ஈரானிய புரட்சிக்காவலர் படையின் ‘குத்ஸ்’ விஷேட படைப் பிரிவின் கட்டளைத் தளபதி காசிம் சுலைமானியின் மரணத்திற்கு முதல் கட்ட பதிலடியாக ஈரான், ஈராக்கில் அமெரிக்கப் படை நிலைகள் மீது அதிரடியாக ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தமை வளைகுடாப் பிரதேசத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருந்தது. ஈராக்கில் அமெரிக்கப் படை நிலைகள் இரண்டின் மீது ஏவிய தரைக்குத் தரை தாவும் சுமார் 22 ஏவுகணைகளில் 17 மேற்கு ஈராக்கின் ‘அயின் அல் அசாத்’ படைத் தளத்தையும் மற்றைய ஐந்து வட ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்திய எர்பில் படைத் தளத்தையும் இலக்கு வைத்துள்ளன.
எனினும், மேற்குப் பகுதிக்கு ஏவிய ஏவுகணைகளில் இரண்டும் வடக்கு பகுதிக்கு ஏவியதில் நான்கும் அவற்றின் இலக்குகளைத் தொடவில்லை எனத் தெரியவருகின்றது. ஈரான் புரட்சிக் காவலர் படையின் கூற்றின்படி, தாம் சுமார் முப்பதுக்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியதாக அறிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல்களால் எந்தவொரு உயிரழப்புகளும் பதிவாகவில்லை.
ஈரானிய பிரதான தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி, ஈராக் பக்தாத் விமான நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளி (03.01.2020) அதிகாலை அமெரிக்க வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். மேற்படி தாக்குதலில் ஈராக்கில் இயங்கும் மக்கள் அணித்திரள்வுப் படையில் (PMF) அங்கம் வகிக்கும் பிரதான ஈரான் சார்பு ஷியா ஆயுதக் குழுவான கத்தாயிப் ஹிஸ்புல்லாஹ் ஆயுதக் குழுவின் கட்டளைத் தளபதி அபூ மஹ்தி அல் முஹத்திஸ் உட்பட மேலும் சில ஹிஸ்புல்லாஹ் அமைப்பினர் உள்ளடங்கலாக இன்னும் ஏழு பேராக மொத்தம் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, மேற்படி தாக்குதலுக்குப் பழிதீர்க்கப்படுமென ஈரான் தரப்பிலிருந்து சூளுரைக்கப்பட்டது. எனினும், முன்னைய சந்தர்ப்பங்களில் குறிப்பாக லெபனான் ஹிஸ்புல்லாஹ்வின் முக்கியஸ்தர் இமாத் முக்னியாஹ்வின் படுகொலையின் போதும் இவ்வாறுதான் கோஷம் போட்டுவிட்டு ஈரான் தரப்பு வாளாவிருந்ததான கருத்து, சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டன. எனினும், ஈரானுக்கும் அமெரிக்க அணிக்கும் ஈரானுடன் நேரடியாகத் தொடர்புபடும் விடயத்தில் 2ஆவது ‘டேங்கர்’ யுத்தம் மற்றும் நாம் கடந்த வாரம் எழுதியிருந்ததனைப் போல், அமெரிக்கப் படை நிலைகள் மீது கடந்த பல மாதங்களாக ஏவப்படும் ‘ரொக்கட்’ தாக்குதல்கள் உட்பட சுலைமானியின் கொலை வரையிலான விடயங்களில் சம்பந்தப்படும் போரியல், அதன் மூலோபாயத் தன்மை, அதற்கான காரணம் மற்றும் மூலோபாயக் கலாசாரம் என்பன பற்றிய புரிதலே மேற்படியான ஊகங்களுக்கான காரணமாகும். இனி நாம் விரிவான விடயங்களுக்குச் செல்வோம்.
காசிம் சுலைமானியின் முக்கியத்துவம் என்ன?
ஈரானிய அதியுயர் ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி காமைனிக்கு அடுத்தபடியாக மிகவும் பலம் வாய்ந்தவராக கருதப்பட்ட காசிம் சுலைமானி, ஈரானிய வலு எரியத்தின் பிரதான சூத்திரதாரியாவார். ஈரானிய புரட்சிக் காவலர் படை (IRGC), ஈரானுடைய உள்ளக வெளியக இயந்திரத்தின் கணிசமான கட்டுப்பாட்டைத் தம்வசம் கொண்டுள்ளது. ஈரானின் பொதுவான இராணுவத்திற்கு அப்பால் IRGC தமக்கெனத் தரைப் படையணிகளையும் கடற்படைப் பிரிவுகள் மற்றும் வான் படையையும் கொண்டுள்ளது. எனினும் IRGCயின் வான் படையானது போர் விமானங்களைக் கொண்டிராத போதிலும் வளைகுடா பிராந்தியத்தின் பெரியதான ஈரானிய ஏவுகணைப் படையணியினை அது தம்வசம் கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. IRGCயின் விசேட படைப்பிரிவான ‘குத்ஸின்’ கட்டளைத் தளபதியான சுலைமானி, ஈரானுடைய பிராந்திய மேலோங்குகை மற்றும் வெளியுறவுக் கொள்கையினை அமுல்படுத்துவதின் பிரதான மூலோபாயி! பாதாளப் போர் மற்றும் மரபு வழியற்ற போரியல் என்பவற்றினூடாக ஈரானிய பிராந்திய அபிலாசைகளை நிச்சயிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் இரகசிய நடவடிக்கைகளை வடிவமைப்பதில் வல்லவராக செயற்பட்டார். கடந்த இருபது வருடங்களாக மேற்கத்தேய, இஸ்ரேலிய மற்றும் அரேபிய உளவு நிறுவனங்களினால் இலக்கு வைக்கப்பட்டு இவர் பலமுறை உயிர்தப்பியுள்ளார்.
தாக்குதலுக்கு முன்னர் நிலவிய சூழல் என்ன?
கடந்த மாத இறுதி வெள்ளியன்று (27.12.2019) ஈராக்கிய குர்திஸ்தான் பிராந்திய கிர்குக் பகுதியில் அமெரிக்க – ஈராக்கியப் படையினர் கூட்டாக நிலைகொண்டுள்ள ஈராக்கிய படைத்தளமொன்றின் மீது சுமார் 30 ரொக்கெட்களின் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. மேற்படி தாக்குதல்களினால், அமெரிக்க சிவிலியன் ‘கொன்ட்ரக்டர்’ ஒருவர் கொல்லப்பட்டதுடன், நான்கு அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் இரண்டு ஈராக்கியப் படையினர் காயமடைந்திருந்தனர். மேற்படி தாக்குதலை ஈராக்கில் இயங்கும் மக்கள் அணித்திரள்வுப் படையில் (PMF) அங்கம் வகிக்கும் பிரதான ஈரான் சார்பு ஷியா ஆயுதக் குழுவான கத்தாயிப் ஹிஸ்புல்லாஹ் ஆயுதக்குழு நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. அதனை அவ்வாயுதக்குழு மறுத்திருந்த போதிலும், இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா கடந்த மாத இறுதி ஞாயிறன்று (29.12.2019 ) ஆயுதக் குழுவினுடைய சிரியா மற்றும் ஈராக்கில் அமைந்துள்ள ஐந்து தளங்கள் மீது F-15 போர் விமானங்களின் மூலம் வான் தாக்குதல்களைத் தொடுத்தது. அதில் குறைந்தது நான்கு களநிலைத் தளபதிகள் உட்பட 25 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் ஐம்பது வரையான உறுப்பினர்கள் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவத்தை மையப்படுத்தியே கடந்த வருடத்தின் இறுதி நாளான செவ்வாயன்று அமெரிக்கத் தூதரகம் மீது ஆயுதக்குழு ஆதரவாளர்கள், தூதரக வளாகத்தின் மதிலுக்கு வெளியே முற்றுகையிட்டுத் தாக்குதல் தொடுத்திருந்தனர்! தமது உறுப்பினர்களின் மரணத்திற்கு அமெரிக்கா மீது பழி தீர்க்கப்படும் எனவும் சூளுரைக்கப்பட்டது!! ஈராக்கில் தமது பிரஜைகளின் மீதும் பிற இராஜதந்திரிகளின் மீதும் ஈரானிய பின்புல ஆயுதக் குழுக்களின் மூலம் ஈரான் தாக்குதல் தொடுக்கலாம் என்கின்ற அச்சம் நிலவியது. ஏனெனில், ஈரான் புரட்சியின்போது ஈரானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் 52 பேர் பணயக் கைதிகளாக 444 நாட்கள் முற்றுகையிடப்பட்டிருந்ததுடன், அமெரிக்கத் தரப்பிற்கு அவர்களைப் (ஈரான் தாமாக அவர்களை விடுவிக்கும் வரை) பாதுகாப்பாகத் திருப்பிப் பெறுவது சிம்மசொப்பனமாக இருந்தது. ஆக, இதனைத் தொடர்ந்தே தூதரக அமெரிக்கப் பிரஜைகளைப் பாதுகாக்கும் பொருட்டாக குவைட்டிலிருந்து அமெரிக்க மத்திய கட்டளைத் தளத்தின் நெருக்கடி பதில் நடவடிக்கைக்கான (Crisis Response) மெரின் கொமாண்டோக்களின் பிரிவொன்று துரிதமாக அமெரிக்காவின் பக்தாத் தூதரகத்திற்கு அதே நாள் நகர்த்தப்பட்டது. மேலும் 82ஆவது துரித பதில் நடவடிக்கைக்கான வான்வழித் தரையிறங்கல்கள் படைப்பிரிவினது சுமார் எழுநூற்றி ஐம்பது சிப்பாய்களை பிராந்தியத்தில் நிலைப்படுத்துவதற்கான முஸ்தீபுகளை அமெரிக்கத் தரப்பு முடுக்கிவிட்டது. தமது இழப்பிற்கு கடும் பதிலடி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் கதாயிப் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஈரான் இருந்தமை வெளிப்படை. ஆக, அமெரிக்க F-15 போர் விமானங்களின் மூலம் வான் தாக்குதல்களுக்குள்ளான கத்தாயிப் ஹிஸ்புல்லாஹ் ஆயுதக் குழுவின் கட்டளைத் தளபதியே, அபூ மஹ்தி அல் முஹத்திஸ். காசிம் சுலைமானி, ஈராக்கில் அபூ மஹ்தி அல் முஹத்திஸினால் வரவேற்கப்பட்டது இந்தப் பின்னணி நிலவும் ஒரு சூழலில் ஆகும். இவ்வாறாக காசிம் சுலைமானியை பக்தாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அதிகாலை சுமார் 1.00 மணியளவில் பெற்றுக் கொண்டு திரும்பிய இரண்டு கார்களின் மீதே ‘தாக்குதல் ட்ரோன்’ மூலம் அமெரிக்கா ஏவுகணை வீச்சினைத் தொடுத்தது என்பதுடன், தாக்குதலில் சுலைமானி உட்பட அனைவரும் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது?
காசிம் சுலைமானி, சிரியாவின் டமஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியாருக்கு சொந்தமான ஏர்பஸ் ரக A–320 விமானமான ‘சம் விங்ஸ்’ 6Q501 மூலமாக ஈராக்கின் பக்தாத்தை நோக்கி கடந்த வியாழன் (02.01.2020) இரவு பயணித்துள்ளார். உண்மையில் இந்த விமானம் இரவு 8:20 இற்கு சிரியாவிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டியிருப்பினும் தாமதமாக இரவு 10:30 மணியளவிலேயேதான் அங்கிருந்து கிளம்பியுள்ளது. பக்தாதை அதே இரவு 10:50இற்கு அவ்விமானம் அடைய வேண்டியிருப்பினும் மேற்படி 130 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டதால், அடுத்த நாள் அதாவது, சம்பவம் நடந்த தினமான வெள்ளியன்று அதிகாலை சுமார் 1:00 மணியளவிலேயே ஈராக்கின் பக்தாத் சர்வதேச விமான நிலையத்தை அடைந்துள்ளது. பின்னர், விமான நிலையத்திலிருந்து சுலைமானியை, அபூ மஹ்தி அல் முஹத்திஸ் பெற்றுக் கொள்ளவே, இரண்டு கார்களின் மூலமாக அவர்கள் விமான நிலையத்தை விட்டு புறப்பட்டுச் சென்றனர். எனினும், விமான நிலையத்தின் Cargo பகுதிக்கு அண்மையாக அக்கார்கள் நகர்ந்து கொண்டிருக்கும் போது, அவ்விலக்குகளை நோக்கி அமெரிக்க ட்ரோன் விமானம் வானிலிருந்து தரைக்குப் பாயும் நான்கு ஏவுகணைகளை ஏவியது. மேற்படி தாக்குதல்களில் சுலைமானியுட்பட அனைவரும் கொல்லப்பட்டனர். மேற்படி நுட்பமான தாக்குதலானது, அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனமான ‘ஜெனரல் எட்டமிக்’ நிறுவனத்தின் ஆளில்லா (UAV) தாக்குதல் (Predator) ரக MQ-9 Reaper ‘ட்ரோன்’ விமானத்தின் மூலம் தொடுக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள Hellfire R9X வானிலிருந்து தரைக்கான (ATG) ஏவுகணைகளின் மூலமே சுலைமானியின் வாகனத் தொடரணி தாக்கப்பட்டுள்ளது. மிக நுட்பமான மற்றும் குறுகிய நேரத்தில் சடுதியாக தப்பிவிடும் அதி முக்கியமான (High Profile) இலக்குகளைத் தாக்குவதற்கு மிகத் துல்லியமாக இலக்குவைக்க முடியுமான அதிமீத்திர ஆயுதங்களை இராணுவங்கள் பயன்படுத்துகின்றன. இந்த வகையில், MQ-9 Reaper ‘ட்ரோன்’ விமானமானது, மேற்படி தேவையினைப் பூர்த்தி செய்வதில் சிறப்பாகச் செயற்படக்கூடியது என்பதுடன் அமெரிக்கா, ஏற்கனவே அல் கைதா அமைப்பின் முக்கிய இரண்டு தளபதிகளை மேற்படி ‘ட்ரோன்’ மூலமாக முன்னர் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாம் இக்கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வருவோம்.
தற்போதைய முறுகலான சூழ்நிலையுடன் காசிம் சுலைமானி, ஈராக் மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களின் மீது உடனடியாகப் பெரும் தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்டியுள்ளமை வெளிப்பட்டமையின் காரணமாகவே தாம் இத்தாக்குதலினை ஆணையிட்டதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
எனினும், இதுகுறித்து விரிவான தகவல்களை அமெரிக்கத் தரப்பு வழங்கவில்லை. மேற்படி நிகழ்வு மற்றும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் ஆகியவற்றின் மூலம் தமது இறைமை மீறப்பட்டுள்ளதாக ஈராக் சாடியிருந்தது.
மேலும், ஒருதலைப்பட்சமாக ட்ரம்பின் முடிவுடனான மேற்படி தாக்குதலானது, அமெரிக்காவின் தற்பாதுகாப்பு சரத்திற்கு உட்படுமா என்கின்ற விவாதமும் ஈரானை மேலும் சீண்டும் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டுமென ட்ரம்ப் மீதான அழுத்தத்தினையும் அமெரிக்காவில் தோற்றுவித்துள்ளது. எது எவ்வாறிருப்பினும், இரண்டாம் உலக யுத்தத்தின் போதான ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் பிரதான சூத்திரதாரியான மார்ஷல் எட்மிரல் இசோரொகு யம்மமோட்டோ, ஜப்பானிய வல்லாதிக்க அபிலாஷைகளை அடையும் நகர்வில் அமெரிக்கத் தரப்பிற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர். பசுபிக் யுத்தம் மற்றும் ‘பேர்ல் ஹாபர்’ மீதான தாக்குதல்களின் பிரதான கட்டளைத் தளபதியான இவர், 1943 ஏப்ரல் 18 இல் சொலமன் தீவுக் கூட்டத்தின் போகன்விலா தீவினை நோக்கி ரகசியமாக விமானத்தில் பறந்தபோது அமெரிக்க இராணுவத்தின் விமானப் படைப்பிரிவின் போர் விமானமானது, கச்சிதமாக இடைமறித்து அவரைத் தாக்கியதால் அவர் கொல்லப்பட்டார். இவரின் மரணமானது, ஜப்பானின் போரிடும் மனஉறுதியை ஆட்டங்காண வைத்தது. எட்மிரல் யம்மமோட்டோவின் இந்தப்பயணம் குறித்து ஜப்பானிய பாதுகாப்புத் தரப்பினரிடையே இரகசியமாகப் பரிமாறப்பட்ட தகவல்கள், அமெரிக்க சமிக்ஞை உளவுப்பிரிவினரின் மூலம் இடைமறிக்கப்பட்டிருந்ததுடன், மேற்படி தாக்குதல் ஏற்கனவே நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டபடி அது அரங்கேற்றப்பட்டது. ஆக, பல தசாப்தங்களுக்குப் பின்னர் அமெரிக்கத் தரப்பிற்கு இசோரொகு யம்மமோட்டோ போன்ற பலமான ஓர் இலக்கினை வேட்டையாடுவதற்கு காசிம் சுலைமானியை கொன்றதினூடாக அடைய முடிந்துள்ளது. நாம் முன்னர் கூறியது போன்று, ஈரானிய வலு எரியத்தின் முக்கிய மையப்புள்ளியான காசிம் சுலைமானியின் நகர்வுகளை மிக ரகசியமாகப் பேண வேண்டியது ஈரானின் மூலோபாயத் தேவையாகும். ஆக, மேற்படி துல்லியமான தாக்குதல் அமெரிக்கத் தரப்பிற்கு எவ்வாறு சாத்தியமானது என்கின்ற கேள்விக்கு இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவது, அமெரிக்கத் தரப்பு தொழிநுட்ப ரீதியாகப் பெற்றுக்கொள்ள முடியுமான சாதகத் தன்மை. இரண்டாவது, ஈரானிய தரப்பின் எடுகோள் மூலமாக அமெரிக்கத் தரப்பு பெற்றுக் கொண்ட சாதகத் தன்மை. அதாவது முதலாவதாக, ஜப்பானிய எட்மிரல் யமமொட்டோவின் பயணம் குறித்த தகவல் பரிமாறலினை அமெரிக்க சமிக்ஞைப் புலனாய்வுப் பிரிவு இடைமறித்து திட்டம் தீட்டியது போன்று, கத்தாயிப் ஹிஸ்புல்லாஹ் ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் அமெரிக்க வான் தாக்குதல்களின் மூலம் கொல்லப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற காஸிம் சுலைமானியின் தொலைபேசி உரையாடல் ஒன்றினை இஸ்ரேல் அல்லது அமெரிக்க உளவுப்பிரிவினர் இடைமறித்திருந்ததாக இஸ்ரேலியத் தரப்புச் செய்தி வழியாக அறிவிக்கப்படுகின்றது!. இரண்டாவதாக, கத்தாயிப் ஹிஸ்புல்லாஹ் ஆயுதக் குழுவின் உறுப்பினர்கள் அமெரிக்க வான் தாக்குதல்களின் மூலம் கொல்லப்பட்டதன் மூலமாகவும் பின்னர் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளின் மூலம் ஈரானியத் தரப்பானது மிக அதிகளவில் சீண்டப்பட்டிருந்ததினால், காசிம் சுலைமானி போன்ற அதிமுக்கிய மூலோபாய இலக்கொன்றினைத் தற்போது தாக்கி, ஈரானுடனான சீண்டலினை அமெரிக்கா மேலும் அதிகப்படுத்துவதற்குத் துணியாதென ஈரான் தரப்பு எண்ணுவதற்கு முற்பட்டிருக்கக் கூடும்.
இவ்வாறு கூறுவதற்குக் காரணம் இருக்கின்றது. சுலைமானியின் மரணம், ஈரானிய உளவுப்பிரிவிற்கும் விழுந்த பலத்த அடியாகும். ஏனெனில், இறுக்கமானதொரு சூழலில் தமது பிரதான கட்டளைத் தளபதியின் வருகையின்போது, ஈரானிய அதிமீத்திற வான் கண்காணிப்புப் பிரிவுகள், ட்ரோன்களின் நடமாட்டம் குறித்தோ அல்லது பிறவிடயங்கள் குறித்தோ விழிப்பாக இல்லாமையினை இது வெளிப்படுத்துகின்றது. மறுதலையாக, மேற்படி அஜாக்கிரதையான சூழலினை அமெரிக்கத் தரப்பு பயன்படுத்திக் கொண்டுள்ளது. கத்தாயிப் ஹிஸ்புல்லாஹ் ஆயுதக்குழுவின் உறுப்பினர்கள் மீது அமெரிக்காவின் மூலமான பலத்த அடிக்குப் பழிவாங்கும் முகமாக, அக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அமெரிக்க அணியின் உளவுத்தரப்பு அதி உச்சபட்ச அவதானத்தைக் குவித்திருக்கும் என்பதுடன், அதன் தலைவர்களுடைய உரையாடல்கள், நகர்வுகள் என்பன நுணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டே இருக்கும். இதன் பொருட்டு ஏற்கனவே ஈராக்கின் மீதான அதீத ஈரானிய அழுத்தத்தினை விரும்பாத தேசியவாதிகள் சார்பான இராணுவ உளவுத் தரப்பினரது உதவிகளையும் அமெரிக்கத் தரப்பு பெற்றிருக்க முடியும். விடயங்கள் இத்துடன் முடியவில்லை!!
2008ஆம் ஆண்டு லெபனான் ஹிஸ்புல்லாவின் முக்கிய (புலனாய்வு மற்றும் பாதுகாப்பு) தலைவர்களில் ஒருவரான இமாத் முக்னியாஹ், கார்க்குண்டுத் தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டபோது, தொடர்ந்த நாட்களில் காசிம் சுலைமானியை இலக்கு வைக்கும் மொஸாடின் திட்டமொன்று அமெரிக்கா அதனைத் தள்ளிப் போட்டதால் கைவிடப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆக, தற்போது காசிம் சுலைமானி கொல்லப்பட்டது, மேற் சொன்னதை போன்ற எடுகோளின் மூலமாகும். ஈராக்கில் நிலவிய சூழலுடன் காசிம் சுலைமானி, ஈராக்கிற்கு வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம். ஆக, அதனைச் சுற்றி தாக்குதல் திட்டத்தினை அமெரிக்கத் தரப்பிற்கு கட்டியெழுப்புவதற்கு முடியுமாகும்! ஏனெனில், சுலைமானி மீதான தாக்குதலுக்கு முன்னர், எற்கனவே 82ஆவது துரித பதில் நடவடிக்கைக்கான வான் வழித் தரையிறங்கல்கள் படைப்பிரிவினது சுமார் எழுநூற்றி ஐம்பது சிப்பாய்களுக்குப் பிரத்தியேகமாக, அவசர நிலைமைகளின் போது களமிறக்குவதற்கு, ஒரு தொகையான விசேட படை கொமாண்டோக்களை ரகசியமாக ஜோர்தானில் அமெரிக்கா தரையிறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் எந்த தளத்திலிருந்து அமெரிக்கத் தரப்பு மேற்படி ட்ரோன் தாக்குதலினைத் தொடுத்தது என்பது பற்றி அமெரிக்கா விலாவாரியாக அறிவிக்காத நிலையில், மேற்படி சூட்சுமமான ட்ரோன் தாக்குதலினை குறிப்பாக கண்சிமிட்டும் நேர இடைவெளிக்குள் நடத்தி முடிக்க வேண்டிய தாக்குதலினை நடத்தும் விசேட படையணியொன்றுள்ளது. ஆக, MQ-9 ன் பறப்பு தூரத்திற்குள் பிராந்தியத்தில் பொதுவாக அனைத்து அமெரிக்கத் தளங்களும் உள்ளடங்குகின்றன. மேலும் ஈரானானது எவ்வாறு பதில் தாக்குதல் நடத்தும் என்ற கேள்விக்கான பதிலினை ஈரான் வழங்கியுள்ளது. ஈரானின் தாக்குதல் சுலைமானியின் தாக்குதலுக்கு அதன் இயல்பில் நேர் விகித சமமாகாத போதிலும் ஈரான், மூலோபாய ரீதியாகவும் தமது குறிக்கோள்களை மையப்படுத்திய விதமாகவும் பதிலடி கொடுத்துள்ளது. சுலைமானியின் மரணத்திற்கு ஒத்த ஈரானின் பதிலடி என்பது, அமெரிக்காவின் மத்திய உளவுப்பிரிவினது இயக்குநர் அல்லது உயர் இராணுவ அதிகாரிகளின் தலைவர் ஆகிய ஒருவரை இலக்கு வைத்ததாக இயல்பில் இருத்தல் வேண்டும். எனினும் ஈரான் நேரடிப் போரினை விரும்பவில்லை என்பதுடன், நேரடிப் போரின் மூலம் ஈரான் அதிக இழப்பினையும் குறைந்த அடைவினையே பெற்றுக் கொள்ளும். ஆக, ஈராக்கில் அமெரிக்க படைத்தளங்களை இலக்கு வைத்து பதிலடி கொடுத்ததன் மூலம் ஈரான், நாம் பலமுறை எழுதியதைப் போன்று அதன் துணிவு தளர்ப்பு மூலோபாயத்தையும் தனது மேலோங்குகைக்கு சவாலாகவுள்ள அமெரிக்கப் பிரசன்னத்தையும் எதிர்க்கின்றது.
ஏற்கனவே, ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைவிலகல் குறித்த மசோதா பாராளுமன்றத்தில் சூடுபிடித்துள்ளமை ஈரான் அடையும் மூலோபாய வெற்றியாகும். மேலும், மரபுவழியற்ற விதத்தில் சமச்சீரற்ற போரியலின் மூலமாக ஈரான், எதிர்கால பாதாளத் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும். ஏனெனில் இதுவே ஈரானின் பொதுவான மூலோபாயக் கலாசாரமாகும்.
பிராந்திய மேலாதிக்கத்தினை நோக்கி நகரும் ஈரானைப் பொறுத்தவரையில், அது சார்பான ஆயுதக்குழுக்களைப் போஷிப்பதுடன் அவற்றின் மூலமாக அழுத்தம் கொடுத்து ஈராக்கிய அரசியலினைக் கட்டுப்படுத்துவது அதனது பிரதான வியூகங்களில் ஒன்றாகும். ஆக, ஈரான் தனது மிக முக்கிய மூலோபாய புவிப் பிரதேசத்தில் தற்போது மரபுவழியான மற்றும் மரபு வழியற்ற பிரதான தலைவர்களை இழந்துள்ளமையானது, ஈரான் அண்மைக்காலத்தில் அடைந்த பாரிய பின்னடைவாகும். மேலும் ஈரானிய இராணுவ வலு மூலகமும் ஈரானிய மத்திய புலம் சந்தித்த முக்கிய மூலோபாயப் பின்னடைவுமாகும். -Vidivelli