பௌத்த – முஸ்லிம் உறவு தொடர்பாக இடம்பெறும் இரண்டாவது சர்வதேச செயலமர்வில் பங்குபற்றக் கிடைத்தமையை பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். தெற்காசியாவிலும், தென் கிழக்காசியாவிலும் சமய உட்பிரிவுகளிடையேயும், சமயங்களிடையேயும் கலந்துரையாடலை ஊக்குவித்து முரண்பாடுகளை குறைப்பது தொடர்பாக இச்செயலமர்வு இடம்பெறுகிறது.
தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளில் அனைத்து சமயங்களிடையே சமய நல்லிணக்கம் என்ற தொனிப் பொருளில் இங்கு உரையாற்றுவதற்கு என்னை அழைத்தமையையிட்டு இந்தோனேசிய அரசாங்கத்துக்கும் இச்செயலமர்விற்கான ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்திய ஏற்பாட்டு குழுவினருக்கும் நான் நன்றி செலுத்துகின்றேன். விசேடமாக இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளில் கடந்த பல நூற்றாண்டுகளாக நல்லுறவை அனுபவித்து வருகிறோம். கடந்த பதினெட்டு ஆண்டுகாலமாக மேற்படி நாடுகளில் நான் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறேன். பல்வேறு சமயங்களை சார்ந்த மக்கள் எவ்வாறு சமாதானத்துடனும், நல்லிணக்கத்துடனும் கூடிவாழ்கிறார்கள். சமாதானமாக வாழும் சமூகங்களிடையே அவர்களின் ஒற்றுமைக்கு தடைக்கற்களாக உள்ள அம்சங்கள் எவை என்பதையும் நான் அவதானித்துள்ளேன். எனவே இங்கு சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக இச்சிந்தனைகள் இலங்கை தொடர்பாக அமையவுள்ளன.
கடந்த ஏப்ரல் 21 இல் இலங்கையில் சில சமய தீவிரவாதிகளால் அறியப்படாத காரணங்களுக்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் இந்நிகழ்வு முஸ்லிம்களை ஏனைய சமயங்களிலிருந்து பிரித்து வைத்துள்ளது. ஆனால் பெரும்பாலான சீராக சிந்திக்கும் முஸ்லிம்கள் இவ்வாறான நிகழ்வு ஒருபோதும் இலங்கையில் இடம்பெறுவதை விரும்பவில்லை என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். பெரும்பாலும் மூன்றாவது நூற்றாண்டு முதல் சிங்களவர்களும், முஸ்லிம்களும் இலங்கையில் சமாதானமாக வாழ்ந்துள்ளனர். சமயத் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதல் பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லிம், இந்து மக்களிடையே காணப்பட்ட சமூக நல்லுறவில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் ஞாயிறன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்கள் மீதும், ஹோட்டல்களில் இருந்த உல்லாசப் பயணிகள் மீதும் நடாத்தப்பட்ட மிகவும் மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுள் ஒன்றாக அமைந்தமை கவலைக்குரியது.
இத்தாக்குதல் இடம்பெற்றது முதல் சிங்கள சமூகம் முஸ்லிம்களை அவமதிக்கத் தொடங்கியது. அவர்களுடன் கூடி வாழ்வதை அசௌகரியமானதாக உணர்ந்தனர். முஸ்லிம்களது நிறுவனங்களை சிங்களவர்கள் பகிஷ்கரித்தனர். பல நூற்றாண்டுகளாக இரு சமூகங்களும் அனுபவித்து வந்த நம்பிக்கை பிளவுபடத் தொடங்கியது. இரு சமயங்களிடையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்புவது சமயத் தலைவர்கள் என்ற வகையில் தற்போது எமது பொறுப்பாக அமைந்துள்ளது. இலங்கை போன்ற சிறு தீவில் அனைத்து சமயங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயலவேண்டும். இதன்மூலம் ஒரு நாட்டில் அனைத்து சமயங்களும் எவ்வாறு நல்லிணக்கத்துடன் வாழ முடியுமென உலகிற்கு எடுத்துரைக்கும் முன்னுதாரணமாக இலங்கையை உருவாக்கலாம்.
சமய நல்லிணக்கம் என்ற பின்புலத்தில் அனைத்து சமயங்களுக்கும் பொதுத் தளமாக அமைகின்ற பொது நியதி காணப்படுகிறதென நான் நினைக்கின்றேன். நீங்கள் எவ்வாறு நடத்தப்படவேண்டுமென விரும்புகிறீர்களோ அவ்வாறே பிறரையும் நடத்துங்கள். உங்களுடன் பிறர் எவ்வாறு செயற்படவேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ அவ்வாறே பிறர் மீதான உங்களது செயற்பாடு அமையட்டும். மேற்படி நியதியை அடிப்படையாகக் கொண்டு பௌத்தம் கருணையை போதிக்கிறது. மன்னர் அவ்ரங்கசீப் அவர்களுக்கு சட்ரபதி சிவாஜி எழுதியதாகக் கருதப்படும் கடிதத்தை உசாத்துணையாக வைத்து அவர் கூறியதாகப் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தெய்வீக உணர்வின் அழகிய வெளிப்பாடாக இந்து சமயமும், இஸ்லாமும் அமைந்துள்ளன. பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படுகிறது. கோவில்களில் தெய்வீக மகத்துவத்தை பறைசாற்றும் மணி ஒலிக்கிறது. மத வெறியையும், சமய வெறுப்புணர்வையும் கொண்டவர்கள் இறை கட்டளைகளுக்கு முரணாக செயற்படுகின்றனர்.
எந்தக் காரணத்திற்காகவும் மனித உயிர்களை அழிக்குமாறு எந்தவொரு சமயமும் போதிக்கவில்லை என்பது உண்மையாகும். பௌத்தர்களின் கைநூலான தம்மபதவில், “அனைவரும் பலத்திற்கு அஞ்சி நடுங்குகின்றனர். அனைவரும் மரணத்திற்கு பயப்படுகின்றனர். ஏனையவர்களை தம்முடன் ஒப்பிடுகின்றனர். உயிர்களைக் கொல்ல வேண்டாம், உயிர் பலியாவதற்கு காரணமாக இருக்கவும் வேண்டாம்” என புத்தர் குறிப்பிட்டுள்ளார். புத்தரதும், இயேசு கிறிஸ்துவினதும் போதனைகளை போலவே புனித அல்குர்ஆனும் அனைத்து மனிதர்களையும் கண்ணியப்படுத்துமாறு போதிக்கிறது. ஒரு பிள்ளை பிறக்கும் போது தான் எந்த சமயத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அறியாத நிலையிலே பிறக்கிறது. அவ்வாறே எந்த மொழியை பேசவேண்டும் என அப்பிள்ளைக்கு தெரியாது. தனது பெற்றோரின் சமயத்தை பிள்ளை பின்பற்றவேண்டியுள்ளது. நாம் அனைவரும் இவ்வாறே பிறந்தோம் என்ற எளிமையான உண்மையை உணரமுடிகிறது.
அனைத்து சமயங்களும் நல்லிணக்கம், சமாதானம், கூட்டுறவுடன் வாழுமாறு எமக்குப் போதிக்கின்றன. வெறுப்பையன்றி அன்பு, சகோதரத்துவம் ஆகிய செய்திகளையே சமயங்கள் பரப்புகின்றன. மீளிணக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றையே அனைத்து சமயங்களும் நம்பிக்கைகளும் எம்மில் தோற்றுவிக்கின்றன. தேவைப்படும்போது தியாகங்களை மேற்கொள்ள தூண்டுகின்றன. ஒரே குடும்பமாக அனைத்து மனித இனத்தவரும் பூமியில் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கத்துடன் வாழ்வது என்பது தொடர்ந்தும் ஓர் ஒழுக்ககோட்பாடாக விளங்கப்போவதில்லை. மாற்றமாக அது ஒரு வாழ்க்கைமுறையாக அமையவேண்டியுள்ளது.
மௌலானா வஹீதுத்தீன்கான் என்ற இஸ்லாமிய அறிஞர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “வன்முறையில் ஈடுபடுவதற்கு அறிவுஞானம் தேவையில்லை. எந்தவொரு முட்டாளும் இதனைச் செய்யலாம். ஆனால், சமாதானத்தை கட்டியெழுப்பி பேணிப் பராமரிப்பதற்கு உயர்ந்தபட்ச அறிவும் திட்டமிடலும் தேவைப்படுகிறது. பிரச்சினைகளை புத்திசாதுரியமான திட்டங்களூடாகக் கையாள்வதற்குத் தெரிந்த ஒருவர் எப்போதும் வன்முறையிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான வழியையே தெரிவு செய்துகொள்வார்.”
பல்வேறு சமயங்களும் இனங்களும் வாழ்கின்ற நாட்டில் நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமாதானமாக ஒப்புரவுடன் கூடி வாழ்வதற்காக மக்களை பயிற்றுவித்து போதிப்பதற்கு நாம் கடுமையாகப் பாடுபடவேண்டியுள்ளது. சில சட்டங்களையும், ஒழுங்கு விதிகளையும் சிலபோது அறிமுகப்படுத்தலாம். ஆனாலும் இவையனைத்தும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக அமையவேண்டும். சமயங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களுக்கு மிகவும் பாரிய பொறுப்புள்ளது. சமூக ஊடகங்கள் மீதான அளவுக்கதிகமான சுதந்திரம் சராசரியாக சிந்திக்கின்ற சாதாரண மனிதனும் எழுதாத விடயங்களை எழுதுவதற்கு மக்களுக்கு அனுமதியளித்துள்ளன. சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வு பரவுகிறது. இவற்றை வாசிக்கின்ற இளம் சந்ததியினர் வெறுப்புணர்வை தமது மனங்களில் பதித்துக்கொள்கின்றனர். சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்துகின்ற சட்டம் அவசியம். சமயம், குலம், தேசியம் தொடர்பான வெறுப்பை அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தமது சமூக ஊடகங்களில் அனுப்பப்படுகின்ற மில்லியன் கணக்கான பதிவுகளை எவ்வாறு தம்மால் கட்டுப்படுத்த முடியும் என சமூக ஊடகங்களை இயக்குபவர்கள் கேட்பது அவர்களுக்கு மிகவும் இலகுவானது. இன்று மிகவும் முன்னேற்றகரமான உலகில் வாழ்கிறோம். இதனைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறை நிச்சயமாக இருந்தேயாக வேண்டும். வெறுப்புணர்வை பரப்புவதற்கு பதிலாக மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை பரப்புவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியும்.
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பெருமதிப்பிற்குரிய கர்தினால் அவர்கள் குறிப்பிட்ட கூற்றை நான் பெரிதும் பாராட்டுகிறேன். “இலங்கையை நிலைதளரச் செய்வதற்காக சர்வதேச பயங்கரவாத அமைப்பொன்றின் உதவியுடன் ஒரு சிறு குழுவினர் செய்ததாக தெரிகின்ற ஒரு தாக்குதலுக்காக முஸ்லிம்கள் அனைவரும் துன்பத்தை அனுபவிக்கத் தேவையில்லை.” மேலும் கார்டினல் அவர்கள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்கள்.
“இலங்கை ஒரு பௌத்த நாடாகும். இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் பௌத்த போதனைகளையும் பாரம்பரியங்களையும் மதிக்கவேண்டும். பல நூற்றாண்டுகளாக மக்கள் நல்லிணக்கமாக வாழ்வதற்கு இவையே வழிவகுத்தன.”
குறிப்பாக இலங்கை, தாய்லாந்து, பர்மா போன்ற சமயப்பதற்றம் உக்கிர நிலையிலுள்ள நாடுகளில் மக்களுக்கும் குறிப்பாக இளஞ்சந்ததியினருக்கும் சமய நல்லிணக்கத்தை போதிப்பதற்கான முன்னெடுப்புக்களை சமயத் தலைவர்கள் என்ற வகையில் நாம் மேற்கொள்ளவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் சமய நல்லிணக்கத்துக்குப் பதிலாக வேற்றுமையை பரப்புவதன் மூலம் அரசியல்வாதிகள் பயனடைய முயற்சிக்கிறார்கள். இவ்வாறான அரசியல்வாதிகளின் வலையில் வீழ்ந்துவிடாமல் மக்கள் அறிவூட்டப்பட வேண்டும். இத்தகையவர்கள் தமது நலனை மட்டுமே கருத்திற்கொள்கின்றனர். அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படுவதில்லை. இனவாதம் நாட்டின் அபிவிருத்திக்குத் தடையாக உள்ளது. இலங்கையில் காணப்படும் ஒற்றுமையையும், வேற்றுமையையும் வெளிப்படுத்தும் இரு அம்சங்களிலும் வரலாற்றுப் பாரம்பரியத்தைக் காணலாம். சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதன் ஊடாக பாரம்பரியத்தை பேணவேண்டியுள்ளது.
நாட்டுப் பிரசைகளிடையே தேசிய உணர்வை பலப்படுத்துவது அவசரத் தேவையாகவுள்ளது. சமாதானத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக சமூகத்தில் அதிகரித்துவரும் சகிப்புத்தன்மையற்ற நிலையை மிகவும் கவனமாக எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அதற்கப்பால் பல்வேறு சமயங்களை பின்பற்றும் மக்களிடையே தாம் கூட்டாக வாழவேண்டும் ஏனையவர்களுடன் ஒன்று கலக்க வேண்டும் என்று உணரச் செய்வதும் அத்தியவசியமாகவுள்ளது.
ஏனெனில் கலப்பு அண்டை அயலவர்கள் என்ற நிலை துரிதமாக மறைந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல சமூகங்களிலும் மக்கள் தமது குழு அடையாளத்துடன் வாழ்வதை பெரிதும் விரும்புகின்றனர். கிராம, மாநகர, நகர மட்டங்களில் சமூக நல்லிணக்கக் குழுக்களை தோற்றுவிப்பது அவசியமாகும். சமூக உறுப்பினர்களிடையே இன நல்லுறவை விருத்திசெய்வதற்காக இவ்வாறான குழுக்களை உருவாக்க வேண்டியுள்ளது. பரஸ்பர சகிப்புத்தன்மை நல்லிணக்கம் என்பவற்றை போதிக்க வேண்டிய தேவையுள்ளது.
இதன்மூலம் சட்டத்தால் ஆளப்படுகின்ற நாட்டுப் பிரசைகள் ஒவ்வொருவரும் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழலாம். இதற்காகவேண்டி ஆரம்ப வகுப்புகள் முதலே சிறுவர்களுக்கு சமய நல்லிணக்கம் மற்றும் ஒவ்வொரு சமயத்தையும் மதிக்கவேண்டும் என்ற உணர்வும் போதிக்கப்படவேண்டும். இவற்றை போதிக்கின்ற ஆசிரியர்களும் தாம் கற்பிக்கின்ற விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.
சமூகம், அரசியல், இனம், சர்வதேசம் ஆகிய மட்டங்களில் ஏற்படும் பதற்றம், முரண்பாடுகள், இன்று மனித இனத்தின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. எமது மனங்கள் என்ற மண்ணில் இவற்றின் வித்துக்கள் உள்ளன. எனவே இம்மண்ணை கிளர்ந்து பண்படுத்த வேண்டியுள்ளது. இம்மண்ணில் பரஸ்பர புரிந்துணர்வு, கண்ணியம், அன்பு போன்ற வித்துக்கள் நடப்படவேண்டியுள்ளது. இல்லாவிட்டால் மனிதாபிமானம் அழிந்துவிடும்.
பெரும்பாலும் சமயங்களிலுள்ள தீவிரவாதக் குழுக்கள் எம்முன் வருவது சிரம சாத்தியமான காரியமாக இருக்கலாம் என்றாலும் சமூகத்திற்கு சமயத் தலைவர்களின் தலையீடு தேவைப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் சமூகத்திற்கான எமது பொறுப்புகளை விட்டும் நகர்ந்து விடமுடியாது.
சமயங்கள், இனங்களிடையிலான வேறுபாடுகளை களையவேண்டியுள்ளது.
அரசியல்வாதிகள் ஒருபுறமிருக்க சமயத்தலைவர்கள் என்ற வகையில் நாம் நமது முன்னெடுப்புகளை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
இச்சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்களைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில் இவர்கள் சமயத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகிய இருதரப்பினரையும் கூட்டாக செயற்பட அழைத்துள்ளனர். மேலும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் வாழும் சமூகங்களிடையே சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்குரிய செயற்றிட்டத்தை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்களை கலந்துரையாடுவதை மையமாகக் கொண்டு இக்கூட்டம் இடம்பெறுகிறது.
இங்கு பொருத்தமான நடைமுறைப்படுத்தக்கூடிய கோட்பாடுகள் மூலம் சமூகத்தில் உள்ள விடயங்கள் தீர்க்கப்படவுள்ளன. சமயத் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் இக்கூட்டம் வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என எதிர்பார்த்து எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.-Vidivelli
2019 டிசம்பர் 17 முதல் 19 வரை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இடம்பெற்ற பௌத்த – முஸ்லிம் உறவு தொடர்பான செயலமர்வின் ஆரம்ப நாள் நிகழ்வின்போது உதவிப் பேராசிரியர் கலாநிதி வல்மோருவே பியரத்ன தேரர் ஆற்றிய உரை
- தமிழாக்கம்:
அஷ்ஷெய்க் ஏ.எம்.மிஹ்ழார்
(உதவி அதிபர், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி)