- எஸ்.றிபான்
இலங்கையில் மிக மோசமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் இருக்கின்ற நெருக்கடிக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளன. இதனிடையே மஹிந்தராஜபக் ஷ பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்த வேண்டுமென்ற திட்டத்திiனைக் கொண்டுள்ளார். இத்திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவாக இருந்து கொண்டிருக்கின்றார். இதே வேளை, ஐக்கிய தேசிய முன்னணியினர் முடிந்தால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு சவால்விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் சவால்களை அவதானிக்கின்ற போது மைத்திரி – மஹிந்த அணியினருக்கு ஜனாதிபதித் தேர்தலை பொதுத் தேர்தலுக்கு முன்னர் எதிர் கொள்வதில் தயக்கமும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு பொதுத் தேர்தலை எதிர் கொள்வதில் தயக்கமும் இருக்கின்றமையை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. நேர்மையாக பார்க்கின்ற போது முதலில் ஜனாதிபதித் தேர்தலும், பின்னர் பொதுத் தேர்தலும் நடைபெற வேண்டும். இவ்வாறு இவ்விரு அரசியல் கட்சிகளும் தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தங்களை பொதுத் தேர்தலுக்கு தயார்படுத்திக் கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றன.
இழக்கப்பட்ட அடையாளம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி இறக்கம் செய்துவிட்டு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக் ஷவை பிரதமராக நியமனம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. அந்த வகையில் கண்டியில் (24.11.2018) மாபெரும் கூட்டமொன்றினை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ‘ஜனநாயகத்திற்கான நீதியின் மக்கள் குரல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டு மிகவும் ஆக்ரோஷமாக உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரைப் போன்றதொரு தோற்றப்பாட்டைக் வெளிக்காட்டும் வகையிலேயே உடை அணிந்திருந்தார். அவர் பச்சை நிற ரிசேர்ட் அணிந்திருந்தார். ரவூப் ஹக்கீமின் இந்த உடைத்தோற்றம் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. ரவூப் ஹக்கீம் பொதுவாக பொதுக் கூட்டங்களின் போது முஸ்லிம் காங்கிரஸின் அடையாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பச்சையும், மஞ்சளும் கொண்ட ஆடைகளையும், தொப்பியையும் அணிவது வழக்கமாகும். இந்த வழக்கத்தை தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களில் அவர் அன்று கடைப்பிடிக்கவில்லை.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுவதில் பிரச்சினையில்லை. இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் எதிரும், புதிருமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதனை காணக் கூடியதாக இருக்கின்றது. ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கும் அவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்பதனால் கண்டியில் மாத்திரமன்றி ஏனைய இடங்களிலும் தமது கட்சியின் தனித்துவ அடையாளத்தை இழக்காதவராக பங்கு கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில் அவர் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியாகவே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக இருந்தாலும், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் மட்டுமே இலகுவாக வெற்றி கொள்ள முடியும். இதன் காரணமாக அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ளவே விரும்புவார். இதனால், ஐக்கிய தேசிய கட்சியின் மேடைகளில் தாமும் ஐக்கிய தேசிய கட்சிக்காரர் போன்று தோற்றமளித்து தமக்குரிய செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு இன்றைய அரசியல் நெருக்கடியை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் மஹிந்தராஜபக் ஷ வுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் மஹிந்தராஜபக் ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவில்லை என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது. ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடக்குமாயின் மஹிந்தராஜபக் ஷ வுடன் இணைந்தே போட்டியிட வேண்டியேற்படும். அவ்வாறு போட்டியிடும் போது முஸ்லிம்களின் பெரும் தொகை வாக்குகளை இழக்க வேண்டியேற்படும். இதனால், சில வேளை தோல்வியைக் கூட சந்திக்க நேரிடும். ஆதலால், பொதுத் தேர்தல் நடைபெறும் வரை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதே பொருத்தமான நிலைப்பாடாகும். தேர்தல் முடிந்ததன் பின்னர் ஆட்சி அமைப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் உள்ளவருக்கு ஆதரவு வழங்குவதே ரவூப் ஹக்கீமின் திட்டமாகும்.
தமது இத்திட்டம் வெற்றி கொள்ளப்பட வேண்டுமாயின் மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும். மக்கள் காங்கிரஸ் மஹிந்தராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்கினால் அந்தக் கவர்ச்சியில் மஹிந்தராஜபக் ஷவுக்கு இன்னும் ஆதரவு கிடைத்திருக்கும்.
இதே வேளை, றிசாட் பதியுதீன் ஐக்கிய தேசிய கட்சியினால் கொழும்பிலும், கண்டியிலும் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டங்களில் பங்கு கொள்ளவில்லை. ஆயினும், இவர் கூட பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே போட்டியிட வேண்டும். அப்போதுதான் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும். இதனால், றிசாட் பதியுதீனும் பொதுத் தேர்தலின் பின்னர்தான் யாருடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்வார்.
அணிக்காக தடுமாறும் நிலை
ரவூப் ஹக்கீம், றிசாட் பதியூதீன் ஆகியோர்களின் நிலைப்பாட்டிற்கு மாற்றமான முடிவில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ஆகியோர்கள் உள்ளார்கள். ஹிஸ்புல்லாஹ் எக்காரணம் கொண்டு முஸ்லிம் கட்சிகளில் இணைந்து போட்டியிடமாட்டார். பேரினவாத கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதே அவரது திட்டமாகும். அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இப்போதைக்கு இணையமாட்டார்.
2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் மஹிந்தராஜபக் ஷவுக்கு ஆதரவாகச் செயற்பட்டார். பொதுத் தேர்தலில் கூட மஹிந்தராஜபக் ஷ அணியுடனேயே செயற்பட்டார். 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறுதொகை வாக்குகளினால் ஹிஸ்புல்லாஹ் தோல்வி அடைந்தார். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து அமைச்சர் பதவியையும் வழங்கினார்.
அதாவுல்லாஹ்வை எடுத்துக் கொண்டால் அவர் கூட மஹிந்தராஜபக் ஷவுடன் இணைந்து செயற்பட்டார். இதனால், பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தலில் தோல்வியடைந்த அதாவுல்லாஹ் சுமார் ஒரு வருடம் அரசியல் பேசாமலேயே இருந்தார். இதன் பின்னர் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
தற்போது மஹிந்தராஜபக் ஷ சுதந்திரக் கட்சியை விட்டுவிட்டு ஐக்கிய பொது முன்னணியுடன் (மொட்டு) இணைந்துள்ளார். இதனால், பொதுத் தேர்தலொன்றுக்கு அறிவிக்கப்பட்டால் எந்த அணியுடன் இணைந்து கொள்வது என்ற தெரிவுப் பிரச்சினையில் அதாவுல்லாஹ்வும், ஹிஸ்புல்லாஹ்வும் உள்ளார்கள். சில வேளை, (வாய்ப்புக்கள் இல்லாமலில்லை) மஹிந்தராஜபக் ஷவும் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுவிட்டால், அதாவுல்லாஹ் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து தேர்தலை எதிர் கொள்வதா அல்லது மஹிந்தராஜபக் ஷவுடன் இணைவதா என்ற நிலைக்குள் தள்ளப்பட்டு விடுவார்.
புதிய நிலைப்பாடு
இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரிஹஸன்அலி, பசீர் சேகுதாவூத் மற்றும் இவர்களுடன் உள்ளவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள். 2015ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மஹிந்தராஜபக் ஷவை ஆதரிப்பதற்கு முடிவு செய்த போது ஹஸன்அலி அதனை மிகவும் தீவிரமாக எதிர்த்தார். இப்போது ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதற்கு பிரதான காரணம் ரவூப் ஹக்கீம் ரணிலுடன் இருப்பதாகும். அதாவது இவர்கள் ரவூப் ஹக்கீமின் முகாமுக்கு எதிரான முகாமை தெரிவு செய்யும் நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள்.
முஸ்லிம்களிடையே பல கட்சிகளும், தலைவர்களும் இருந்தாலும் அவர்கள் பேரினவாதக் கட்சிகளின் உறுப்பினர்கள் போலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பேரினவாதக் கட்சிகளின் சுண்டு விரலுக்கே அசைந்து கொண்டிருக்கின்றார்கள். இதனால்தான் முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் சமூகத்தின் தேவைகளை அடைந்து கொள்ள முடியாதுள்ளது. அமைச்சர் பதவிகளுக்கும், வேறு பதவிகளுக்குமே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
போராட்டம்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற போராட்டத்தை முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்கள். இன்னுமொரு பிரிவினர் இதற்கு மாற்றமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இரு தரப்பு முஸ்லிம் தலைவர்களும் ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகத்திற்காக எந்தவொரு போராட்டத்தையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளவில்லை.
மஹிந்தராஜபக் ஷவின் ஆட்சியின் போது பேருவளை, தர்காநகர் பௌத்த இனவாதிகளினால் அரசாங்கத்தின் அனுசரணையுடன் தாக்கப்பட்ட போதும், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதும், முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்ட போதும் ஆத்திரப்படாத முஸ்லிம் அரசியல்வாதிகள், போராட்டங்களை நடாத்தாதவர்கள், வில்பத்து விவகாரத்தில் மூக்கை நுைழக்காதவர்கள் போராட்டங்களையும், வழக்குகளையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலமாக பேரினவாதக் கட்சிகளின் முகவர்களாகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
மஹிந்தராஜபக் ஷவின் ஆட்சி முஸ்லிம்களுக்கு எதிரானதென்று மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் கொண்டு வருவதில் முஸ்லிம்கள் பெரும் பங்களிப்புச் செய்தார்கள். ஆனால், இவர்களின் ஆட்சியிலும் கிந்தோட்ட, அம்பாறை, கண்டி, திகன உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். தமிழர்களின் ஒரு தொகை காணி மீள ஒப்படைக்கப்பட்ட போதிலும், முஸ்லிம்களின் காணிகள் மீளவும் ஒப்படைக்கப்படவில்லை.
இன்று ஜனநாயகத்தை மீட்பதற்காக போராடிக் கொண்டிருப்பவர்கள், மேற்படி இடங்களில் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் போராட்டங்களை நடத்தவில்லை. மாறாக ஆட்சியாளர்களை பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள்.
-Vidivelli