அமைச்சரவையில் முஸ்லிம் உறுப்பினர் இல்லாமைக்கு நாம் பொறுப்பு இல்லை
பைஸரும் பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் பிரதமர்
அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் எவருமில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு நாம் பொறுப்பல்ல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக முஸ்லிம்கள் எவரும் இல்லாததால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சுப்பதவி வழங்க முன்வந்தபோதும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். நேற்று முன்தினம் தமிழ் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை பிரதமர் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் இடம்பெறாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், அமைச்சுப் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனது பட்டியலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சிபாரிசு செய்யவில்லை என்றாலும் பைசர் முஸ்தபாவுக்கு அமைச்சுப் பதவி வழங்க முன்வந்தோம். ஆனால் அவர் அதனை நிராகரித்தார். எனவே எமது அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வேண்டுமாயின் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களது தலைமைகள் எதிர்வரும் தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும்.
எமது கட்சியில் முஸ்லிம் பிரதிநிதிகளை முஸ்லிம் மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அப்போது முஸ்லிம்கள் அமைச்சரவையிலும் இடம்பெறலாம்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாம் முன்னைய நிலைப்பாட்டிலே இருக்கிறோம். அதில் மாற்றங்கள் இல்லை. ஆனால் பல தசாப்தகாலமாக தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். தமிழர்களை தமிழ் தலைவர்கள் ஏமாற்றியது போன்று நாம் ஏமாற்றத் தயாராக இல்லை.
ஜெனீவா மாநாட்டில் இம்முறை அழுத்தங்கள் இருக்காது. 2021 ஆம் ஆண்டில் தான் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அதற்குள் நாம் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வோம் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்