இலங்கையிலும் கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்
உலகின் 13 நாடுகளில் இதுவரை பரவியுள்ள ‘கொரோனா’ வைரஸ் இலங்கைக்குள்ளும் பரவும் அச்சுறுத்தலுடன் கூடிய சூழலுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் உலகநாடுகள் பலவற்றிலும் இந்த வைரஸ் தொற்றுடன் கூடியவர்கள் உள்நுழைவதைக் கண்டறிந்து தடுக்கப் பயன்படுத்தப்படும் டேர்மல் ஸ்கேனிங் முறைமை ஊடாக, அவ்வைரஸ் தொற்றுக்குள்ளானோரை நூற்றுக்கு நூறு வீதம் கண்டறிவது சாத்தியமற்றதெனவும், கொரோனா வைரஸ் சவால்களுக்கு முகம்கொடுக்க இலங்கை தயார் நிலையிலேயே உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இவ்வாறான பின்னணியில் இலங்கை மக்கள், இந்த கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவை இல்லையெனத் தெரிவித்த, சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் பிரதான தொற்றுநோய் ஆய்வு வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர, வைரஸ் தாக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாகக் கையாளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாதபோதும், அந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களென சந்தேகிக்கப்படும் நால்வர் நேற்று முன்தினம் முதல், ஐ.டி.எச். காய்ச்சல் வைத்தியசாலையென பரவலாக அறியப்படும் அங்கொடை தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். குறித்த வைத்தியசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விஷேட சிகிச்சையறைகளில் அவர்கள் சிகிச்சைபெற்று வருவதாகவும், அவர்கள் சுவாசப் பிரச்சினையுடன் கூடிய காய்ச்சல் காரணமாக சிகிச்சைகளுக்காக வந்தவர்கள் எனவும், இதுவரை அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்படவில்லை எனவும் குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசித்த அத்தநாயக்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கம் முதலில் அடையாளம் காணப்பட்ட சீனாவின் வுஹான் மாகாணத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் நாடுதிரும்பிய இலங்கை மாணவர் ஒருவர், மற்றொரு இலங்கை பெண், இரு சீன பெண்களே இவ்வாறு குறித்த வைத்தியசாலையில் சிறப்பு கண்காணிப்பில் சிகிச்சைபெற்று வருபவர்களென வைத்தியர் அசித்த அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த நால்வரின் இரத்த மாதிரிகளும் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த இரத்த மாதிரி பரிசோதனைகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கொடை தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்து குறித்த இரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டதாகவும், அதுகுறித்த ஆரம்பகட்ட பரிசோதனைகளில் குறித்த நான்கு இரத்த மாதிரிகளுக்கும் உரித்தானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என்பது தெரியவந்ததாகவும் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்தின் பணிப்பாளர், வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்தார். எவ்வாறாயினும் அதுகுறித்து தொடர்ந்தும் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்வாறான வைரஸ் தொற்று குறித்து இரத்த மாதிரி பரிசோதனைகள் ஊடாக உறுதிசெய்யும் பிரதான நிறுவனமாக பொரளை மருத்துவ பரிசோதனை நிலையம் விளங்கும் நிலையில், அங்கு நேற்று நண்பகல் வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இரத்த மாதிரிகளை மையப்படுத்தி நாட்டில் இதுவரை கொரோனா வைரஸினால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதையும் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் இலங்கையில் ஏற்படுத்தவல்ல தாக்கத்தை குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட உரிய தரப்பினர் முன்னெடுத்துள்ளதாகவும், பொதுமக்கள் குறித்த தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உரிய பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளுமாறும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முதன் முறையாக சீனாவின் ஹுபேய் மாகாணத்துக்கு உட்பட்ட வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா எனும் வர்க்கத்தை சேர்ந்த இந்த வைரஸானது சுவாச நோய் சார்ந்த வைரஸென உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
இந்த வைரஸ் முதலில் பரவிய சீனாவில் நேற்று நண்பகல் வரை 56 பேர் உயிரிழந்திருந்தனர். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 2000 பேர் உலகெங்கும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1975 பேர் சீனாவில் வசிப்பவர்களாவர். வைரஸ் வேகமாகப் பரவுவதைத் தடுக்க சீனாவின் சில நகரங்களில் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டதால், சுமார் 4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் அச்சத்தினால் சீனாவின் 13 நகரங்களுக்கான சுற்றுலா பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நகரங்களுக்கு செல்லவோ அங்கிருந்து வெளியேறவோ வேண்டாமென அதிகாரிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகம் காணப்படும் ஹூபெய் மாகாணத்தில் சுமார் 36 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.
வைரஸ் தாக்கம் முதலில் அடையாளங்காணப்பட்ட சீனாவின் வுஹான் நகரில் 11 மில்லியன் பேர் வசித்து வருவதுடன், அங்கு ஆயிரம் கட்டில்களைக் கொண்ட வைத்தியசாலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நடவடிக்கைகள் ஆறு நாட்களில் நிறைவடையவுள்ளதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவை இவ்வாறிருக்க, இந்த கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்று நோய் ஆய்வாளர் வைத்தியர் சுதத் சமரவீர பின்வருமாறு தெளிவுபடுத்தினார்.
‘ஏற்கனவே கொரோனா வைரஸ் ரகத்தில் இரு வைரஸ் தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிக காய்ச்சல், தடிமன், சுவாசப் பிரச்சினை போன்றன நோய் அறிகுறிகளாகத் தென்படும்.
உண்மையில் இந்த வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கைக்குள்ள அச்சுறுத்தலானது, இந்த தொற்றுநோய் பரவும் ஒரு நாட்டிலிருந்து அதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கைக்கு வருவதாகும். எனவே அவ்வச்சுறுத்தலைக் குறைக்க தற்போதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி விமானப் பயனிகளை விமானங்களுக்குள்ளேயே நாம் தெளிவுபடுத்துகின்றோம். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான அறிகுறிகள் உள்ளவர்கள் எவரேனும் இருப்பின் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள விஷேட பிரிவில் ஆஜராகுமாறு நாம் அறிவுறுத்துகின்றோம். அதற்கு மேலதிகமாக டேர்மல் ஸ்கேனர் ஊடாக பயணிகளை பரிசோதனை செய்கின்றோம். அவ்வாறு சோதனையின்போது வைரஸ் தொற்றுள்ளவர்கள் தொடர்பில் தகவல் வெளிப்பட்டால் உடனடியாக அவர்களை ஐ.டி.எச். தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலைக்கு பாதுகாப்பாக அழைத்துசெல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இன்னொரு விடயத்தை கூறவேண்டும். இந்த வைரஸ் தொற்று குறித்து வைத்தியர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் எவரேனும் சிகிச்சைக்கு வந்தால், அந்த நோயாளியின் அண்மைக்கால பயண விபரங்கள் குறித்தும் வைத்தியர்கள் அவதானம் செலுத்த வேண்டும். தற்போதைய ஆய்வுகளின் பிரகாரம், இந்த வைரஸ் உடலில் செயற்பட முடியுமான காலம் இரு வாரங்களெனக் கணக்கிடப்பட்டுள்ளது. அப்படியானால் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்த இரு வாரங்களில்கூட இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன்கூடிய நோய் நிலைமைகளுக்கு ஆளாகலாம். எனவே, அதுகுறித்தும் வைத்தியர்களும், பொதுமக்களும் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்’ என்றார்.
இதனிடையே இலங்கையில் பெருந்தொகையான சீன நாட்டவர்கள் வசிக்கும் நிலையில், நேற்றுக் கொண்டாடப்படவிருந்த சீனாவின் லூனார் எனப்படும் புதுவருடக் கொண்டாட்டங்களை மையப்படுத்தி அவர்களில் பலர் சீனா சென்றிருந்தனர். எனினும் அங்கு அக்கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் அவ்வாறு சீனா சென்றவர்கள் மீள இலங்கைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், கொரோனா வைரஸும் இலங்கைக்குள் ஊடுருவுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிக்கையில்,
‘ இந்த வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரு இடங்களில் டேர்மல் ஸ்கேனிங் செய்யப்படுகின்றன. இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சலுடன் கூடிய அறிகுறியுடன் ஒருவர் நாட்டுக்குள் வந்தால் அங்கு அடையாளம் காணமுடியும்.
எனினும், இதனை நான் நூற்றுக்கு நூறு வீதம் வெற்றிகரமான நடவடிக்கையெனக் கூறமாட்டேன். ஏனெனில், இந்த வைரஸ் தொற்று ஒருவரின் உடலில் செயற்பட அல்லது தாக்கத்தை வெளிப்படுத்த இரு வாரங்கள் வரை செல்லும். எனவே அவ்வாறான பின்னணியில் காய்ச்சல் இல்லாமல் ஒருவர் அந்த தொற்றுடன் வந்தால், அவர் நாட்டுக்குள் தடையின்றி வருவதற்கான வாய்ப்புள்ளது. அவர் வந்த பின்னர் வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகலாம்.
அவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்கவும் தயார்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன. ஐ.டி.எச். தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் அவ்வாறான நிலைமைகளுக்கு முகம்கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய ஊழியர்கள், சேவையாளர்களுக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றார்.
இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடை முறைகள் தொடர்பிலும் சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், விஷேடமாக சன நெரிசலுள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பதுடன், ஏனையோரும் தேவையின்றி அவ்வறான இடங்களில் நடமாடுவதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், காய்ச்சல், தடிமன் நோய்களால் பாதிக்கப்பட்டோர் அருகிலிருப்பதை தவிர்த்தல், இருமும் போது கைக்குட்டை அல்லது டிஸூ கொண்டு முகத்தை மூடிக்கொள்ளுதல், அவ்வாறு டிஸூ பயன்படுத்திய பின்னர் அதனை உரிய முறையில் அகற்றுதல், கைகளை சவர்க்காரமிட்டு சுத்தம் செய்துகொள்ளுதல், அடிக்கடி மூக்கு, முகத்தை ஸ்பரிசம் செய்வதை தவிர்த்தல் போன்ற பாதுகாப்பு வழி முறைகளைக் கையாளுமாறு சுகாதார அமைச்சின் ஊடாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்