அமெரிக்க – ஈரான் பதற்ற நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம்
அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டின் தாக்கம் மத்தியகிழக்கு நாடுகளிலும் தற்போது செல்வாக்கு செலுத்தியுள்ளது. இதன் காரணமாக எரிபொருளின் விலை அதிகரிக்கக் கூடும். பல நெருக்கடிகளுக்கு மத்தியிலே அரசாங்கம் இன்று எரிபொருளின் விலையைக் குறைந்த விலைக்கு வழங்குகின்றது. எனினும், அடுத்துவரும் சில தினங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கலாமென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதன் தாக்கம் மத்திய கிழக்கு நாடுகளிலும் செல்வாக்கு செலுத்தும். இந்நிலைமையினால் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஏற்படுத்தப்படலாம். இந்நிலைமையை முகாமைத்துவம் செய்யத் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.
20 நாட்களுக்குப் போதுமானளவிலான எரிபொருள் மாத்திரமே தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளது. நாட்டு மக்களின் பாவனைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இந்நிலைமையை அரசாங்கம் முறையாகக் கையாளும். தற்போது எரிபொருள் குறைந்த விலையிலே வழங்கப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் பாரிய நிதியை தற்போது செலவிடுகின்றது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும்போது நாம் மாத்திரம் குறைந்த விலைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது. சர்வதேச சந்தையின் விலை நிர்ணயத்திற்கு அமையவே எரிபொருளின் உள்ளூர் விலையைத் தீர்மானிக்கமுடியும். இவ்விடயத்தில் ஒருபோதும் அரசியல் விடயங்கள் செல்வாக்கு செலுத்தமுடியாது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முரண்பாடுகள் தற்போது பேச்சுவார்த்தையினூடாக சுமுக நிலைக்கு வந்துள்ளமை அவதானிக்க முடிகின்றது. எவ்வாறிருப்பி னும் இரு நாடுகளும் சமாதானமாகவும், நட்புறவுடனும் இணைந்து செயற்பட வேண்டுமென்ற கோரிக்கையை அரசாங்கம் என்ற ரீதியில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.-Vidivelli