2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளை அரசாங்கம் பொறுப்பேற்று மேற்கொள்வதற்கு பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ தீர்மானித்துள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரதமர் ஹஜ் குழுவினருடன் நடாத்திய கலந்துரையாடலின் போதே இந்த இறுதித்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஹஜ் முகவர்களில் பலர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதையும் ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து கூடுதலான பணத்தை அறவிடுவதையும் கருத்திற்கொண்டு இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கருதி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஹஜ் முகவர்கள் சிலரின் ஏமாற்று நடவடிக்கைகள் காரணமாக அநேக ஹஜ் யாத்திரிகர்கள் பல அசெளகரியங்களுக்குட்பட்டதாலும் மற்றும் சில ஹஜ் யாத்திரிகர்கள் உரிய கட்டணம் செலுத்தியும் கடமையை நிறைவேற்ற முடியாமல் போனதையும் கவனத்திற் கொண்டு பிரதமரால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள் வருடாந்தம் பயணிக்கிறார்கள். இவர்கள் அரசாங்கத்தின் ஏற்பாட்டிலேயே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதே போன்றே மலேஷியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் அரசாங்கத்தினூடாகவே ஹஜ் யாத்திரிகர்களின் பயணங்கள் இடம்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மகிந்த ராஜபக் ஷ ஏன் சில ஆயிரம் ஹஜ் யாத்திரிகர்களைக் கையாள்வதற்கு இலங்கையில் முகவர்கள் தேவைப்படுகின்றனர் என வினா எழுப்பியதுடன் முகவர்களை இச்சேவையிலிருந்து விடுவித்து அரசாங்கமே முன்னெடுக்க வேண்டும் எனவும் ஹஜ் குழுவே ஹஜ் ஏற்பாடுகளைக் கையெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பில் ஹஜ் குழு உறுப்பினரும் முன்னாள் வக்பு சபை உறுப்பினருமான அஹ்கம் உவைஸ் விடிவெள்ளிக்குக் கருத்து தெரிவிக்கையில், 2020 ஆம் ஆண்டு ஹஜ் கட்டணமாக ஐந்து இலட்சம் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரிகர்கள் ஹரம் ஷரீபிலிருந்து ஆகக் கூடியது 300 மீற்றர்களுக்குட்பட்ட பகுதியில் 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள். மினாவில் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களக்கு அதிக வசதியான “பீ” தரத்திலான கூடாரங்கள் ஏற்பாடு செய்யப்படும். மினாவிலிருந்து ஷைத்தானுக்கு கல் எறிய செல்வதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு சவூதி ஹஜ் அமைச்சு மின்சார வாகனம் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளது.
சவூதி விமான சேவையைப் பெற்றுக் கொள்வதற்கும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு இலங்கை உணவு வழங்குவதற்கு இங்கிருந்து சமையற்காரர்கள் மற்றும் வழிகாட்டுவதற்காக மெளலவிமார்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இலங்கை அரசாங்கம் இவ்வருடம் முதல் ஹஜ் ஏற்பாடுகளைக் கையேற்றுள்ளதாக சவூதி ஹஜ் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த அரசாங்கத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
ஜித்தா விமான நிலையத்தில் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக ஹஜ் பிரிவு ஒன்றினை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிழக்கு மாகாண மக்களின் நலன் கருதி மத்தள விமான நிலையத்திலும் ஹஜ் பிரிவொன்று நிறுவப்படும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து ஹஜ் குழுவினால் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும். விரைவில் சகல அறிவுறுத்தல்களும் ஹஜ் கடமைக்காக தங்களை பதிவு செய்துள்ளவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.
நேற்று முன்தினம் பிரதமருடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் மற்றும் உறுப்பினர்களான அஹ்கம் உவைஸ், அப்துல் சத்தார் ஆகியோர் கலந்து கொண்டனர்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்