மதவாதத்தில் ஆட்சி பீடமேறிய அரசாங்கத்தால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதுள்ளது
பிணைமுறி மோசடியாளர்களை ஏன் கைது செய்யவில்லை எனவும் ஐ.தே.க. கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மையப்படுத்தி மதவாதத்தை தூண்டி ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமலுள்ளதெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, ஆட்சிக்குவந்த இருநாட்களில் பிணைமுறி மோசடியாளர்களை கைதுசெய்வதாக மார்தட்டியது. ஆனால் இன்றுவரை எந்தக் கைதும் இடம்பெறவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சீ. அலவத்துவல மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. இதுதவிர ஆகக்குறைந்தது வாக்குறுதிளை நிறைவேற்றுவதற்கு ஏதுவான திட்டங்களையேனும் வகுத்துள்ளார்களா என்ற கேள்வி எழுகின்றது.
மத்தியவங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்களை தாம் ஆட்சிக்கு வந்த இருநாட்களுள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக தற்போதைய ஆளும் தரப்பினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது கூறிக்கொண்டனர். ஆயினும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. பாரியளவில் நிதி செலவிடப்பட்டு கோப் குழுவின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. கோப் குழு அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. இந்த அரசாங்கம் அதனை மூடிமறைக்கும் வகையிலான செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றது. அதேபோல், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை மையமாகக் கொண்டு அரசியல் இலாபம் தேடவே இவர்கள் முயற்சித்தனர். தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை மையமாகக்கொண்டு எமது அரசாங்கத்தின்மீது குற்றஞ்சுமத்தினர். தாம் ஆட்சிக்குவந்தால் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்துவதாகவும், அந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை தமது அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளப் போவதில்லையெனவும் கூறினர். எமது அரசாங்க செல்வாக்கின் காரணமாக குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாகவும் கூறிக்கொண்டனர். அவ்வாறெனின் இப்பொழுது அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமே. எதற்காக இதுவரையில் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னரான நிலைமையே தற்போதும் காணப்படுகின்றது. அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்தே மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர். ஆயினும், மக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல் பதிவுகளை வெளியிடுவதன் ஊடாக மக்களுடைய பிரச்சினைகளை மூடிமறைக் கின்றனர் என்றார்.-Vidivelli