உயர்தர உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் 01 ஆம் இடம் பெற்று வைத்தியத்துறைக்குத் தெரிவான மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிகாவின் வீட்டிற்கு வைத்தியர் எம்.ஷியாவுடன் மொறவெவ பிரதேச சபையின் தவிசாளரும் திருகோணமலை இந்திராரம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்ன தேரர் கடந்த 07 ஆம் திகதி மாலை விஜயம் செய்தார்.
பௌத்தமத தேரரின் வருகையை சற்றேனும் எதிர்பாராத முஸாதிகாவும் அவரது பெற்றோரும் வீட்டு நுழைவாயிலிலிருந்து தேரரை இன்முகத்தோடு வரவேற்று உபசரிப்பு செய்தனர்.
அதன்பின் தேரர் முஸாதிகா கல்வி கற்று வசித்துவந்த வீட்டைப் பார்வையிட்டதோடு இவ்வாறு குடிசையில் வசித்து மருத்துவத்துறைக்கு தெரிவான முஸாதிகாவையும், செங்கல் சூழையில் நாள்தோறும் நெருப்போடு தொழில் செய்து அதனூடாக கிடைக்கும் சிறிய வருமானத்தைக் கொண்டு தனது பிள்ளையை படிக்க வைத்து வைத்தியத்துறைக்குத் தெரிவாக்கிய தந்தை மற்றும் அதற்கு உதவிய தாயையும் உளமாற வாழ்த்தினார்.
அதன்பின் தேரர் முஸாதிகாவின் தந்தையிடம் யார் யார் மகளின் உயர்தர படிப்புக்கு உதவினார்கள்? மேலும் பல்கலைக்கழக படிப்பை தொடர்வதற்கு உதவி செய்யப்போவதாக வாக்குறுதியளித்தார்கள்? என்று வினவினார்.
அதற்கு முஸாதிகாவின் தந்தை வருகின்ற அதிகமானவர்கள் மகளின் படிப்புக்கு உதவுவதாகத் தெரிவித்து சென்றதாகப் பதிலளித்தார்.
அனைத்து விடயங்களையும் கேட்டுக் கொண்டிருந்த தேரர் திடீரென எழுந்துசென்று தனது வாகனத்தில் கொண்டுவந்த உலருணவுப் பொதிகளை எடுத்து முஸாதிகாவின் பெற்றோரிடம் கொடுத்ததோடு சிறுதொகை பணத்தையும் முஸாதிகாவிடம் கொடுத்தார்.
யார் உதவி செய்தாலும் பரவாயில்லை. இந்த மாணவியின் உயர் கல்வியில் எனது சிறு பங்களிப்பாவது இருக்க வேண்டுமெனக் கூறிய தேரர், முஸாதிகாவின் தந்தையின் வங்கிக் கணக்கிலக்கத்தைப் பெற்றதோடு முஸாதிகா பல்கலைக்கழகம் செல்லும் மாதத்திலிருந்து அவரது பல்கலைக்கழக வாழ்க்கை முடியும்வரை மாதாமாதம் ஒருதொகை பண உதவி செய்வதாகவும் வாக்குறுதியளித்தார்.
தேரரின் வாயிலிருந்து வந்த இந்த வாக்குறுதியை சற்றேனும் எதிர்பார்க்காத முஸாதிகாவின் குடும்பத்தினர் திகைத்து நின்றனர். இதன்போது முஸாதிகாவின் தந்தை, “எனக்கு சிங்களம் தெரியாது. தெரிந்திருந்தால் சிங்களத்தில் தேரருக்கு மனமார நன்றி தெரிவித்திருப்பேன். இருப்பினும் தமிழில் தேரருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதனை யாராவது மொழி பெயர்த்து அவருக்கு சொல்லுங்கள்” என்று தெரிவிக்க அருகிலிருந்த ஒருவர் முஸாதிகாவின் தந்தை மீராசா சொன்னதை மொழி பெயர்த்து தேரரிடம் எடுத்துச் சொன்னார். அந்த நன்றியைத் தேரர் மனமகிழ்வோடு ஏற்றுக் கொண்டதோடு, “உங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் வீடொன்றை கட்டித்தர நடவடிக்கை எடுத்துள்ளதாக கேள்விப்பட்டேன். அதற்கும் என்னாலான எல்லா ஒத்துழைப்புக்களை வழங்குவேன்” என்றார்.
இறுதியாக முஸாதிகாவுடன் தேரர் உரையாடினார். உங்களுக்கு என்ன தேவை என்று கேட்டார். அதற்கு முஸாதிகா அளித்த பதில் தேரரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“நான் ஒன்றை மாத்திரமே உங்களிடம் கேட்கிறேன். நான் படித்த பாடசாலையான திருகோணமலை ஸாஹிறா கல்லூரி இடப்பற்றாக்குறையுடன் காணப்படுகிறது. அதற்காக அருகில் உள்ள காணியை வாங்குவதற்காக அதிபர், ஆசிரியர்கள் நிருவாகத்தினர் நிதி வசதியில்லாமல் நீண்டகாலமாகக் கஷ்டப்படுகிறார்கள். அதனால் உங்களாலான உதவிகளை நான் உயர்தரம் படித்து என்னை வைத்தியத்துறைக்கு தெரிவாக்கிய திருகோணமலை ஸாஹிறா கல்லூரிக்கு உதவி செய்யுங்கள்” என்றார். மேலும், ” நான் வைத்தியராக வந்த பின், என்னைப் போன்று உயர்தரத்தில் வறுமையின் பிடியில் சிக்கி கல்வி பயில்கின்ற மாணவர்களை இனங்கண்டு, பல ஏழைக் குடும்பங்களிலிருந்து வைத்தியர்களை உருவாக்குவதற்காக உதவி செய்வேன்” என்றும் முஸாதிகா தெரிவித்தார்.
தான் கேட்டகேள்விக்கு முஸாதிகா அவரது படிப்பு தொடர்பாக ஏதாவது வேறு உதவி கோருவார் என்று எதிர்பார்த்த தேரருக்கு, முஸாதிகாவின் எதிர்பார்ப்பு பாடசாலையின்பால் இருப்பதைக் கண்டு அவர் மெய்சிலிர்த்தார். முஸாதிகாவின் இந்தப் பொது நலன்மிக்க மனப்பான்மையைப் பாராட்டிய தேரர் தன்னாலான உதவிகளை அப்பாடசாலைக்கு செய்வதாகவும் உறுதியளித்தார்.
இன, மத ரீதியிலான மோதல்களும் கசப்புணர்வுகளும் எமது நாட்டில் பெருகிவரும் இக்காலத்தில் மொறவெவ பிரதேச சபையின் தவிசாளரும்,
திருகோணமலை இந்திராராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்ன தேரரின் இந்த மனிதாபிமான செயற்பாடானது இன, மதங்களைத் தாண்டி எல்லா இன மக்களினதும் பேசுபொருளாக தற்போது மாறியிருக்கிறது.
மதிப்புக்குரிய தேரர், முஸாதிகாவின் குடும்பத்தின் மனதில் மாத்திரமின்றி முழு இலங்கை முஸ்லிம்களின் மனதிலும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.-Vidivelli
- தோப்பூர் நிருபர் நஹீம் முஹமட் புஹாரி