பொதுவாக கல்வி நிலையங்களில் சிரேஷ்ட மாணவர்களால் புதுமுக மாணவர்களுக்கு உடல் ரீதியாக அல்லது உள ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதே பகிடிவதையாகும்.
மேற்கத்தேய நாடுகளில் ஆரம்பமான பகிடிவதையே இந்தியாவின் ஊடாக இலங்கைக்கு வந்தது. இது பிரித்தானிய அரசு இராணுவத்துடன் இணைந்து கொள்ளும் போது பயன்படுத்தப்பட்ட Royal Admission Gang என்ற வாசகத்தின் முதல் எழுத்துக்களான “RAG ” (ராக்) தான் காலப்போக்கில் பகிடிவதையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் பகிடிவதைக்கு எதிராக சட்டங்கள் இருந்த போதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மிக மோசமான முறையில் உடல், உள,பாலியல் ரீதியாகவும் இவை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. அரச சார்பற்ற அமைப்பான கியுறின் நிறுவுனர்களில் ஒருவரான ‘அருசு அகர்வாள் ‘ பகிடிவதையால் மிக மோசமான தாக்கத்திற்கு உள்ளாகிய நாடாக இலங்கையை குறிப்பிடுகின்றார்.
கல்வி நிறுவனங்களில் இடம் பெறும் பகிடிவதைகளை ஒழிப்பதெற்கென்றே இலங்கையில் 1998ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன்செயல்களையும் தடை செய்தல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 946 ஆம் இலக்க சுற்றறிக்கையின் சரத்தின்படி பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கான தண்டனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
பகிடிவதையில் ஈடுபடுகின்றவர்களின் பல்கலைக்கழக அனுமதியைக் கூட ரத்துச் செய்ய முடியும். இவ்வாறு அனுமதி ரத்துச் செய்யப்படுவோர் அவர்களின் வாழ் நாளில் எந்த பல்கலைக்கழகத்திலும் படிப்பைத் தொடர முடியாது.
1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதையையும் வேறு வகையான வன் செயல்களையும் தடை செய்தல் சட்டத்தின்படி பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்க முடியும். மேலும் பகிடிவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் இந்தச் சட்டத்தில் உள்ளன.
இலஞ்சம் இன்றி, ஊழல் இன்றி க.பொ.த.உயர்தர பரீட்சையின் பெறுபேறுக்கு ஏற்ப வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் மாணவர்களை உள்ளீர்க்கும் ஓர் அரச உயர் கல்வி நிறுவனம் தான் இலங்கை பல்கலைக்கழகங்களாகும்.
பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் மாணவர்கள் ஏழை,-பணக்காரன், படித்தவன்,- பாமரன், நகர்புறம்-,கிராமப் புறம், செல்வாக்குள்ளவன்-,செல்வாக்கற்றவன் என்ற எந்த பாகுபாடும் இன்றியே அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே சகல மாணவர்களும் சகோதரத்துவத்துடனும் சமத்துவத்துடனும் பழக வேண்டும், எவரும் தனித்து ஒதுங்கி இருக்கக் கூடாது என்பதற்காகவும், மாணவர்கள் நாட்டின் எண் திசையிலிருந்தும் பல்வேறுபட்ட மத, சமூக, கலாசார வாழ்வியல் நிலைகளிலிருந்தும் வருவதனால் இவர்கள் தம்மை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ள ஒரு நிகழ்வாகவும், ஆரம்ப காலங்களில் பகிடிவதை அமைந்திருந்தது.
பல வண்ணக் கனவுகளுடனும் கற்பனைகளுடனும் எதிர்பார்ப்போடும் பல்கலைக்கழகத்துக்கு காலடி எடுத்து வைக்கும் மாணவர்களின் இன்றைய நிலையோ மிகவும் பரிதாபமாகவும் பயங்கரமாகவுமேயுள்ளன. மாணவர்கள் தமதும், தமது பெற்றோரினதும் இலட்சியக் கனவுகளை எப்படியாவது நிறைவேற்றவும் பல்கலையும் கற்று பட்டம் ஒன்றை பெற வேண்டும் எனும் ஆவலிலும் தான் பெரும்பாலானவர்கள் உள் நுழைகிறார்கள். இதிலும் பெரும்பாலானவர்கள் ஏழைகளாகவும் கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்களாகவுமே இருப்பார்கள். எந்தப் பெற்றோரும் தம் பிள்ளைகளை பட்டதாரிகளாகவும் நற் பிரஜைகளாகவும் உருவாக்க ஆசைப்படுவது நியாயமே.
பெற்றோர் தம் பிள்ளைகளை 5 வயதில் பாடசாலையில் சேர்த்தது முதல் க.பொ.த. உயர் தரம் படிக்கும் வரை உடலாலும் பொருளாலும் எவ்வளவோ தியாகம் செய்கிறார்கள். அதிலும் இன்று நாடு இருக்கும் நிலைமையில் முஸ்லிம் பெற்றோர் தம் பிள்ளைகளை பாடசாலைக்கோ அல்லது தனியார் வகுப்பிற்கோ அனுப்பிவிட்டு பிள்ளைகள் வீடு வந்து சேரும் வரை வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பார்கள். உளவியல் ரீதியாக மன உளைச்சலுக்கும் ஆளாகுகிறார்கள்.
இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில், முன்மாதிரியாக இருக்க வேண்டிய எமது இஸ்லாமிய மாணவர்களும் அல்லவா பகிடிவதையில் முன்னணியில் இருக்கிறார்கள். இவர்கள் தாமும் பகிடிவதையை பெற்றோம் பட்டோம் என்பதற்காக தமது புதுமுக மாணவர்களையும் பழி வாங்குவது முற்றிலும் பிழையாகும்.
சகோதரத்துவமும் மனிதாபிமானமும் மிக்க எவரும் அடுத்தவனின் கல்விக்கு தடையாக இருப்பதில்லை. முஸ்லிம்களில் பல்கலைகழகத்துக்கு தெரிவு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையோ மிக சொற்பம். அதிலும் பகிடிவதைக்குப் பயந்து உயர் கல்வியை இடை நடுவில் விட்டுப் போகிறவர்களின் எண்ணிக்கையோ அதிகம்.
முஸ்லிம் ஒருவருக்கு மற்றொருவரின் இரத்தம், பொருள், தன்மானம் ஆகிய மூன்று விடயங்களும் ஹராமாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தமது வாழ்வியல் ஒழுக்கங்களால் அடுத்த சமூகங்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் எதிர் பார்ப்பாகும். தனி நபர், குடும்பம், சமூக மற்றும் தேசிய வாழ்வில் கல்வி, கலை, கலாசாரம், அரசியல், பொருளாதாரம் என சகல துறைகளிலும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பது முஸ்லிம்களின் கடமையாகும்.
மேலைத்தேய பல்கலைக்கழக கலாசாரங்களை ஒரு முஸ்லிமால் பின்பற்ற முடியாது. விஷேடமாக முஸ்லிம்கள் உயர் கல்வியில் பின்னடைவதற்கான காரணங்களில் இந்த பகிடிவதையும் ஒன்றாகும். ஒரு மாணவருக்குக் கொடுக்கும் பகிடிவதையைத் தாங்க முடியாமல் அவர் கல்வியை இடை நடுவில் விட்டுப் போவாராயிருந்தால், அதனால் ஒரு சமூகமே பின்னடைகின்றது என்பதை பகிடிவதை கொடுக்கும் சிரேஷ்ட மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் பெரும்பாலான முஸ்லிம் பெற்றோர்கள் தம் பெண் மக்களை பல்கலைக்கழம் செல்ல அனுமதிப்பதில்லை என்பதை மாணவியரும் தமது பள்ளிப் பருவத்திலேயே தெரிந்திருப்பதனால் அவர்களும் படிப்பில் ஏனோ தானோ என்றுதான் இருப்பார்கள். இதனால் அவர்கள், அர்களது சந்ததியினருக்கு முன்மாதிரியான தாயாக, வழிகாட்டியாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். இதனால் எமது எதிர்கால சமூகம் கல்வியில் பின் தங்கியவர்களாகவே இருப்பார்கள். தமது குடும்பத்தில் ஒரு சிறு பிரச்சினை வந்தால் கூட தனித்து நின்று முகம் கொடுக்கவோ முடிவெடுக்கவோ முடியாதவர்களாகிறார்கள். ஒரு பெண் கற்பது ஒரு சமூகம் கற்பதற்கு சமனாகும்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 3 இலட்சம் மாணவர்கள் க.பொ.த.உயர் தரம் பரீட்சை எழுதுகிறார்கள். அதில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய அடிப்படை தகுதியைப் பெற்றாலும் சுமார் 25% ஆன மாணவர்களுக்கு மட்டுமே அரசு அனுமதி கிடைக்கிறது. ஏனைய 75% உம் அரசின் வளப் பற்றாக்குறை காரணமாகவே நிராகரிக்கப் படுகிறார்கள்.
இதிலும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20% ஆனவர்கள் தமது படிப்பை இடைநடுவில் கை விடுவதாகவும் , அவர்களில் 10%-12%ஆனவர்கள் பகிடிவதையை சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் நிகழ்வொன்றில் ஆற்றிய உரையில் கூறியிருந்தார்.
வசதி வாய்ப்புள்ள பெற்றோர் தம் பிள்ளைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பியோ அல்லது அதே பட்டத்தை தனியார் பல்கலைக்கழகங்களிலோ இலட்சங்களைக் கொட்டி, பெற்று தம் பிள்ளைகளின் பெயருடன் சேர்த்துக் கொள்வார்கள். வசதியற்றவர்கள் என்ன செய்வார்கள்?
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை இல்லாதொழிக்கும் நோக்குடன் உயர் கல்வியமைச்சு கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத் தண்டனை வழங்கும் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரவுள்ளது. இதனூடாக பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை எடுக்காத நிர்வாகிகளை உயர் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக வாழ்க்கை என்பது வெறும் கேளிக்கைகளுக்காகவும் வீண் விளையாட்டுக்களுக்காகவும் பருவகால கோளாறுகளுக்காகவும் அமைக்கப்பட்ட வளாகம் அல்ல என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே குறிப்பாக எமது முஸ்லிம் இளைஞர், யுவதிகள் தாம் பொது மக்களின் வரிப்பணத்தின் மூலமே உயர் கல்வி கற்பதற்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து படித்து பட்டம் பெற்று அப்பாவி பெற்றோரின் நாமத்தைப் பாதுகாத்து நாட்டுக்கும் சமூகத்துக்கும் நற் பிரஜைகளாக மாறவேண்டும்.-Vidivelli
- தர்ஹா நகர்
றம்ஸியா அப்ஹாம்- கொலன்னாவை