பரீட்சைகள் திணைக்களத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுக்கான தடைதாண்டல் பரீட்சையின் போது காதுகளை மூடி ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த முஸ்லிம் பெண்கள், இடைநடுவில் பரீட்சை மண்டபத் துக்குள் நுழைந்த பரீட்சைகள் திணைக்கள உயர் அதிகாரியொருவரால் சப்தமிட்டு அச்சுறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஆணையாளர் தரத்திலான அவ்வதிகாரி ‘நான் உங்களுக்குப் பாடமொன்று படிப்பிக்கிறேன்’ எனக்கூறி தனது கையடக்கத் தொலைபேசியினால் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளை புகைப்படமும் எடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு– மிலாகிரிய புனித போல்ஸ் மகளிர் கல்லூரியின் 1 ஆம் மண்டபம் 5 ஆம் இலக்க பரீட்சை அறையில் இடம்பெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட பரீட்சைத் திணைக்கள உயர் அதிகாரிக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது, ‘அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையில் பதவி உயர்வுக்கான தடைதாண்டல் பரீட்சை கடந்த 19 ஆம் திகதி மிலாகிரிய புனித போல்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. பரீட்சைகள் திணைக்களமே இந்தப் பரீட்சையை நடத்தியது. பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்பு இரு மேற்பார்வையாளர்களால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் காதுகளை மூடி ஆடை அணிந்திருப்பதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
முதலாவது வினாத்தாள் காலை 9 மணிக்கு வழங்கப்பட்டு காலை 11 மணிக்கு நிறைவுற்றது. முதலாவது வினாத்தாளுக்கு விடையளிக்கும் சந்தர்ப்பத்தில் எந்த பிரச்சினைகளும் உருவாக்கப்படவில்லை. இரண்டாவது வினாத்தாள் 12 மணிக்கு வழங்கப்பட்டது. சில முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் அங்கிருந்தனர்.
பரீட்சை ஆரம்பித்து இடைநடுவில் பரீட்சை திணைக்களத்தைச் சேர்ந்தவர் எனக் கூறுப்படும் உயரதிகாரியொருவர் திடீரென பரீட்சை மண்டபத்துக்குள் உள்நுழைந்தார். காதுகளை மூடி ஆடை அணிந்திருந்த முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளிடம் சென்று அவர் சப்தமிட்டு அவர்களை அச்சுறுத்தினார். காதுகளை மூடி ஆடை அணிய முடியாது என்றார். உங்களுக்குப் பாடம் படிப்பிக்கிறேன் எனக்கூறி முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளை தனது கையடக்கத் தொலைபேசியில் படம் எடுத்தார்.
அத்தோடு ஒரு கடதாசியில் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகளின் பரீட்சை இலக்கங்களைக் குறித்துக்கொண்டார். இதனால் முஸ்லிம் பெண் பரீட்சார்த்திகள் மாத்திரமல்ல அங்கு பரீட்சை எழுதிய ஏனைய பரீட்சார்த்திகளும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினார்கள்.
பரீட்சை எழுதியதும் பரீட்சார்த்திகள் சம்பந்தப்பட்டவரிடம் சென்று அவரது பெயர், பதவி என்னும் விபரங்களைக் கேட்டார்கள். அதற்கு மறுப்புத் தெரிவித்த அவர் தான் சுற்று நிருபத்துக்கு அமையவே செயற்படுவதாகக் கூறினார். சுற்று நிருபத்தைக் காண்பிக்குமாறு பரீட்சார்த்திகள் கோரியபோதும் அவர் மறுத்தார். பரீட்சார்த்திகளில் சிலர் அவரது புகைப்படத்தை தமது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து கொண்டார்கள். குறிப்பிட்ட பரீட்சைத் திணைக்களத்தின் உயர் அதிகாரி தொடர்ந்து பரீட்சைகளின் போது இவ்வாறு இனவாதமாக செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்