பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி: இனவாத காய்நகர்த்தல்களை முன்னெடுப்பதற்கு முயற்சி
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் விசாரணை வேண்டும் என்கிறார் ஹக்கீம்
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளை என்னுடன் தொடர்புபடுத்தி தேர்தலில் இனவாத அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். என்மீது சுமத்தப்படுகின்ற இந்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக மிக விரைவில் விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை கொடுப்பதற்கும், வாக்குமூலங்களை வழங்கவும் தயாராக உள்ளேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் அவர்களை உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி என்பதில் சந்தேகமே இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஜனவரி 8ஆம் திகதி லங்காதீப, டெய்லிமிரர், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக என்னை கைது செய்யுமாறு மேஜர் அஜித் பிரசன்ன என்பவர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று செய்திருந்தாக செய்தி வெளியாகி இருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் சகோதரனான ரிழ்வான் எனும் பயங்கரவாதியை 2017இல் நலம் விசாரிப்பதற்காக கொழும்பு வைத்தியசாலையொன்றுக்கு சென்றிருந்ததாகவும், அதுபற்றி 2019 ஒக்டோபர் 2ஆம், 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் தனியார் தொலைக்காட்சி ஊடகச் செய்திகளில் காண்பிக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் என்னை கைது செய்து விசாரணை செய்யுமாறும் அவர் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதும், வேண்டுமென்றே திரிபுபடுத்தி எனக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காக சோடிக்கப்பட்ட ஒரு செய்தியாகும். இந்த செயற்பாடுகள் எதிர்வரும் தேர்தலை குறிவைத்து எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளால் புனையப்பட்ட தீய நோக்கங்களுடனானவையாகும்.
ஸஹ்ரான் ஹாசிம், ரிழ்வான் உட்பட மற்றும் தற்கொலை பயங்கரவாதிகள் சம்பந்தமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இதுவரை குற்ற விசாரணைப் பிரிவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பயங்கரவாத தடுப்பு பிரிவும் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன .
அதற்கு மேலதிகமாக பாராளுமன்ற தெரிவுக்குழுவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் இது சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளன. இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் என் மீதோ, எனது கட்சியை சார்ந்தவர்கள் மீதோ எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லையென நான் நம்புகின்றேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, வெவ்வேறு நபர்களை பாவித்து என்மீதும் என் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சந்தேகம் ஏற்படும் விதத்தில் இவ்வாறான ஒரு கபட நாடகம் அரங்கேற்றப்பட்டது.
அப்போது நான் போதிய ஆதாரங்களுடன், தனிப்பட்ட ரீதியில் என் மீது சேறுபூசும் நடவடிக்கையே இதுவாகும் என்பதை இந்தப் பாராளுமன்ற சபா பீடத்திலும் , பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஓர் ஊடகவியலாளர் மாநாட்டிலும் உரிய சாட்சிகளுடன் நிரூபித்திருக்கின்றேன் . இப்போது அதே நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுகின்றது .
தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்காக பழைய சேற்றையே மீண்டும் வாரியிறைத்து எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றி கொள்வதற்காக மக்களின் காதில் பூச்சுற்றுகின்ற வேலையே இது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. 2015 ஆகஸ்ட் 20, 21 ஆகிய திகதிகளில் கைகுண்டுகள், கத்தி, வாள் என்பவற்றைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டனர். காத்தான்குடி பிரதேசத்தில் உருவாகியிருந்த இந்த தேர்தல் வன்முறைகளை பார்வையிடுவதற்காகவும் பாதிக்கப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு ஆளானவர்களை சந்திப்பதற்காகவும் நான் 2015 ஆகஸ்ட் 22ஆம் திகதி அந்தப் பிரதேசத்துக்கு சென்றிருந்தேன். தாக்குதலுக்குள்ளாகியிருந்த ஒரு பள்ளிவாசலை பார்வையிடுவதற்காக சென்றிருந்த போதும், அங்கு நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஹிஸ்புல்லாவுக்கு தேசிய பட்டியல் வழங்கியது நியாயமற்றதென அங்கு கூடியிருந்தோர் தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர். அங்கிருந்தோருக்கு மத்தியில் பயங்கரவாதி ஸஹ்ரானும் இருந்துள்ளான் என்பதை பின்னர் வெளிவந்த செய்திகளின் மூலமாகத்தான் நானும் அறிகின்றேன்.
மேற்படி 2015 ஆகஸ்ட் 22 தேர்தல் வன்முறைகளில் காயமடைந்து சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்தபோது பயங்கரவாதி ரிழ்வானும் அங்கு இருந்திருக்கின்றான். இவை எதுவும் மறைமுகமாகவோ, இரகசியமாகவோ நடைபெற்றவையல்ல. செய்திகளில் ஒலிபரப்பாகியிருந்தன என்பதை நான் உறுதிபடத் தெரிவிக்கிறேன்.
துரதிரஷ்டவசமாக அவர்களில் எவரும் பயங்கரவாதிகளென நம்மில் எவரும் அறிந்திருக்கவில்லை. அது சம்பந்தமாக என்னுடைய மனச்சாட்சிக்கு மாற்றமில்லாமல் இதய சுத்தியுடன் உறுதிபடத் தெரிவிக்கின்றேன். 2015 ஆகஸ்ட் 22 அன்று காத்தான்குடி பிரதேசத்துக்கு நான் சென்றிருந்தபோது, பயங்கரவாதியாக அப்போது அடையாளம் காணப்படாது இருந்து தற்செயலாக நான் சந்திக்க நேர்ந்தவர்கள் பற்றிய இச்செய்தியை ஒருவர் மாறி ஒருவர் வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு வியாக்கியானங்களுடன் விபரிப்பதை ஊடகங்கள் காட்டிக்கொண்டிருக்கின்றன. செய்யாத, செய்யவே நினைக்காத செயல் ஒன்றுக்காக என்மீது இவ்வாறு அர்த்தமற்ற விதத்தில் குற்றம் சுமத்தப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.
உயிர்த் ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் அவர்களை உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இது வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும் இந்த அழியா துரோகத்தில் கடும் சாயத்தை என் மீது தெளிப்பதன் மூலம் நான் மிகவும் சிரமத்துடன் ஈட்டியுள்ள நற்பெயரை நாசப்படுத்துவதற்கு சிலர் செயல்படுவது மிகவும் மன வேதனையை தருகின்றது .
சபாநாயகரிடமும் மற்றும் மேன்மைதங்கிய சபையில் உள்ளவர்களிடமும் நான் என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக மிக விரைவில் விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அது சம்பந்தமான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை கொடுப்பதற்கும் தேவைப்படும் எச்சந்தர்ப்பத்திலும் என்னுடைய வாக்குமூலங்களை வழங்கவும் அந்த விசாரணை சம்பந்தமான எல்லா விடயங்களிலும் ஒத்துழைக்கவும் தயார் நிலையில் இருப்பதாக பொறுப்புடன் தெரிவித்து கொள்கின்றேன். நான் என் வாழ்நாளில் ஒருபோதும் தேவையற்ற அபாண்டங்களை சுமத்துவதையோ சேறுவாரி இறைப்பதையோ செய்யாத ஒருவன் என்பதுடன் எத்தவிதமான பயங்கரவாத செயல்களுக்கும் துணைபோகாதவன் என்பதையும் இந்த மேன்மைதாங்கிய சபையில் தெரிவித்து கொள்கின்றேன் .
அதேபோல் இந்த சந்தர்ப்பத்தில் புத்தபெருமான் அவர்கள் “அன்குத்தர நிகாயே காலான “சூத்திரத்தில் தெரிவித்துள்ள போதனையை நினைவுபடுத்த விரும்புகின்றேன். “அதனை தெரிந்து கொண்ட மாத்திரத்தில் விசுவாசம் கொள்ளாதீர்கள். பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்படும் சம்பிரதாயம் என்பதனால் அதனையே செய்யாதீர்கள். அநேகமானவர்கள் சொல்கிறார்கள் என்பதனாலோ தகவலாக தெரிந்திருக்கிறது என்பதனாலோ எதுவொன்றையும் நம்பாதீர்கள். உங்கள் போதகர்களினதோ அல்லது மூத்தவர்களினதோ கூற்று என்பதற்காக மட்டும் எதனையும் விசுவாசம் கொள்ளாதீர்கள். இருப்பினும் தீர்க்கமான பூரணமான பகுத்தாய்வுக்கும், மீள்பரிசீலனைக்கும் உட்படுத்தப்பட்ட பிறகு சகல விதமான தர்க்க நியாயங்களும் பொருந்தி வருவதாக தெளிவாக தெரிகின்ற சந்தர்ப்பத்தில் அது அனைவரினதும் பொதுநலத்திற்கு துணை புரிவதாக தெரிந்தால் மாத்திரம் அதனை ஏற்றுக் கொண்டு அதன்படி செயற்படுங்கள்” ஒருவரின் நற்பெயரை அற்ப அரசியல் இலாபத்திற்காக சிதைப்பதற்கு முன்பு இந்தக் “காலான சூத்திரத்தை வாசித்து தெளிவு பெறுமாறு உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். இந்த உலகத்தில் தெளிவாகத் தெரிவதும் தெரியாததுமான உண்மைகள் புதைந்துள்ளதாக புத்தபிரான் தெரிவித்துள்ளார். உங்கள் கண்களுக்கு புலப்படுகின்ற, நீங்கள் கண்கானிக்கின்ற விடயம் உண்மையானதாக இல்லாதிருந்திருக்கலாம் என்றார்.-Vidivelli
- ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்