பயங்கரவாதி சஹ்ரானின் பிரதான சகாக்கள் இருவரை டுபாயில் கைது செய்த சி.ஐ.டி. குழு
நாட்டுக்கு அழைத்து வந்து தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கும் பணிகள் ஆரம்பம்
4/21 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடாத்திய பிரதான பயங்கரவாதியான ஸஹ்ரான் ஹாஷிமின் பிரதான இரு சகாக்களை ஐக்கிய அரபு அமீரகம் சென்று கைதுசெய்துள்ள சி.ஐ.டி. சிறப்புக் குழு, அவர்களை இலங்கைக்கு அழைத்துவந்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டிலிருந்து தப்பியோடியதாகக் கூறப்படும் இருவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவர்களை 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை நேற்று பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இற்றைக்கு நான்கு நாட்களுக்கு முன்னர், சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேன தலைமையில் பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார மற்றும் சார்ஜன் நந்தலால் உள்ளிட்ட குழுவினர் இவர்களைக் கைதுசெய்ய ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளனர். இந்நிலையிலேயே அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் குறித்த இருவரையும் கைது செய்துள்ள அவர்கள், சந்தேக நபர்களை டுபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்துவந்தனர்.
நாவலபிட்டி, – ஹப்புகஸ்தலாவை பகுதியைச் சேர்ந்த 30 வயதான மொஹமட் சலீம் அப்துல் சலாம், அம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதான மொஹமட் ஸஹான் மொஹமட் றியாஸ் அகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணைகள் இடம்பெறுவதாக நான்காம் மாடியின் குறித்த உயரதிகாரி கூறினார்.
நேற்றைய தினம் அவ்விருவரும் சட்டவைத்திய அதிகாரி ஒருவர் முன்னிலையிலும் முன்னிலைப்படுத்தப்பட்டு அறிக்கையும் பெறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாடுகளிலிருந்த பயங்கரவாத சந்தேக நபர்கள் 6 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவருடன் சேர்த்து அந்த எண்ணிக்கை தற்போது எட்டாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு மேலதிகமாக சுமார் 65 பயங்கரவாத சந்தேக நபர்கள் உயிர்த்தஞாயிறு விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புபட்டமை, உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுகளின் கீழ் தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, கடந்த ஜூன் 14 ஆம் திகதி 5 பயங்கரவாத சந்தேக நபர்களை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து சி.ஐ.டி. நாட்டுக்கு அழைத்துவந்தது.
30 வயதான புதிய காத்தான்குடி – 2 எனும் முகவரியைச் சேர்ந்த தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் ஆயுதப்பிரிவுத் தலைவனாகக் கருதப்படும் ஹயாத்து மொஹமட் அஹமட் மில்ஹான் அல்லது மொஹமட் மில்ஹான், 34 வயதான மருதமுனை – 3 ஐச் சேர்ந்த மொஹமட் மர்சூக் மொஹமட் ரிழா, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 47 வயதான மொஹமட் முஹிதீன் மொஹமட் சன்வார் சப்றி, 29 வயதான காத்தான்குடி – 1 ஐச் சேர்ந்த மொஹமட் இஸ்மாயில் மொஹமட் இல்ஹாம், அனுராதபுரம் கெப்பித்திகொல்லாவையைச் சேர்ந்த 37 வயதான அபுசாலி அபூபக்கர் ஆகிய ஐந்து பயங்கரவாத சந்தேக நபர்களே சவூதியிலிருந்து இவ்வாறு கைது செய்யப்பட்டு நடடுக்கு அழைத்து வரப்பட்டவர்களாவர்.
அதன் பின்னர் கடந்த ஜுலை 16 ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட மாவனெல்லையைச் சேர்ந்த சமத் எம் றியாஸ் எனும் சந்தேக நபர் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஐ.எஸ். ஐ.எஸ். எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய இலங்கையர்களின் வலையமைப்பின் பிரதான நபராகக் கருதப்படும் ஒருவரை, 4/21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து கட்டார் பொலிஸார் கைதுசெய்து தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாப் எனும் குறித்த சந்தேக நபரே இவ்வாறு கட்டார் பொலிஸ் நிலையமொன்றால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது சி.ஐ.டி. பொறுப்பில் விசாரிக்கப்பட்டுவரும் தேசிய தெளஹீத் ஜமாஅத் முக்கிய உறுப்பினர் பஸ்ஹுல் ஸஹ்ரானும் குறித்த சந்தேக நபரும் கட்டாரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேணியுள்ளமை தெரியவந்துள்ள நிலையில், கட்டாரில் தடுப்பிலுள்ள சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்துவந்து விசாரிக்கும் பணிகளை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே கட்டாரில் தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் அன்வர் மொஹமட் இன்சாபுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மாவனெல்லையைச் சேர்ந்த சமத் மொஹமட் றியாஸ் என்பவர் கட்டார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதம் தடுப்புக்காவல் விசாரணைகளின் பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர் கடந்த ஜுலை 16 ஆம் திகதி விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் கைது செய்து தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகின. கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவாப்பிட்டி – புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்கான கிறிஸ்தவ தேவாலயங்களாகும்.
இதனைவிட கொழும்பு காலிமுகத் திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய மூன்று, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
இந்நிலையில் அன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சிசாலைக்கு முன்பாகவுள்ள ‘நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதாரண தங்குவிடுதி கொண்ட ஹோட்டலில் குண்டுவெடிப்பு சம்பவம் பதிவானது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்குவைத்து தெமட்டகொட, மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்ப்ட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் சி.ஐ.டி.யின் 15 சிறப்பு குழுக்களும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவும் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சாட்சிகளின் பிரகாரம் வெளிப்படுத்தப்பட்ட தகவலுக்கு அமையவும் டி.என்.ஏ. சோதனைகள் பிரகாரமும் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவலயத்தில் தற்கொலை தாக்குதல் நடாத்தியவர் இலக்கம் 121/3, சென்ட்ரல் வீதி, மட்டக்குளி எனும் முகவரியைக் கொண்ட அலாவுதீன் மொஹம்மட் முவாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது பெற்றோரின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைப் பெற்று முன்னெடுக்கப்பட்ட பகுப்பாய்வுகளில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தற்கொலைதாரிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சகோதரர்கள், சகோதரி சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இதேவேளை, நீர்கொழும்பு, கட்டான – கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடாத்தியவர் வாழைச்சேனை, ஏ.எப்.சி. வீதியைச் சேர்ந்த அச்சு முஹம்மது மொஹம்மட் ஹஸ்தூன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹஸ்தூனின் பெற்றோரின் டி.என்.ஏ. மூலக்கூறுகள் நீதிமன்ற அனுமதியுடன் பெறப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருக்கு உதவியவர்கள் மற்றும் அவரது குடும்ப பின்னணி குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவரது மனைவியே சி.ஐ.டியால் தேடப்பட்டுவந்த நிலையில், சாய்ந்தமருது, வொலிவோரியன் வீட்டுத்திட்டத்திலுள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டோரில் அடங்கும் புலஸ்தி ராஜேந்ரன் அல்லது சாரா எனும் பெண் என்று பொலிஸார் தெரிவித்தனர். .
அத்துடன் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடாத்தியவர் கனத்தை வீதி, புதிய காத்தான்குடி எனும் முகவரியைச் சேர்ந்த மொஹமட் நசார் மொஹமட் அசாத் என உறுதி செய்யப்பட்டுள்ளார். இவரது தாயாரின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைப் பெற்று முன்னெடுக்கப்பட்ட பகுப்பாய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு – கிங்ஸ்பரி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடாத்தியவர், புதிய யோர்க் வீதி, கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 12 ஆகிய முகவரிகளைக் கொண்ட மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் என பொலிஸாரால் அடையாளம் கண்ட நிலையில், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் டி.என்.ஏ. மூலக்கூறுகளுடன் ஒப்பீடு செய்த பகுப்பாய்வில் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரது மனைவியை சி.ஐ.டி. கைது செய்துள்ள நிலையில் அவர் கணவருக்கு தற்கொலை தககுதல்கள் தொடர்பில் உதவி ஒத்தாசை வழங்கினாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஷங்ரில்லா ஹோட்டலில் இரு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் பதிவாகின. அதிலேயே இந்த தற்கொலை தாக்குதல்களை வழிநடாத்தியதாக நம்பப்படும் ஸஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்கரவாதி உயிரிந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு குண்டுதாரி மொஹமட் காசிம் மொஹமட் ஸஹ்ரானாவார்.
குடைக்கரன் ஒழுங்கை, மொஹிடீன் பள்ளிவாசல் வீதி, காத்தான்குடி 3 எனும் முகவரியைக் கொன்ட ஸஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா மற்றும் அவர்களது 4 வயது மகள் ஆகியோர் சாய்ந்த மருது வீட்டில் நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது சி.ஐ.டி.யின் பிடியில் உள்ளனர். அவர்களது டி.என்.ஏ. மூலக்கூறுகளையும் ஸஹ்ரானின் சகோதரியின் டி.என்.ஏ. மூலக்கூறுகளையும் பெற்று ஸஹ்ரானின் தலைப்பகுதியில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. மாதிரிகளுடன் ஒப்பீடுசெய்த பகுப்பாய்வில் குறித்த தற்கொலைதாரிஸஹ்ரானே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் ஷங்ரில்லா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடாத்திய மற்றையவர் தெமட்ட கொடை, பேஸ்லைன் வீதி, மஹவில கார்டின் எனும் முகவரியைக் கொண்ட மொஹமட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் என்பவராவார். இவரது சகோதரரான மொஹமட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட் சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடாத்தியிருந்தார்.
இது தொடர்பில் சி.ஐ.டி.யினர் இவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் இந்த சகோதரர்களின் தந்தையான மொஹம்மட் யூசுப் மொஹமட் இப்ராஹீம் மற்றும் அவர்களது இரு சகோதரிகளைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய இன்ஷாபின் மனைவியையும் சி.ஐ.டி. கைது செய்துள்ளது. இந்நிலையில் இவ்விரு தற்கொலை குண்டுதாரிகளினதும் அடையாளம் அவர்களது தந்தையான மொஹமட் யூசுப் இப்ராஹீமின் டி.என்.ஏ. மாதிரிகளுடன் ஒத்துப் போயுள்ளன. அதன்படி அவ்விருவரின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் தெமட்டகொடை, பேஸ்லைன் வீதி, மஹவில கார்டினில் இடம்பெற்ற மூன்று பொலிசாரின் உயிர்களைப் பறித்த தற்கொலை தாக்குதலை ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலைதாரிகளில் ஒருவரான இல்ஹாம் அஹமடின் மனைவியான பாத்திமா ஜிப்ரியா நடாத்தியுள்ளதாக பொலிசார் அடையாளம் கண்டனர். இதன்போது அவரது மூன்று பிள்ளைகளும் அங்கு உயிரிழந்துள்ளன. இவை அனைத்தும் டி.என்.ஏ. பகுப்பாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, தெஹிவளை ட்ரொபிகல் இன் எனும் தங்கு விடுதியில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலை வெலம்படை – கம்பளை மற்றும் லன்சியாஹேன வெல்லம்பிட்டி ஆகிய இரு முகவரிகளைக் கொண்ட அப்துல் லத்தீப் ஜெமீல் மொஹமட் நடாத்தியிருந்தமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் தற்கொலைதாரியின் மனைவி மற்றும் இரு சகோதரர்களை இவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதன்படி குறித்த தற்கொலைதாரியின் மனைவி, பிள்ளைகளின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைப் பெற்று செய்த பகுப்பாய்வில் அவரது அடையாளமும் உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் நடாத்திய தாக்குதல்கள் காரணமாக சுமார் 250 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 500 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பல கோடி ரூபா பெறுமதியான சொத்து சேதமும் ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்