டாக்டர் ஷாபியை மீண்டும் சேவையில் இணைப்பது பற்றி தீர்மானிக்கவில்லை
தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அரசாங்க சேவை ஆணைக்குழு தெரிவிப்பு
வைத்தியர் ஷாபியை மீண்டும் வைத்தியசேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதியோ, ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளோ எவ்வித வினவலையும் அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம் கோரவில்லை. இவ்விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என்பதுடன், அவை முற்றிலும் நிராகரிக்கத்தக்கவையாகும் என்று அரசாங்கசேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.ஏ.பீ.தயா செனரத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து விளக்கமளித்து அவரால் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள, கட்டாய லீவில் அனுப்பப்பட்டுள்ள மருத்துவர் எஸ்.எஸ்.எம்.ஷாபி, தன்னை மீண்டும் சேவையில் அமர்த்துமாறுகோரி அரசாங்கசேவை ஆணைக்குழுவின் சுகாதாரசேவைக் குழுவிற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் ஊடாக செய்த வேண்டுகோள் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவில்லை.
அந்த மருத்துவ உத்தியோகத்தருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரம்ப விசாரணையொன்றை நடத்தி, அதன் அறிக்கையை அரசாங்கசேவை ஆணைக்குழுவின் சுகாதாரசேவைக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அந்த அறிக்கை இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. அவ்வறிக்கை மற்றும் மருத்துவர் எஸ்.எஸ்.எம்.ஷாபியின் வேண்டுகோள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் தனது பரிந்துரையை சமர்ப்பிக்கும் வரையில் அரசாங்கசேவை ஆணைக்குழுவின் சுகாதாரசேவைக் குழுவினால் இதுதொடர்பில் இறுதித் தீர்மானமொன்று எடுக்கப்படமாட்டாது என்பதைக் குறிப்பிடுகின்றேன்.
இவ்விடயம் தொடர்பில் இதற்கு மாற்றாகப் பல்வேறுபட்ட ஊடக வலையமைப்புக்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள சகலவிதமாக அறிக்கைகளும் பொய்யானவை என்றும், அத்தகைய அறிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்பதையும் அறியத்தருகிறேன். அத்தோடு இதுதொடர்பில் ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி அலுவலகத்தின் வேறு எந்தவொரு அதிகாரியோ இந்த ஆணைக்குழுவிடம் இருந்தோ அல்லது அதன் கீழுள்ள சுகாதார சேவைக்குழுவிடமிருந்தோ எத்தகைய கோரிக்கையையும் விடுக்கவில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன்.-Vidivelli