சக்தி வலு உற்பத்தியில் இலங்கைக்கு உதவ கட்டார் அரசாங்கம் இணக்கம்
ஜனாதிபதி - கட்டார் சக்தி வலு அமைச்சருக்கிடையிலான சந்திப்பில் உறுதியளிப்பு
சக்தி வலு உற்பத்திக்கு நம்பகமானதொரு வலையமைப்பை நிறுவுவதற்கு இலங்கைக்கு உதவ கட்டார் அரசு முன்வந்துள்ளது. இது சக்தி வலுத்துறையில் உயர்மட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பை இந்நோக்கத்திற்காக கொண்டு வரும்.
கட்டார் நாட்டின் சக்தி வலு விவகாரத்துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை சந்தித்தபோது இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது:
தேர்தலில் வெற்றி பெற்றுக் கொண்டமைக்கு ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த கட்டார் அமைச்சர், தனது நாட்டின் முன்மொழிவை அமுல்படுத்துவது தொடர்பான விடயங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்கான இலங்கை பிரதிநிதியை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, சக்தி வலு உற்பத்தியில் கட்டாரின் ஒத்துழைப்பைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தி வலு மூலங்களிலிருந்து நாட்டின் 80 சதவீத சக்தி வலு தேவைகளை பூர்த்தி செய்வதே தனது திட்டமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி, தனது செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவை தனது பிரதிநிதியாக நியமித்தார். மேலதிக கலந்துரையாடல்களுக்காக ஜனாதிபதியின் செயலாளர் டோஹாவுக்கு அழைக்கப்படவுள்ளார். இலங்கையின் சக்தி வலு திட்டம் குறித்து இவ்விஜயத்தின்போது விளக்கப்படும்.
பாகிஸ்தான், போலந்து உள்ளிட்ட பல நாடுகளில் இதுபோன்ற முயற்சிகளை தனது நாடு வெற்றிகரமாக நிறுவியுள்ளது என்று கட்டார் அமைச்சர் குறிப்பிட்டார்.
‘சக்தி வலு உற்பத்திக்கு அப்பால் கட்டார் அரசுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நாம் விரும்புகிறோம். எமது நாட்டின் தேயிலை, மரக்கறி மற்றும் பழங்களுக்கான சந்தைவாய்ப்பையும் எதிர்பார்க்கின்றோம். இதுபோன்ற உற்பத்திப்பொருட்களை ஏனைய நாடுகளுக்கும் வழங்குவதற்கான விரிவான ஆற்றல் எங்களிடம் உள்ளது’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த கட்டார் அமைச்சர், இலங்கைக்கான தனது இந்த விஜயம் இத்தகைய மேம்பட்ட ஒத்துழைப்பின் முதற் படியாக இருக்குமென்று குறிப்பிட்டார்.-Vidivelli