பள்ளிவாசலுக்குள் நுழையும் சிறுவர்களிடம் பண்பாக நடந்து கொள்வோம்

0 1,154

இளம் பரா­யத்­தி­ன­ரான சிறு­வர்கள் ஒரு குடும்­பத்­தி­னு­டைய ஏன்? சமூ­கத்­தி­னு­டைய வருங்­கால சொத்­துக்­க­ளாகும். அவர்­களை உரிய காலத்தில் சமூ­க­ம­ய­மாக்­க­லுக்கு ஏற்­ற­வாறு வழி­காட்டி, ஒளி­யூட்டி சமைத்­தெ­டுப்­பது பெற்­றோரின் பொறுப்பு வாய்ந்த கட­மை­யாகும்.

குறிப்­பாக, முஸ்லிம் சமூகம் முதற்­கட்­ட­மாக இறை­வே­த­மான புனித அல்­குர்­ஆனை கற்­றுக்­கொள்­வ­திலும் அத­னோடு இணைந்த சூறாக்கள், துஆக்­களை படிப்­ப­திலும் பாட­மாக்­கு­வ­திலும் தமது குழந்­தை­களை ஈடு­ப­டுத்­து­வது வழக்­க­மாகும். தற்­போது மக்தப் என்ற அமைப்பின் மூலம் மிகவும் அழ­காகத் திட்­ட­மிட்டு தூர­நோக்­கோடு நடத்­தப்­ப­டு­வது வர­வேற்­கத்த விட­ய­மாகும்.

இவ்­வாறு தமது பிள்­ளைகள் விட­யத்தில் கரி­சனை காட்டும் பெற்றோர் தமது குழந்­தை­களை பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அழைத்­துச்­சென்று தாம் செய்­யக்­கூ­டிய அமல்­க­ளின்­பக்கம் பயிற்­று­விப்­பதை நடை­மு­றை­களில் காண­மு­டி­கின்­றது.

சில பிள்­ளைகள் தகப்பன் இல்­லா­த­வர்கள். இவர்­களும் தாய்­மார்­களின் தூண்­டு­தலால் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு வந்­து­போ­கின்­றார்கள். தமக்குத் தெரிந்த முறையில் வுழூச் செய்து, வந்த வேகத்தில் கைகட்டி குனிந்து நிமிர்ந்து பெரி­ய­வர்கள் தொழு­வது போல் தொழு­து­விட்டு அவ­ச­ர­மாக ஓடி விடு­வார்கள்.

வேறு சில பிள்­ளைகள் பரு­வ­ம­டையாப் பால­கர்கள். பெற்­றோரை அடம்­பி­டித்து பள்­ளி­க்கு வந்து தகப்­ப­னுக்­க­ருகில் நின்று அவர் செய்­வதைப் பார்த்து இவரும் செய்வார். அங்­கு­மிங்கும் பார்ப்­பது, இரு கைக­ளாலும் அடிக்­கடி முகத்தைத் தட­வுதல், தலையைத் தட­வுதல், சொரிச்சல், கொட்­டாவி விடுதல் என ஏதோ செய்து விட்டு ஸலாம் கொடுப்பார்.

இப்­படி சிறு­பிள்­ளைகள் பள்­ளி­வா­ச­லுக்குள் நடந்­து­கொள்­வது பல­ருக்கு வெறுப்­பா­கவும், வேத­னை­யா­கவும் அமை­கின்­றது. ஆனால் பெற்றோர் இது விட­யத்தில் அலட்டிக் கொள்­வ­தில்லை. சில பிள்­ளைகள் மிகவும் சிறி­ய­வர்கள்.

அவர்கள் தந்தை தொழுது முடிக்­கும்­வரை பள்­ளிக்குள் ஓடி­யாடி விளை­யா­டுதல், சத்­த­மி­டுதல், ஜன்னல், கத­வு­களை மூடுதல், திறத்தல் கட­க­ட­வென அடித்தல் போன்ற செயல்­களில் ஈடு­ப­டு­வார்கள்.

இச்­செ­யல்­களின் சாதக பாத­கங்­களை ஒவ்­வொ­ரு­வரும் தெரிந்து, புரிந்து நடந்து கொள்­வது மிகவும் பொருத்­த­மாக அமை­யு­மென்று நினைக்­கிறேன்.

பிள்­ளை­களின் வருகை

பொது­வாக மஸ்­ஜி­திற்குள் அல்­லாஹ்வின் அருள் இறங்­கு­கின்­றது. அங்கு வரு­வோரும், போவோரும் அதனை அடைந்­து­கொள்­கி­றார்கள். அருளைச் சுமந்து செல்­கி­றார்கள். அந்த வகை­யிலே பெற்­றோர்­களும், பெரியோர்களும் பரக்­கத்­திற்­காக தமது பிள்­ளை­களை, பேரப்­பிள்­ளை­களை பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அழைத்து வரு­கின்­றார்கள்.

இவ்­வாறு வந்து பழ­கிய பிள்­ளைகள் நாள­டைவில் தனி­யாக வந்து போகவும், அமல்கள் புரி­யவும் ஆரம்­பித்து விடு­கின்­றார்கள். ஏழு வயதில் தொழ­வேண்டும். பத்து வய­தா­கியும் தொழா­விட்டால் அடி கொடுத்­தா­வது தொழ­வைக்­கு­மாறு மார்க்­கத்தில் சொல்­லப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வா­சல்­களில் தொழுகை மட்­டு­மல்ல கற்­றல்கள், கற்­றுக்­கொ­டுத்தல், மார்க்க விளக்­கங்கள், பயான்கள், ஒன்று கூடல்கள், முக்­கிய நிகழ்­வுகள் என பல விட­யங்கள் நடை­பெ­று­கின்­றன. அவற்றை அவர்கள் அறிந்து கொள்­ளவும், தமது எதிர்­கால வாழ்வில் பின்­பற்றி நடை­மு­றைப்­ப­டுத்­தவும் வேண்­டிய அனு­ப­வங்­களைப் பெற்­றுக்­கொள்­கின்­றார்கள்.

சிறு­வ­யதில் இவ்­வாறு வந்து பழ­கத்­த­வ­றிய சிலர் பெரி­ய­வர்­க­ளான பின்பும் பள்­ளி­வா­ச­லுக்குள் வர வெட்கம், பயம் என கூச்­சப்­ப­டு­கி­றார்கள். அதனால் முஸ்­லிம்­களில் ஏரா­ள­மானோர் பள்ளித் தொடர்பே இல்­லாது தொழுகையில்­லா­மலே வாழ்­கின்­றார்கள். சிலர் கபு­று­க­ளுக்கும் சென்று விட்­டார்கள்.

பிள்­ளை­க­ளிடம் அன்பு காட்­டுவோம்

இன்­றைய சிறு­வர்­கள்தான் நாளைய உலகின் நாய­கர்கள். வருங்­காலச் செல்­வங்கள் விடு­கின்ற தப்புத் தவ­று­க­ளுக்­காக அவர்­களை விரட்­டு­வது பாவ­மான செய­லாகும். பிள்­ளை­களை ஏசி விரட்­டக்­கூ­டாது. சத்­த­மிட்டு அதட்­டவும் கூடாது.

தொழுகை நேரங்­கு­றிக்­கப்­பட்ட அமல். அவ்­வல்­தக்­பீ­ருடன் தொழு­வ­துதான் ஏற்றம். “நபி(ஸல்) அவர்­க­ளிடம் யார­ஸூலுல்லாஹ் அமல்­களில் சிறந்­தது எது? என்று ஸஹா­பாக்கள் கேட்­டார்கள். “தொழு­கையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழு­வது தான்” என்று கூறி­னார்கள்.

ஆனால், பல பள்­ளி­வா­சல்­களில் இகாமத் சொல்­லும்­போது பெரி­ய­வர்கள் முன்­ஸப்பில் வந்து சேரு­வ­தில்லை. சிலர் சிறிது தாம­த­மா­கவே வந்து சேரு­வார்கள். அதற்­கி­டையில் முன்­ஸப்பில் ஒருசில சிறு­பிள்­ளைகள் சேர்ந்து விடு­வார்கள். அவர்­களை தோட்­பட்­டையில் பிடித்து இழுத்து பின்­ஸப்­புக்கு தள்­ளி­விடும் செயலை சில­ரிடம் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

தரம் ஒன்­பது, எட்டு படிக்கும் பிள்­ளை­க­ளையும் சிலர் விரட்­டு­வது கவ­லை­யான விட­ய­மாகும். அவ்­வாறு விரப்­பட்­ட­வர்கள் பெரி­ய­வர்­க­ளான பின்பும் மற­வாமல் அதனை நினைவு கூரு­வ­துண்டு. இந்த நினை­வுகள் பசு­ம­ரத்­தா­ணிபோல் பிஞ்சு மனங்­களில் பதிந்­து­விடும். தள்­ளி­வி­டும்­போது அப்­பிள்­ளையின் பெற்றோர் இதைக்­கண்டால் தொழுகை முடிந்­ததும் பள்­ளிக்குள் பிரச்­சினை விஸ்­வ­ரூ­ப­மெ­டுக்கும்.

ஒரு மஸ்­ஜிதில் பஜ்ர் தொழுகையில் பக்­கு­வ­மான பெரி­ய­வ­ருக்குப் பக்­கத்தில் முன்­ஸப்பில் ஒரு சிறுவன். பெரி­யவர் அவனைத் தள்­ளி­விட்டார். தகப்பன் தான் மகனை தனக்­க­ருகில் வைத்­தி­ருந்தார். தொழுகை முடிய தந்தை சப்­த­மிட்டுப் பேசினார். பெரி­யவர் மெள­மாகி விட்டார்.

சிறு பிள்­ளை­களால் பக்­கு­வ­மாகத் தொழு­ப­வர்­க­ளுக்கு இடைஞ்சல் தான். ஆனால், ஸப்பில் நின்ற சிறு­வர்­களை விரட்­டு­வது பிழை­யான விட­ய­மாகும். மாந­பியின் மடி­யிலே மகளார் பாத்­தி­மாவின் செல்­வங்­க­ளான ஹஸன் (ரழி) ஹுஸைன் (ரழி) ஆகியோர் விளை­யாடி மகிழ்­வார்கள். தொழும்­போது சுஜூ­து­டைய நிலை­யிலும் மேலே ஏறிக்­கொள்­வார்கள். கடிந்து கொள்­வதேயில்லை.
ஒரு­முறை மகள் ஸைனபின் மகன் உஸாமா (ரழி) என்ற சிறுவன் தொழுகை நடாத்தும் போது சுஜூ­து­டைய நிலையில் ஏறிக் கொண்­டார்கள். அவர் இறங்கும் வரை தாம­தித்து பின்­னரே ஸலாம் கொடுத்­த­தாக ஸஹா­பாக்கள் மூலம் அறிய முடி­கின்­றது.

எனவே, சிறு­வர்கள் விட­யத்தில் அன்பு காட்­டுவோம். அவர்­களை விரட்­டு­வதன் விளைவு பள்­ளி­வா­சல்கள் ஒரு தலை­மு­றை­யையே இழக்க வேண்­டி­வரும் என ஓர் ஆய்­வு­மூலம் காணக்­கி­டைக்­கி­றது.

சிறு­வர்­களின் பெற்றோர் அறிய வேண்­டி­யவை

பிள்­ளை­களைத் தான் அழைத்து வந்தால் தனக்­க­ருகில் ஓர­மாக வைத்து அடுத்­த­வர்­களின் தொழு­கையின் பக்­குவம் குலை­யாத அள­வுக்கு கவ­னித்­துக்­கொள்ள வேண்டும். பள்­ளி­வா­சலில் நடந்து கொள்ளும் முறை­களை பிள்­ளை­க­ளுக்கு ஆலோ­ச­னை­யாகக் கூற­வேண்டும். மற்­ற­வர்­களின் நச்­ச­ரிப்­பிற்கு பிள்­ளை­களை ஆளாக்­கி­வி­டக்­கூ­டாது. அவ்­வாறு ஏதும் தவறு நடந்­தாலும் அதனைப் பெரி­து­ப­டுத்­தாது பொறுமை காக்க வேண்டும்.

சிலர் மூன்று, நான்கு வயதுப் பிள்­ளை­களை ஜும்­ஆ­வுக்கும் நன்­றாக உடுத்தி கூட்­டி­வ­ரு­கின்றார்கள். ஜும்ஆ பயான் முடியும்வரை பிள்ளை மடியிலே தூக்கம். தொழுகையின் போது எழுப்பி ஸப்பில் நிறுத்துகின்றார்கள்.

அப்பிள்ளை எப்படித் தொழுவான். சிலவேளை அதே இடத்தில் சிறுநீரும் கழித்து பள்ளியையும் அசுத்தப்படுத்தி விடுகிறான். பக்கத்தில் நிற்பவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள். வாரத்தில் ஒரு தடவை கிடைக்கும் அழகிய ஜும்ஆவைத் தொழவந்தவர்கள் திருப்தியுடன் திரும்பிச் செல்வார்களா?

இப்படியான செயல்களுக்கு பிள்ளைகளா? அல்லது பெற்றோர்களா காரணம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே தான் எமது வருங்காலச் செல்வங்களை மாநபி காட்டிய வழியில் வழிநடத்தி ஆத்மீக உணர்வும், நல்லொழுக்கமும் கொண்ட பரம்பரையை உருவாக்க ஒவ்வொரு பெற்றோரும் உறுதிகொள்வோம்.-Vidivelli

  • என்.எல்.எம்.மன்சூர்
    ஏறாவூர்

Leave A Reply

Your email address will not be published.