களுக்குள் பேதங்கள் இருக்கக்கூடாது என்பதே வட்டரக்க விஜித்த தேரரின் கொள்கையாகும். இதற்காகவே இவர் ஜாதிக பலசேனா என்னும் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வருகிறார்.
இலங்கை, சிங்கள பெளத்தருக்கு மட்டுமான நாடாகும். சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமான யாப்பு வேண்டும். சிங்கள பெளத்தருக்கு மட்டுமேயுரிய பாராளுமன்றமே வேண்டும் என்பதே பொதுபல சேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரரின் கொள்கையாகும். எனினும் அரசும் தேசிய ஊடகங்களும் பொதுபலசேனாவுக்கு முக்கியத்துவம் வழங்கி ஜாதிக பலசேனாவைக் கண்டு கொள்வதில்லை என்பதே வட்டரக்க விஜித்த தேரரின் ஆதங்கமாகும். அதற்காகவே அரசையும் ஊடகங்களையும் ஈர்க்க ஜனாதிபதி மாளிகைக்கு முன் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் என நினைக்கிறேன். எனினும்கூட இது தவறான முன்னெடுப்பேயாகும். அதுபோல் பாதுகாப்புத்துறை பார்த்திருக்க ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் கலகொட அத்தே ஞானசார தேரரும் மாகல்கந்தே சுதந்த தேரரும் சில பிக்குகளும் வந்து இவரை எச்சரித்துவிட்டுப் போனதும்கூட தவறான செயற்பாடேயாகும். மொத்தத்தில் பதாகையை ஏந்திக்கொண்டு இருக்கும் இடமாக வட்டரக்க விஜித்த தேரர் அதை ஆக்கியிருக்கவே கூடாது.
பாதுகாப்புத்துறைக்கு முன்னால் வந்து ஞானசார தேரரும் மாகல் கந்தே சுதந்த தேரரும் சில பிக்குகளும் வட்டரக்க விஜித்த தேரரை எச்சரிக்க யார் அவர்களுக்கு தைரியம் கொடுத்தது? அவர்களைக் கண்டிக்காமல் இவரை மட்டும் கண்டிக்கக் காரணம் என்ன? விளக்கமறியலிலும் கூடப் பாரபட்சமா?
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்ததும் குற்றம். சண்டியர்களைப் போல் குழுவாக வந்து பாதுகாப்புத் துறைக்கு முன்னால் ஏசுவது அதைவிடவும் பெருங்குற்றம். இனவாதிகளால் என் உயிர் பறிக்கப்படலாம், எனது உடல் துண்டு துண்டாக வெட்டப்படலாம். எனினும் நான் கொள்கையிலிருந்து மாற மாட்டேன் எனவும் வட்டரக்க விஜித்த தேரர் குறிப்பிட்டிருந்தாரே என்ன அர்த்தம்? அதுபற்றி நீதித்துறை சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு பாரதூரமான விடயமாகும். இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வழக்குத் தொடர ஏற்புடையதல்ல என சட்டமா அதிபர் நீதிமன்றுக்குக் கூறியதால், இவர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டாரே. அப்படியானால் குற்றங்கள் இல்லாமலா இவர் 11 நாட்கள் விளக்கமறியலில் இருந்திருக்கிறார்.
குற்றச்சாட்டுக்கள் உண்மைதான் ஆனால் வழக்குத் தொடர ஏற்புடையதல்ல என்றே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது எனலாம். எனினும், வட்டரக்க விஜித்த தேரர் நான் குற்றமெதுவும் செய்யாமலேயே கைதாகி 11 நாட்கள் விளக்கமறியலில் இருந்தேன். இதற்காக நஷ்டஈட்டைப் பெற சட்டத்தரணிகளின் ஆலோசனைகளைக் கோரியுள்ளேன். பெளத்த தீவிரவாதத்துக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்றார்.
ஆக, பிக்குகள் புத்தபெருமானின் உண்மைப் போதனைகளை வலியுறுத்துவோராகவும் அதை புத்தரின் பெயராலேயே எதிர்ப்போராகவும் பிரிந்து நிற்பது தெரிகிறது. முதல் தரப்பினர் மனங்களையும் இரண்டாம் தரப்பினர் இடங்களையுமே குறியாகக் கொண்டிருக்கிறார்கள். உள்ளமே உலகம் என முதற் தரப்பினர் குறிப்பிடுகையில் நிலமே உள்ளம் என மறுதரப்பினர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
பெளத்த மதம் நிலைக்க வேண்டுமெனில் அதைக்காக்க ஒரு இனமும் ஒரு மொழியும் முழுமையான ஒரு நாடும் அவசியம் என்றே அடம்பிடிக்கிறார்கள். அதனாலேயே பெளத்த மத சாசன சிங்கள மொழி முன்னுரிமைகளைக் கோருகிறார்கள்.
*பண்டைய காலத்தில் பல்வேறு படையெடுப்புகளும் நிகழ்ந்தனவே. அப்போது இவை யாவும் அழிந்திருந்தால் இப்போது எஞ்சியிருக்குமா?
*ஏறத்தாழ 450 ஆண்டுகள் அந்நிய விதேசிய ஆட்சியாளர் விதேசிய மொழிகளில் இலங்கையின் கரையோரங்களை ஆட்சி புரிந்தனரே இவையாவும் அழிந்து போயினவா?
* இப்போது பெளத்த சாசன முன்னுரிமைகள் யாப்பில் இருக்கையில் முதன்மொழி சிங்களமாக இருக்கையில் இவை யாவும் அழியுமா?
* முன்பு தலதா மாளிகை தாக்கப்படுகையிலும் அரந்தலாவையில் 200 பிக்குகள் கொல்லப்படுகையிலும் ஞானசார தேரரும் மாகல்கந்தே சுதந்த தேரரும் எங்கிருந்தார்கள்?
* பாதுகாப்புத்துறையில் 100 வீதம் சிங்களவரே இருக்கையில் இவையாவும் அழிந்துவிடுமா?
* ஜனாதிபதி பிரதமர் உட்பட கெபினட் அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களும் எதிர்க்கட்சியினரும் 85 வீதமாக இருக்கையில் இவை யாவும் அழிந்துவிடுமா?
எனவே, சிறுபான்மைகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கினால் பெளத்த சிங்கள மக்களின் சுயநிர்ணய உரிமையும் இறைமையும் இருப்பும் வரலாறும் வாழ்வாதாரங்களும் கலை கலாசாரமும் பிரதேச ஒருங்கிணைப்பும் பாதிக்கும் என்பது சுத்த அபத்தமாகும்.
எனவே, “சகலவித ஜீவராசிகளும் சொகுசாக வாழுமாக!” என்னும் புத்தபிரானின் அடிப்படைக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் பாக்கியம் இலங்கைக்கும் வாய்த்திருக்கிறது என்னும் உண்மையை பிக்கு பீடங்களும் ஏனைய பிக்குகளும் ஆட்சியாளரும் உணர்ந்து கொண்டு ஆவனசெய்ய வேண்டும்.
மனித உரிமை பற்றி ஐ.நா. சபை கூறுவதற்கு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே புத்தபிரான் சப்பேசத்தாபவன்து (சகல வித ஜீவராசிகளும் சொகுசாக வாழுமாக) எனக்கூறியிருக்கிறார். ஜீவராசி என்றால் மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் என்றே கருத்தாகும். மனிதனை இனம், மொழி, குலம், பிரதேசம் என்றெல்லாம் புத்தபிரான் பிரிக்கவில்லை. எனினும் கலகொட அத்தே ஞானசார தேரரும், மாகல்கந்தே சுதந்த தேரரும், அதுரலியே ரதன தேரரும் மனிதன் எனவும் பாராது முஸ்லிம்களையும் தமிழரையும் கழிக்கிறார்கள்.
புத்தபிரான் இலங்கையரா? சிங்கள மொழி பேசியவரா? இலங்கைக்கு மட்டுமே சொந்தமானவரா? ஏனைய மொழிகளைப் பேசுவோருக்கு சொந்தமற்றவரா? பிக்குகள் எனக் கூறிக்கொண்டு அவரது மானுடநேய சிந்தனையைக் கட்டுக்குள் வைத்திருக்க யாருக்கும் உரிமை இல்லை.
புத்தரைத் தனி நாட்டுக்குள்ளும் பெருந்தேசியத்துக்குள்ளும் பேரினவாதத்துக்குள்ளும் செருகியதால் தான் சிறுபான்மைகள் அடிப்படை உரிமைகளை இழந்து இம்சிக்கப்படுகிறார்கள். அசோக சக்கரவர்த்தி இந்தியாவிலிருந்து தனது மகன் மகிந்த மூலமும் மகள் சங்கமித்தை மூலமும் அனுப்பியிருந்த பெளத்த மத தத்துவம் இதுவல்ல. தமிழரை யுத்தத்திலும் சமாதானத்திலும் தோற்கடித்து துட்டகைமுனு மன்னனின் சிலைக்கு மாலை சூடி வணங்கும் நிலைப்பாடே காணப்படுகிறது. பொதுபல சேனாவும் சிங்ஹலேயும் மெளனித்து விட்டன. பொதுத் தேர்தலின் முடிவுக்குப் பின்பே அவை கலைக்கப்படுமாம்.-Vidivelli
- ஏ.ஜே.எம்.நிழாம்