ஒரு சில அடிப்படைவாதிகளினால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் அனர்த்தங்களையடுத்து இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் ஒரு சில இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் முழு முஸ்லிம் சமூகத்தினரும் சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படுகிறார்கள்.
இஸ்லாமியர்களாக தங்களை அடையாளப்படுத்தி ஆடை அணிந்து செல்லும் முஸ்லிம்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் புறக்கணிக்கப்படுவதை பல்வேறு பகுதிகளில் காணக் கூடியதாக உள்ளது. தங்களது கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள அரச அலுவலகங்களுக்குச் செல்லும் முஸ்லிம்கள் சில இடங்களில் அரச அதிகாரிகளினால் புறக்கணிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் ஏனைய பரீட்சைகளின்போது பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்களாலும் பரீட்சைத் திணைக்கள உயர் அதிகாரிகளாலும் பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதச் செல்லும் முஸ்லிம் பரீட்சார்த்திகள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
2019 டிசம்பர் க.பொ.த. (சா/த) பரீட்சையின் போது சம்பவங்கள்
கடந்த வருடம் டிசம்பர் 2 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமான முதலாவது தினம் கெக்கிராவ – மடாட்டுகமயில் பாடசாலை சீருடையுடன் பர்தா அணிந்து பரீட்சை எழுதச் சென்ற மாணவிகள் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியினால் பர்தாவைக் களைந்துவிட்டு பரீட்சை எழுதுவதற்கு சமுகமளிக்குமாறு திருப்பியனுப்பப்பட்டனர்.
இச்சம்பவம் கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட மடாட்டுகம ஜாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அன்றைய தினம் பரீட்சை எழுதுவதற்காக பாடசாலை சீருடையில் பர்தா அணிந்து சென்ற சுமார் 80 பரீட்சார்த்திகள் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியினால் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் தங்களது பர்தாவை களைந்து விட்டு பரீட்சை மண்டபத்துக்கு சென்றபோதே பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் தங்கள் முந்தானையினால் தலையை மறைத்து பரீட்சை எழுதினார்கள்.
இச்சம்பவத்தை அன்று இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்தது. இவ்வாறான சம்பவங்கள் இன முரண்பாடுகள் அதிகரிப்பதற்கு காரணமாய் அமையும் எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது. இது பிழையான நடைமுறையாகும் என அச்சங்கத்தின் தலைவர் பிரியந்த பர்ணாந்து தெரிவித்திருந்தார். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்துமாறு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு முறைப்பாடும் செய்திருந்தார்.
கொழும்பிலும் சம்பவம்
கொழும்பிலும் பரீட்சை நிலையமொன்றில் பர்தா அணிந்து பரீட்சை எழுதுவதற்குச் சென்ற முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை எழுத தடை விதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பர்தா அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டாலும் 3 ஆம், 4 ஆம், 5 ஆம் திகதிகளில் தடை விதிக்கப்பட்டது. முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் பர்தாவைக் களைந்து V வடிவில் முந்தானையிட்டே அவர்கள் பரீட்சை மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பொலிஸ் அதிரடிப்படை வீரர்கள் இருவரே அங்கு கடமையில் இருந்துள்ளனர். அவர்களாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை பரீட்சார்த்திகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிரடிப்படை வீரர்களிடம் கோரியபோது அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – பொரளை சி.டபிள்யூ. கன்னங்கரா வித்தியாலயத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. இவ்வித்தியாலய பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பரீட்சார்த்திகள் தங்களது தேசிய அடையாள அட்டையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போட்டோவின் பிரகாரமே அனுமதிக்கப்படுவர் என்று குறிப்பிட்டார். தேசிய அடையாள அட்டையில் காதுகள் தெரியும்படியே புகைப்படம் இருக்கிறது. அதனால் அதன்படியே பரீட்சை எழுத அனுமதிக்க முடியும், பரீட்சை திணைக்களத்தின் சுற்றுநிருபம் இவ்வாறே தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.
தேசிய அடையாள அட்டையில் புகைப்படம் காதுகளை மறைக்காமல் காணப்பட்டால் பரீட்சை மேற்பார்வையாளர்கள் காதுகளை மறைக்காமல் பர்தாவை சரி செய்து கொள்ளுமாறு பரீட்சார்த்திகளைக் கோரியிருக்க வேண்டும்.
இதேவேளை, மடாட்டுகம ஜாயா முஸ்லிம் மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்பதவி உயர்வுக்கான பரீட்சையில் சம்பவம்
பரீட்சை எழுதும் முஸ்லிம் பெண்களும் மாணவிகளும் தொடர்ந்து பல்வேறு அசெளகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. பரீட்சை மேற்பார்வையாளர்களும் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளில் ஓரிவரும் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் மீது பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்கள். பரீட்சைத் திணைக்களத்தின் சுற்று நிருபத்தின் அடிப்படையிலேயே தாங்கள் செயற்படுவதாக தெரிவிக்கிறார்கள். முஸ்லிம் பெண்களின் கலாசார உடை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விஷேட அரசாங்க வர்த்தமானிகளை நாம் அரச அதிகாரிகளதும் பரீட்சைத் திணைக்களத்தினதும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியவர்களாக இருக்கிறோம்.
பரீட்சைத் திணைக்களத்தினால் கடந்த 19 ஆம் திகதி நடத்தப்பட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுக்கான தடைதாண்டல் பரீட்சையின்போது காதுகளை மூடி ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த முஸ்லிம் பெண்கள், இடைநடுவில் பரீட்சை மண்டபத்துக்குள் நுழைந்த பரீட்சைகள் திணைக்கள உயர் அதிகாரியொருவரால் சப்தமிட்டு அச்சுறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஆணையாளர் தரத்திலான அவ் அதிகாரி ‘நான் உங்களுக்குப் பாடமொன்று படிப்பிக்கிறேன்’ எனக் கூறி தனது கையடக்கத்தொலைபேசியினால் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளை புகைப்படமும் எடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கொழும்பு – மிலாகிரிய புனித போல்ஸ் மகளிர் கல்லூரியின் 1 ஆம் மண்டபம் 5 ஆம் இலக்க பரீட்சை அறையில் இடம்பெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர். அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பரீட்சையை பரீட்சைகள் திணைக்களமே நடத்தியது. பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்பு இரு மேற்பார்வையாளர்களால் பரீட்சார்த்திகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் காதுகளை மூடி ஹிஜாப் அணிந்திருப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
முதலாவது வினாத்தாள் காலை 9.00 மணிக்கு வழங்கப்பட்டு காலை 11.00 மணிக்கு நிறைவுற்றது. முதலாவது வினாத்தாளுக்கு விடையளிக்கும் சந்தர்ப்பத்தில் எவ்வித பிரச்சினையும் உருவாக்கப்படவில்லை. இரண்டாவது வினாத்தாள் 12 மணிக்கு வழங்கப்பட்டது. சில முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் அங்கிருந்தனர். இரண்டாவது வினாத்தாளுக்கான பரீட்சை ஆரம்பித்து இடைநடுவில் பரீட்சை திணைக்களத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் உயரதிகாரியொருவர் திடீரென பரீட்சை மண்டபத்தினுள் நுழைந்தார்.
காதுகளை மூடி ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளிடம் சென்று சப்தமிட்டு அவர்களை அச்சுறுத்தினார். காதுகளை மூடி ஆடை அணிய முடியாது என்றார். உங்களுக்குப் பாடம் படிப்பிக்கிறேன் எனக் கூறி முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளை தனது கையடக்கத் தொலைபேசியில் படம் எடுத்தார். அத்தோடு ஒரு கடதாசியில் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் பரீட்சை இலக்கங்களைக் குறித்துக்கொண்டார். இதனால் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் மாத்திரமல்ல ஏனைய பரீட்சார்த்திகளும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.
பரீட்சை திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இவ்வாறு திடீரெனத் தோன்றி முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் மீது சப்தமிடுவதும், நடவடிக்கை எடுப்பேன் என்பதும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தான் சுற்று நிருபத்திற்கு அமையவே செயற்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். பரீட்சை எழுதி முடிந்ததும் குறிப்பிட்ட சுற்று நிருபத்தைக் காண்பிக்குமாறு பரீட்சார்த்திகள் கோரியும் அவர் மறுத்திருக்கிறார்.
அவரது பெயர், பதவி எனும் விபரங்களைத் தெரிவிப்பதற்கும் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பிட்ட உயரதிகாரியின் நடவடிக்கை ஒருபோதும் அனுமதிக்கப்பட முடியாததாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் எவ்வாறான சேவை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் சிலரின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும். முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் காதுகளை மறைக்காது ஆடை அணிந்திருக்க வேண்டுமென்றால் அதற்கான சுற்று நிருபத்தை பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்பே காட்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அதிகாரியின் செயல் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளை அசெளகரியங்களுக்கு உட்படுத்தியதாகவே அமைந்துள்ளது.
குறிப்பிட்ட உயரதிகாரி கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற தகவல் தொழிநுட்பம் தொடர்பான போட்டிப் பரீட்சையொன்றின் போதும் இவ்வாறு செயற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தொடர்ந்தும் இனவாதமாக செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தமானி அறிவித்தல்கள் என்ன தெரிவிக்கின்றன
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப், புர்காவுக்கு மாத்திரமல்ல அபாயா, ஹிஜாபுக்கும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முகத்தை மூடி ஆடை அணிவதை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென பல்வேறு தரப்புகள் ஜனாதிபதிக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தன.
முகத்தை மறைத்து ஆடையணிந்து தீவிரவாதிகள் மேலும் தாக்குதல் நடத்தலாம் என அதற்குக் காரணம் கூறப்பட்டது. அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மே மாதம் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் முகத்திரை அணிய தடைவிதித்தார்.
‘ஒருவரது அடையாளத்தை மறைக்கும் வகையில் முழு முகத்தையும் மூடக்கூடிய எந்தவொரு ஆடையையும் பொது இடங்களில் அணியமுடியாது. முழுமுகம் என்பது ஒருவரது காதுகள் உள்ளிட்ட முழு முகத்தையும் குறிப்பதாக அமையும்.
பொது இடம் எனக் குறிப்பிடுவது பொது வீதிகள், கட்டடங்கள், அடைக்கப்பட்ட அல்லது திறந்தவெளிகள், வாகனங்கள் அல்லது ஏனைய போக்குவரத்துச் சாதனங்களைக் குறிப்பதாக அமையும்.
பொது வீதிகள் என்பது வீதிகளுடன் தொடர்புபடும் பொதுப்பாலத்தின் மேலான ஏதேனும் வீதிகள், நடைபாதைகள், வாய்க்கால், ஏரிக்கரை, சாக்கடை என்பவற்றையும் உள்ளடக்கும்’ என ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் தெரிவித்தது.
‘காதுகள் வெளித்தெரிய வேண்டும்’ என்ற வர்த்தமானி அறிவித்தல் பெண்களின் ஹிஜாபுக்கு தடையாக அமைந்தது. இதனையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் அன்றைய ஜனாதிபதியைச் சந்தித்து வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். முகத்தை மூடி ஆடை அணிவதற்கான தடையினை வரவேற்ற முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளும் அரசியல் தலைமைகளும் காதுகளை மூடி ஹிஜாப் அணியும் வகையில் வர்த்தமானியில் திருத்தங்களைச் செய்யுமாறு ஜனாதிபதியை வேண்டிக் கொண்டார்கள்.
இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் ஆடைக்கு தடைவிதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
திருத்தப்பட்ட விசேட வர்த்தமானி
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் மீண்டுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
முகத்திரை அல்லது முகத்தை மறைக்கும் வண்ணம் ஆடை அணிதல் மற்றும் தலைக்கவசம் அணியும் விடயம் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது விடயம் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி பின்வருமாறு அமைந்துள்ளது.
‘ஏதாவது ஆடை, உடுப்பு அல்லது துணிமணிகள் ஒருவரை அடையாளம் காண ஏதேனும் வகையில் சிரமமாக்கும் வகையில் முழு முகத்தையும் மறைக்கும் வண்ணம் பொது இடத்தில் இலங்கை பிரஜையால் அணியப்படலாகாது. இவ்வாறு அணிபவர்கள் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள் அல்லது சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் ஒருவரை அடையாளம் காண, காதுகள் உட்பட முழு முகத்தை மறைக்கும் எந்த ஒன்றினையும் அகற்றவேண்டி நேரிடும்.
இங்கு ‘முழுமுகம்’ எனக் குறிப்பிடுவது, நெற்றியில் இருந்து வாய்க்குக் கீழுள்ள நாடிவரை என்பதாகும். இங்கு காதுகள் உள்ளடங்காது என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் பெண்கள் காதுகளைத் திறந்து ஆடையணியவேண்டும் என்கிற விதியொன்று இல்லை என்பது தெளிவாகிறது. முகம் மாத்திரமே திறந்திருக்க வேண்டும்.
தெளிவுபடுத்தப்பட வேண்டும்
முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் அணியவேண்டிய ஆடை தொடர்பில் தொடர்ந்தும் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய தெளிவுகள் வழங்கப்படாமையே இதற்குக் காரணமாகும். எனவே சம்பந்தப்பட்ட அமைச்சு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் குறிப்பாக பரீட்சைத் திணைக்களத்துக்கும் இது தொடர்பிலான தெளிவுகளை வழங்கவேண்டும். அவ்வாறான தெளிவுகள் வழங்கப்பட்டாலே முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்