எம்.பி.பதவி, கட்சி உறுப்புரிமை பறிப்பு
ஏ.எச்.எம்.பௌஸி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்: மார்ச் 23 இல் விசாரணை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.பெளசி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை மற்றும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றியமையை வலிதற்றதாக உத்தரவிடும்படி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவினை எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்குழு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளசியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று முன்தினம் உயர்நீதிமன்றின் நீதியரசர்கள் எஸ்.துரைராஜா, விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டதுடன் மனுவினை விசாரிக்க தீர்மானிக்கப்பட்டு இவ்வாறு திகதி நிர்ணயிக்கப்பட்டது.
மனு தொடர்பாக ஏதும் எதிர்ப்புகள் இருந்தால் அவற்றை நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கும்படி மனுவின் பிரதிவாதிகளுக்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
குறிப்பிட்ட மனுவின் பிரதிவாதிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அக்கட்சியின் ஒழுக்காற்றுக்குழு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க உட்பட 14 பேர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரரான ஏ.எச்.எம்.பெளசி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராவார். அவர் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்தவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி செயற்பாட்டாளராக விளங்கியவர். இந்நிலையில் அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டதாகத் தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர மனுதாரருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பில் கட்சிக்கு விளக்கமளிக்குமாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்துக்கு மனுதாரரான பெளசி பதிலும் அனுப்பி வைத்துள்ளார். பின்பு இது தொடர்பில் கட்சியின் ஒழுக்காற்று குழு ஆராய்ந்து பெளசியை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளதாக அவருக்கு அறியக் கிடைத்துள்ளது. என்றாலும் அவருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மேலும், அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கும்படி கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற பொதுச்செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என்பது மனுதாரருக்கு அறியக் கிடைத்துள்ளது.
அதனால் தன்னை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமை, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இல்லாமற் செய்துள்ளமை ஆகிய தீர்மானங்களை வலிதற்றதாக உத்தரவிடும்படி ஏ.எச்.எம்.பெளசி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஏ.எச்.எம்.பெளசி விடிவெள்ளிக்குக் கருத்து தெரிவிக்கையில் ‘நான் கடந்த 45 வருட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இருக்கிறேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தேன். கட்சித் தலைவரின் சுயநலம் கருதியே என்னை கட்சியிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளார்கள்.
நான் கட்சியின் உறுப்புரிமைக்கான சந்தாப்பணம் தொடர்ந்தும் இதுவரை செலுத்தி வருகிறேன். நான் கட்சிக்கு எந்தத் துரோகமும் செய்யவில்லை. கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் இன்று அமைச்சுப் பதவிகளைக்கூட வகிக்கிறார்கள். எனது உரிமைகளுக்காக நான் தொடர்ந்தும் போராடுவேன் என்றார்.
இதேவேளை, கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களை மீறி ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சிக்கும் ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு எதிர்வரும் 1 ஆம் 8 ஆம் திகதிகளில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்