பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக் ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் அவரது தனிப்பட்ட பிரேரணையாகும். அரசாங்கம் இது தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்விவகாரத்தில் அரசு இதுவரை தீர்மானம் எதுவும் மேற்கொள்ளவில்லை. அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுமில்லை என தகவல் தொடர்பாடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் 5 வீதமாக உள்ள வெட்டுப் புள்ளியை 12.5 வீதமாக உயர்த்தும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர் விஜதாச ராஜபக் ஷவின் தனிநபர் பிரேரணை தொடர்பில் கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
சிறிய கட்சிகள், வெட்டுப்புள்ளி உயர்த்தப்படுவதன் மூலம் தங்களது பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் எனத் தெரிவித்து வருகின்றன. மக்கள் விடுதலை முன்னணி தாங்களே தீர்மானிக்கும் சக்தி என தேர்தலில் களமிறங்கி வந்துள்ளது.ஆனால் அவர்களுக்கு கட்டுப்பணமும் இல்லாமற்போனது. முற்போக்கு கட்சியின் தலைவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடிந்தது. இவ்வாறான சிறிய குழுக்கள் தாங்கள் பலம் வாய்ந்தவர்கள் என கற்பனை பண்ணிக் கொண்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிடும்போது அவர்களுக்கு ஆதரவு குறைவாகவே கிடைக்கிறது.
இந்த தனிநபர் பிரேரணைக்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஈ.பி.டி.பி. கட்சியும் எதிர்ப்பு என்றாலும் இது தொடர்பில் அரசாங்கத்திலோ அல்லது அமைச்சரவையிலோ எந்தவித பேச்சு வார்த்தையும் இடம்பெறவில்லை. கலந்துரையாடல்களின் பின்பே அரசாங்கத்தின் நிலைப்பாட்டினைத் தெரிவிக்கமுடியும்.
நிலைமை இவ்வாறிருக்கையில், விஜயதாசவின் தனிநபர் பிரேரணை குறித்து பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான விமர்சனங்கள் வெளியிடப்படுவது ஜனநாயக முறைமையாகும். விஜயதாச ராஜபக் ஷவின் தனிநபர் பிரேரணைக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு என்றார்.
1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டிருந்த 12.5 வீத வெட்டுப் புள்ளியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆர். பிரேமதாசவுடன் பேரம் பேசி 5 வீதமாகக் குறைத்தார். இதனால் சிறுபான்மை கட்சிகளும், சிறுகட்சிகளும் பாராளுமன்றத்தில் கணிசமான அளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்