மலேசியப் பிரதமர் கலாநிதி மஹதிர் முகம்மத் சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கொன்றில் உரையாற்றும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். “இஸ்லாத்தின் எதிரி முஸ்லிம்களுக்குள் தான் இருக்கிறான்”. எதிரிகள் பலர் இருக்கலாம். அவர்களுள் அண்மைக்காலங்களில் இலங்கையில் இஸ்லாத்தின் பெயரால் மெளட்டீகக் கொள்கைகளை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பரப்பிவரும் ஒரு சில மெளலவிகள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இலங்கையில் நடைமுறையிலுள்ள பாலர் கல்வி முறை, பாடசாலை கல்வி முறை, உயர்கல்வி முறை என்பவற்றை மேலைத்தேய கல்விமுறை எனவும் யூதர்களின் கல்வி முறை எனவும் கூறி கல்வியில் முன்னேறி வரும் முஸ்லிம் சமூகத்தை அதைரியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இலங்கை முஸ்லிம்களை கல்வியில் பிற்போக்குடைய சமூகமாகப் பின் தள்ளவும் முயல்கின்றனர். அதேபோல் வைத்தியம், சுகாதாரம்போன்ற சேவைகளைப் பயன்படுத்தி ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் நலன்களுக்கு தடைபோட்டு முஸ்லிம் சமூகத்தை நோயாளிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு குழுவினர் குர்ஆன், ஹதீஸ் என்பவற்றுக்கு மொழி ரீதியாக நேரடியாகப் பொருள் கொடுத்து பிழையான “ஷரீஆ” கொள்கைகளை முன்வைத்து புதிய கலாசாரங்களை அறிமுகம் செய்து பெரும்பான்மை மக்கள் மத்தியில் வெறுப்பையும் இனவெறியையும் தூண்டி வருகின்றனர்.
பிறிதொரு குழுவினர் முஸ்லிம்களது தனித்துவம் என்பதை ஊதிப்பெருப்பித்து முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தஃவா என்ற பெயரில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு சவால் விடுக்கின்றனர். உண்மையில் அவர்கள் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தை புதை குழியை நோக்கியே அழைத்துச் செல்கின்றனர்.
1945ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழு தனது அறிக்கையில் இலங்கையில் கல்வியில் பின்தங்கிய இரு இனங்களாக கண்டிச் சிங்களவர், இலங்கை முஸ்லிம்கள் என அடையாளம் காட்டியது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சுமார் 200 வருடங்களாக முஸ்லிம்கள் மேலைத்தேய ஆங்கிலக் கல்வியை புறக்கணித்தனர். அக்கல்விமுறை கிறிஸ்தவ சமயத்துக்கு மத மாற்றம் செய்யும் நோக்குடையதாக அமைந்ததால் அப்போதைய சூழ்நிலையில் இப்புறக்கணிப்பு நியாயமானது. ஆனால் பிற்காலங்களில் மனச்சாட்சி சட்டகம் (Conscience law) மூலம் அரச பாடசாலைகளில் ஒவ்வொரு சமயத்தை சேர்ந்த பிள்ளைகளும் தமது சமயத்தை கற்க அனுமதி வழங்கப்பட்டதுடன் பெற்றோர்களின் விருப்பமின்றி கிறிஸ்தவ சமயத்தை கற்பிப்பதும் தவிர்க்கப்பட்டது.
இதனால் பெளத்த, ஹிந்து மக்களைப் போலவே முஸ்லிம்களும் கல்வியில் சிறிது அக்கறை காட்டத்துவங்கினர். அக்காலத்தில் நாடு முழுவதும் தேசியக்கல்வி முறை ஒன்று தோற்றம் பெற்றது. அநகாரிக தர்மபால போன்றோர் பெளத்த பாடசாலைகளையும் ஆறுமுகநாவலர் போன்றோர் ஹிந்து பாடசாலைகளையும் சித்தி லெப்பை முகம்மதிய பாடசாலைகளை (முஸ்லிம் பாடசாலைகள்) அமைப்பதற்கும் முன்வந்தனர்.
இருப்பினும் முஸ்லிம்கள் கல்வியில் காட்டிய அக்கறைபோதவில்லை. ஆகவே எம்.டி அப்துல்காதர், அப்துல் ரஹ்மான், T.B ஜாயா போன்றோர் முஸ்லிம்களுக்கென பாடசாலைகளை ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து சேர் ராசிக் பரித், பதியுதீன் மஹ்மூத், ஏ.எம்.ஏ அசீஸ், சாபி மரிக்கார் போன்ற தலைவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் கல்வியில் விழிப்புணர்ச்சியை எற்படுத்துவதற்கு பெரிதும் உழைத்தனர்.
இப்பெரியார்களின் தியாகத்தால் நாம் இன்று கல்வியில் முன்னேறி வருகின்றோம். ஏனைய சமூகங்களுடன் ஒப்பீடு செய்யும்போது இது திருப்தி தருவதாக இல்லை. க.பொ.த. சாதாரண / உயர் தரபரீட்சைகளில் சில முஸ்லிம் பிள்ளைகள் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளபோதும் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், தொழிநுட்பம், ஆங்கில மொழி, முதல் மொழி என்பவற்றில் சித்தியடையாத மாணவர்களில் முஸ்லிம் மாணவர்களின் விகிதாசாரம் அதிகமாகக் காணப்படுகிறது.
அதேபோல் மருத்துவம், பொறியியல், தொழிநுட்பம், விஞ்ஞானத்துறைகளுக்கு பல்கலைக்கழக அனுமதி பெறும் முஸ்லிம் மாணவர்கள் குறைவாகவே உள்ளனர். உதாரணமாக 1946 ஆம் ஆண்டு மருத்துவத்துறையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர் 3.1% மாகும். எழுபது வருடங்களுக்கு பின்பும் மருத்துவ பீட அனுமதி இன்னும் 3% க்கு சற்று அதிகமாகவே இருக்கின்றது. மாவட்ட கோட்டா முறை காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. பொறியியல், விஞ்ஞானம், தொழிநுட்பம், கட்டடக்கலை போன்ற துறைகளுக்கு முஸ்லிம் மாணவர் அனுமதி இன்னும் சனத்தொகை விகிதாசாரத்தை (7.8%) எட்டவில்லை. தொழிநுட்பக் கல்லூரிகளுக்கு அனுமதிபெறும் முஸ்லிம் மாணவர் தொகை கிட்டத்தட்ட 2% கீழ் காணப்படுகிறது.
தற்போதைய அரசு பல்கலைக்கழக அனுமதியை இரண்டு மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் விஞ்ஞானம், தொழிநுட்பம், தன்னியக்க பொறியியல் என்பவற்றுக்கு கூடிய முக்கியமளிக்கவுள்ளது. இவ்வாறான சூழலில் பல்கலைக்கழகங்களுக்கும் தொழிநுட்பக் கல்லூரிகளுக்கும் அனுமதி பெறும் முஸ்லிம் மாணவர் தொகையை இரட்டிப்பாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் சமூகம் ஆயத்தமாகவுள்ளதா? அதற்கு எவ்வாறான திட்டங்களளை வகுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ள நிலையில் உலகக் கல்வியை மேலைத்தேய கல்வி, யூதர்களின் கல்வி முறை என மெளட்டீக மெளலவிகள் பிரசாரம் செய்வது வேதனை தரும் ஒரு செயற்பாடாகவுள்ளது. இந்த பிற்போக்கு சக்திகளை இனம் கண்டு தண்டிப்பது அல்லது தடுப்பது எப்படி என்பது பற்றி முஸ்லிம் புத்திஜீவிகளும் ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
மலைநாட்டை சேர்ந்த மெளட்டீகக் கொள்கையுடைய ஒரு மெளலவி ‘‘பாடசாலைக் கல்வி சைத்தானுடைய கல்வி, அதன் கலைத் திட்டம் யூதர்களால் தயாரிக்கப்பட்டது. ஆகவே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்’’ என குத்பாக்களில் பகிரங்கமாகக் கூறுகின்றார். ஒளிப்பதிவு நாடாக்கள் மூலம் பிரசாரம் செய்கின்றனர். எமது பிள்ளைகளுக்கு பாடசாலைக் கல்வி அவசியமில்லை. மத்ரஸாக்களுக்கு பிள்ளைகளை அனுப்புங்கள் எனவும் பாமர முஸ்லிம் பெற்றோர்களை திசை திருப்ப முனைகின்றனர்.
இஸ்லாம் மார்க்க கல்வியை கற்குமாறே வலியுறுத்துகிறது என பிழையான விளக்கம் கொடுக்கின்றனர். கிராமப் புறங்களில் வாழும் முஸ்லிம் பெற்றோர் இதனால் அதைரியப்படுத்தப்படுகின்றனர். மூதூரில் செங்கல் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு தகப்பன் இவ்வாண்டு தனது மகளை மருத்துவ பீடத்துக்கு அனுப்ப முயல்கிறார். இந்த அளவுக்கு கல்வியில் விழிப்புணர்ச்சி முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் சூழலில் தான் இந்த மெளட்டீக மெளலவிகளின் பிரசாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில் மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்ற பிரிவுகள் கிடையாது. இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்க்கைத் திட்டம். அது முழுமையான ஒரு கல்வி முறையின் பெருமையையும் அவசியத்தையும் பேசுகிறது. இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை மார்க்கக் கல்வி கற்ற முஸ்லிம்கள் விஞ்ஞானம், வானியல், புவியியல், கணிதம், தொழில்நுட்பம், வைத்தியம், கட்டிடக்கலை, பொறியியல் போன்ற துறைகளுக்கு பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இன்றுகூட ‘அபீசினா’ என்ற முஸ்லிம் அறிஞர் எழுதிய வைத்தியம் தொடர்பான நூல் ஆங்கிலம், ஹீப்ரு ஆகிய மொழிகளுக்கு பெயர்க்கப்பட்டு மூலநூலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
14 ஆம் நூற்றாண்டுக்குப் பின் முஸ்லிம்கள் மேலைத்தேய ஆட்சிக்குட்பட்டதால் மதமாற்றத்துக்கு அஞ்சி மேலைத்தேயக் கல்வியை அவர்கள் புறக்கணித்து மார்க்கக் கல்வியை மட்டும் வழங்கும் மத்ரஸாக்களை அமைத்தனர். இப்போது இச்சூழ்நிலை மாறி கல்வியில் தாராளத்தன்மையும் சுதந்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளன. ஆகவே, மத்ரஸாக்கள் பழைய அமைப்பிலே இயங்க வேண்டும் என்ற அவசியமில்லை. மலேசியா, இந்தோனேசியா, புரூணை மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களை அமைத்து வருகின்றன.
காலி மாவட்டத்தில் பெளத்த பிரிவேனாவில் கற்கும் ஒரு மாணவன் விஞ்ஞான கண்டுபிடிப்பு ஒன்றை செய்துள்ளார். அதபோல் பாகிஸ்தானில் தக்சிலா பல்கலைக்கழகம் நடத்திய தானியங்கும் விஞ்ஞானம்/ இயந்திர மனிதன் தொடர்பான போட்டியில் ஜாமியா பைத்துஸ் ஸலாம் என்ற மத்ரஸாவைச் சேர்ந்த மாணவர் இவ்வாண்டு முதலிடம் பெற்றுள்ளார். மலேசியாவில் இஸ்லாமியக் கல்வி பெற்ற விஞ்ஞானிகள் 1000 க்கு அதிகமான கண்டுபிடிப்புக்களைச் செய்துள்ளனர். நமது மத்ரஸா மாணவர் விஞ்ஞானம் கற்க முடியாதவர்களோ, மந்த புத்தியுள்ளவர்களோ அல்லது சிந்திக்கத் தெரியாதவர்களோ அல்லர். அவர்களுக்கு மத்ரசாக்களில் கொடுக்கும் கல்வி தான் இந்த நிலைக்கு அவர்களை மாற்றியுள்ளது. ஆகவே மெளட்டீக மெளலவிகள் ஒரு சிலரைப்பற்றிய கலந்துரையாடலில் இவர்கள் எங்கிருந்து வெளியேறுகின்றனர் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.
சென்ற வாரம், தெஹிவளையில் உள்ள ஒரு பள்ளிக்கு ஜும்ஆவுக்கு சென்றிருந்தேன். அங்கு உரையாற்றிய மெளலவி பின்வருமாறு கூறினார். பாலர் கல்வியின் முன்னோடி ‘மரியா மொண்டிசூரி அம்மையார்’ ஒரு யூதப்பெண்மணி எனக்கூறி, நடைமுறையிலுள்ள பாலர் கல்வி முறைபற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஒரு மனிதன் தனது அறியாமை பற்றி அறியாமல் இருப்பது தான் உலகில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாகும். இன்று உலகில் முஸ்லிம்கள் வாழ்க்கைக்கு உபயோகிக்கும் அத்தனை கருவிகளும், துணைச்சாதனங்களும் வாகனங்களும் யூதர்களதும் முஸ்லிம் அல்லாதவர்களின் கண்டுபிடிப்புகளே. நமது மெளலவிகளுக்குள்ள தனிச்சிறப்பு, யாராவது ஒரு விஞ்ஞானி ஒன்றை கண்டுபிடித்த பின் இது ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதே என வெட்கம் இன்றி பெருமை பேசுகின்றனர். சென்ற ஐநூறு வருடங்களாக முஸ்லிம்களோ, முஸ்லிம் நாடுகளோ எதையும் கண்டுபிடித்தார்களா என்பதற்கு ஆதாரங்கள் மிகக்குறைவாக உள்ளன. அல்குர்ஆன் 500 க்கு சற்று கூடிய இடங்களிலே ஏவல் விலக்கல் பற்றி குறிப்பிடுகிறது. 1000 க்கும் மேற்பட்ட இடங்களில் உலகையும், உலகில் வாழும் ஜீவராசிகளைப் பற்றியும் சிந்திக்குமாறு அறை கூவல் விடுக்கிறது. இது எப்போது எமது காதுகளில் விழப்போகிறதோ எப்போது நாம் சிந்திக்கப் போகிறோமோ தெரியாது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு மெளலவி, பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுகிறது எனவும், உங்கள் பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இந்த செய்தி அறிந்ததும் நான் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பலருடன் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அது ஒரு கட்டுக்கதை என்பது தெரிய வந்த பின் அந்த மெளலவி மெளனமாகிவிட்டார். திரும்பவும் ஒரு சில மாதங்களுக்கு பின் புத்தளத்தைச் சேர்ந்த மற்றொரு மெளலவி இதே கதையைக் கூறி வருகிறார். கருத்தடை, கருச்சிதைவு என்பன இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியிலும் ஏனைய சமூகங்கள் மத்தியிலும் நடைபெற்று வருகின்றன. அதற்கு தனிப்பட்ட காரணங்கள், சமூகக் காரணங்கள் இருக்கலாம். இதை பல்கலைக்கழகங்களுடன் தொடர்புபடுத்தி முஸ்லிம் பெண் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வதை ஏன் இவர்கள் தடுக்க வேண்டும். இவர்களது உள்நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சில மெளட்டீக மெளலவிகள் மற்றொரு புரளியையும் கிளப்பிவிட்டுள்ளனர். நோய்த் தடுப்பு ஊசிகளில் ஹராமான திரவங்கள்/ இரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதால் தடுப்பூசி ஏற்றுவது மார்க்கத்துக்கு முரணான செயல் எனக் கூறிவருகின்றனர். இதனால் பல முஸ்லிம் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு முக்கூட்டு தடுப்பூசி ஏற்றுவதையும் போலியோ மருந்து கொடுப்பதையும் தவிர்த்து வருகின்றனர். இதனால் அதிகமான முஸ்லிம் சிறுவர்கள் நோய்களுக்கு உட்பட்டு வருவதாக அண்மைக்கால தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. இது தொடர்பான ஒரு பகுப்பாய்வை ஒரு முஸ்லிம் நிறுவனம் நடத்தினால் இதனை உறுதிப்படுத்த முடியும். மேலை நாடுகளிலிருந்து/ வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளை நாம் கண்மூடித்தனமாக உபயோகிக்கக்கூடாது. ஹராமான திரவங்கள் அவற்றில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். இதனை அரைகுறையாக மார்க்கம் கற்றவர்களால் தீர்மானிக்க முடியாது. முஸ்லிம் நாடுகளிலுள்ள பல்கலைக்கழக மருத்துவ பீடங்கள் இது பற்றி பரிசீலனை செய்து பத்வாக்களை வழங்கியுள்ளன. இடையில் உள்ளோர் நுனிப்புல் மேய வேண்டிய அவசியம் இல்லை.
பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மகப்பேற்று வைத்தியர் ஒருவர் மற்றொரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருந்தார். மகப்பேற்றுக்காக கொழும்பு காசல், சொய்சா வைத்தியசாலைகளுக்கு சில முஸ்லிம் கர்ப்பிணிகள் இறுதிக் கட்டத்திலே அனுமதிக்கப்படுவதாயும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே தாயினதும் பிள்ளையினதும் உயிரைக்காப்பாற்ற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். நீங்கள் ஏன் உரிய காலத்துக்கு முன் வைத்தியசாலையில் அனுமதிப்பதில்லை எனக் கேட்டபோது எங்களது மார்க்கத்தின்படி மனைவியின் மகப்பேற்றை கணவனே கவனிக்க வேண்டும். முடியாத கட்டத்தில்தான் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என சில கணவன்கள் குறிப்பிட்டதாக அவர் தகவல் வெளியிட்டிருந்தார். இவர்களுக்கு மார்க்கம் சொல்லிக் கொடுத்தவர்கள் யார்?
அனுராதபுரத்தில் முஸ்லிம் குடும்பமொன்றில் வீட்டில் பிரசவம் நடந்தபோது உயிர் இழந்த பிள்ளை பற்றிய விசாரணைகள் நடைபெறுகின்றன. சென்ற வாரம் பத்திரிகைகளிலும் பதிவு நாடாக்கள் மூலமும் செய்திகள் வெளிவந்தன. வீட்டில் பிரசவம் நடைபெறுவது புதிய விடயமல்ல. சென்ற 50 வருடங்களுக்கு முன் எனதுதாய் கூட எல்லா பிள்ளைகளையும் மருத்துவ தாதியின் உதவியுடன் வீட்டிலேதான் பிரசவித்தார். இன்னும் சில கிராமப்புறங்களில் இது நடைபெறுகிறது. தற்போது வைத்திய வசதிகள் பெருகியுள்ளன. வைத்தியர்கள் அதிகமாக உள்ளனர். மகப்பேற்று வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே ஏனைய சமூகத்தைச் சேர்ந்தோர் அனைவரும் இந்த இலவச வசதிகளைப் பயன்படுத்தி வைத்தியசாலைகளுக்கே குழந்தை பிரசவத்துக்காக செல்கின்றனர். ஆனால் இன்னும் சில முஸ்லிம்கள் அந்நிய ஆடவருக்கு வைத்தியருக்கு தமது உடலை காட்டுவது பாவமான செயல் எனக் கூறி வைத்தியசாலைகளுக்கு செல்வதில்லை. இதனால் பல தாய், சேய் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது எண்ணிச் செய்யாத கொலையாக இருந்தாலும் சட்ட ரீதியில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.
ஆகவே மார்க்கம் சொல்லிக் கொடுக்கும் மெளலவிகள், மார்க்கத்தை மட்டும் சொல்லாது நாட்டிலுள்ள வைத்திய வசதிகள், இது தொடர்பான சட்டங்களையும் குத்பாக்களில் குறிப்பிட வேண்டும். இவற்றையெல்லாம் மத்ரசாக் கலைத் திட்டங்களில் உள்ளடக்க வேண்டும். இல்லாவிடில் உலமாக்கள் சமூகப் பிரச்சினைகள், நாட்டின் சட்டங்கள் பற்றி பராமுகமாக இருந்து விடுவர். இதனால் பாமர முஸ்லிம்கள் சட்டத்தின் பிடியில் அகப்பட்டு தண்டனைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
சென்ற வாரம் திடுக்கிடும் தகவல்களை தரும் மற்றொரு காணொலி எனக்குக் கிடைத்தது. அதில் ஒரு மெளலவி, பின்வருமாறு குறிப்பிடுகிறார் ‘‘டெங்கு நுளம்பு, டெங்கு காய்ச்சல் என இப்போது அதிகம் பேசுகின்றனர். அதற்குப் பயப்படுகின்றனர். அப்படி ஒரு நுளம்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அல்லாஹ் எந்த உயிரையும் தேவையில்லாமல் படைக்கவில்லை’’ எனக் குறிப்பிடுகிறார். தற்போது உள்ளூராட்சி மன்ற சுகாதார வைத்திய அதிகாரிகள், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று ‘டெங்கு நுளம்பு‘ பெருகும் இடங்களைத் தேடி வருகின்றனர். அது கண்டுபிடிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கின்றனர். இந்த மெளலவியின் விளக்கம் முஸ்லிம்கள் நீதிமன்றங்களில் தண்டனை பெறுவதற்கு வழிசெய்யும். இந்த ஒரு சில மெளலவிகளின் மெளட்டீகக் கொள்கைகள் முஸ்லிம்கள் நாட்டின் சட்டங்களை மதிப்பதில்லை என்ற வெறுப்பை மேலும் அதிகரிக்கும்.
இந்த மெளட்டீகக் கருத்துக்களை வெளியிடும் ஒரு சில மெளலவிகள் பற்றி ஜம்இய்யத்துல் உலமா ஏன் மெளனம் சாதிக்கிறது. மெளட்டீகம் பேசும் மெளலவிகள் எல்லாம் ஜம்இய்யத்துல் உலமா அங்கத்தவர்கள் அல்ல என்பதும் அதே நேரம் சிந்திக்கும் புத்திஜீவிகள் எல்லோரும் ஜம்இய்யத்துல் உலமாவில் அங்கம் வகிக்கவில்லை என்பதும் நாமறிந்தது. ஆகவே இந்த மெளட்டீகக் கருத்துக்களை வெளியிடும் மெளலவிகள் ஜம்இய்யத்துல் உலமா அங்கத்தவர்கள் அல்ல என அலட்சியம் செய்யாது இதற்கு எதிராக குத்பா மேடைகளை பயன்படுத்துமாறு சகல பள்ளிவாசல் கதீப்மார்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும். புத்திஜீவிகள் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்.
குறிப்பு : இங்கு நான் ஒரு சில மௌட்டீக மௌலவிகளையே குறிப்பிடுகிறேன். இவர்களைப் பற்றியே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். பெரும்பான்மையான மௌலவிகள், உலமாக்கள் பரந்த பொதுச் சிந்தனையுடனே செயற்படுகின்றனர். மௌடீகம் பேசுபவர்களுடன் நான் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடத் தயாரில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.-Vidivelli
- பேராசிரியர் எ.ஜி. ஹுசைன் இஸ்மாயில்
(முன்னாள் துணைவேந்தர், தென் கிழக்குப் பல்கலைக்கழகம்)