கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவிலிருந்து உலகின் பல நாடுகளுக்கு வியாபித்துள்ளமை சர்வதேசத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இலங்கையிலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான சீனப் பெண்மணியொருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் கடந்த 19 ஆம் திகதி வருகை தந்த 43 வயதான சீனப் பெண்மணியே அவராவார். அங்கொடை தொற்று நோய்த்தடுப்பு வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட இரத்தப் பரிசோதனை மற்றும் உயிரியல் பரிசோதனைகளில் இது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபே பிராந்தியத்திலிருந்து ஒரு குழுவினருடன் உல்லாச பயணியாக வருகைதந்த குறிப்பிட்ட பெண்மணி அவருடன் வருகை தந்தவர்கள் நாடுதிரும்பிய நிலையில் அவர் காய்ச்சல் காரணமாக ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளியான சீனப் பெண்மணி இனங்காணப்பட்டதன் பின்பு அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பியூலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்துக்குள் செல்வதற்கு பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா வைரஸிலிருந்தும் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கான முன் ஏற்பாடுகளுக்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினால் 22 பேர் கொண்ட தேசிய செயற்பாட்டுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. வெளியிடங்களிலிருந்து கொழும்புக்கு வருபவர்கள் ‘மாஸ்க்’ அணிந்துகொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள சீனப் பெண்மணியுடன் இலங்கை வந்த உல்லாச பயண குழுவினர் நாட்டின் பல பாகங்களுக்கு விஜயம் செய்துள்ளனர். அவர்கள் சென்ற இடங்கள், தங்கியிருந்த ஹோட்டல்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் அவ் இடங்களில் விஷேட பரிசோதனைகளை நடாத்தியுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரசும், சுகாதார அமைச்சும் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாகும். அதேநேரம் பொதுமக்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.
கடந்த ஓரிரு நாட்களில் 204 இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். நேற்றும் இன்றும் மேலும் ஒரு தொகுதி மாணவர்கள் அழைத்துவரப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக நாடெங்கும் 11 வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க அறிக்கை விட்டுள்ளார்.
ஐ.டி.எச். இற்கு மேலதிகமாக ராகம, கம்பஹா, கண்டி, நீர்கொழும்பு, கராபிட்டிய, அநுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் பதுளை வைத்தியசாலைகளே இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஏ.எப்.பி. செய்திச் சேவை வழங்கியுள்ள தகவல்களின்படி அவுஸ்திரேலியா 5, தென்கொரியா 4, காம்போடியா 1, இலங்கை 1, ஜப்பான் 4, தாய்வான் 5, மலேசியா 4,, தாய்லாந்து 8, நேபாளம் 1, வியட்நாம் 2, கனடா 5, சிங்கப்பூர் 5, அமெரிக்கா 5, பிரான்ஸ் 3, ஜெர்மனி 1 எனும் எண்ணிக்கையிலானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் நேற்று வரை 106 பேர் பலியாகியுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தலைவர் உட்பட விஷேட குழுவொன்று நிலைமைகளை ஆராய்வதற்காக சீனா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சீன மக்களும், சீன நாடும், வைரஸ் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள ஏனைய நாடுகளும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டி நாம் பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்ற அதேநேரம் இவ் வைரஸ் குறித்து விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அரசாங்கம் என்னதான் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பின்றி இதில் வெற்றியடைய முடியாது. எனவேதான் மக்கள் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.-Vidivelli