முதலிடம் பெற்ற மாணவி முஸாதிகாவுக்கு புதிய வீடு நிர்மாணிக்க அடிக்கல் நடப்பட்டது
இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூர்ய பங்கேற்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் 01 ஆம் இடம்பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவான மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிகாவுக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிசையில் வாழ்ந்து வரும் குறித்த மாணவி மற்றும் அவரது குடும்பத்தின் நிலைமையைக் கருத்திற்கொண்டு சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தின் உதவியுடன் இவ்வீடு நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கமைய புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சமூக பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தலைமையில் சனிக்கிழமை மாலை மூதூரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய உரையாற்றும்போது, வறுமை கல்விக்கு தடையல்ல என்பதை சாதித்துக் காட்டிய மாணவி முஸாதிகா பற்றி ஊடகங்கள் மூலம் அறியக் கிடைத்து சந்தோசமடைந்தேன். அதனடிப்படையில்தான் இங்கு வந்தேன். உண்மையில் இம்மாணவி ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். இவரது கல்வி நடவடிக்கைகளுக்கு அமைச்சின் மூலமாகவும், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள் மூலமாகவும் எங்களாலான பூரண ஒத்துழைப்புக்களை வழங்க தயாராகவுள்ளோம் என்றார்.-Vidivelli
- எம்.என்.எம்.புஹாரி