ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மீது சிங்கள மக்கள் வைத்திருக்கின்ற எதிர்பார்ப்பானது தற்போதைய நிலையிலும் உயர்ந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. எனினும், ஜனாதிபதி பொறுப்பெடுத்துக்கொண்ட நாடு நல்ல நிலையிலிருக்கும் நாடொன்றல்லாது உச்ச அளவில் பிரச்சினைக்குள்ளாகியுள்ள நாடாகவே காணப்படுக்கின்றது. தற்போதைய நிலையில் கடன் பிரச்சினையானது மற்றைய அனைத்துப் பிரச்சினைகளையும் இன்னும் சிக்கலானவைகளாக மாற்றிக்கொண்டிருப்பதுடன், பிரச்சினைகளின் மூலகாரணியாகக் கருதப்படுகின்ற சாதி, இன, மத ரீதியிலான வேறுபாடுகள் இன்னமும் அதே நிலையிலேயே காணப்பட்டுவருகின்றன.
சிங்கள பெளத்தர்களின் வாக்குகளினால் மாத்திரம் ஜனாதிபதி தெரிவாகியிருப்பதன் காரணமாக அரசாங்கத்தினது சிங்கள பௌத்த தன்மையில் மாற்றமேதும் ஏற்படாத அடிப்படையில் தமது பணிகளை முன்னெடுக்கவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக நாட்டின் பிரச்சினைகளை நடுநிலையாக நின்று கையாளாமல் சிங்கள பௌத்தர்கள் பக்கம் நின்று அணுகவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. அடுத்த பொதுத் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளின் மூலமாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளும் கனவொன்று ஜனாதிபதிக்கு இருப்பதால் சிங்கள பௌத்த எழுச்சியானது குறைந்து செல்லாமலிருப்பதை உறுதி செய்துகொள்வதற்காக அவ்வப்போது அதற்கு சாதகமான அடிப்படையிலான சமிக்ஞைகளை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
வடக்கில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான பிரச்சினையின்போது அதனை பிணக்கொன்றாக உருவெடுக்கவிடாமல் நிகழ்வுகளை நடாத்துவதற்காக இடமளிக்கும் அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிங்கள பௌத்தம் என்ற கொள்கையானது எந்த விதமான மாற்றத்திற்கும் உட்படுத்தப்படாமலிருக்கின்றது என்பது சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தினை பாடவேண்டும் என்ற நிலைப்பாடு உருவாக்கப்பட்டதன் ஊடாகத் தெரியவருகின்றது.
தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் பாடுவதானது தமிழ் பேசும் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு விடயமாக இருக்கப்போவதில்லை என்ற பேதிலும், பண்டாரநாயக்கவின் சிங்களம் மட்டும் என்ற கொள்கையின் அளவுக்கு இந்த தேசியகீதப் பிரச்சினை அவர்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதாக அமையாது. எனினும், இந்தக் கொள்கையானது ஜனாதிபதியின் நிலையை பலப்படுத்துவதற்கு காரணமாக அமையும் என்பதாகவும் கூறமுடியாது.
தேசிய கீதம்
பேராசிரியர் கே.எம். டீ. சில்வாவின் ஜே.ஆர் ஜயவர்தன குறித்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விபரங்களின் அடிப்படையில் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடாத்தப்பட்ட சுதந்திர நிகழ்வின் போது அதுவரைகாலமும் இலங்கையில் பாடப்பட்டுவந்த “God save the King/Queen” எனும் “கடவுள் அரசனை / அரசியை காப்பானாக” என்ற பிரித்தானிய தேசிய கீதத்தை இனிமேலும் பாட முடியாதென்ற நிலையில் அது குறித்த அவசரத் தீர்மானமொன்றை மேற்கொள்ளவேண்டிய அவசியம் 1948 ஆம் ஆண்டு ஆட்சிக்குவந்த டீ. எஸ். சேனநாயக்க அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. 1934 ஆம் ஆண்டு இலங்கை தேசிய நிகழ்வின்போது ஆனந்த சமரகோன் மற்றும் அவரது இசைக்குழுவினரினால் பாடப்பட்ட “நமோ நமோ மாதா” எனும் பாடல் குறித்து ஜே.ஆர்.ஜயவர்தனவின் நினைவில் இருந்ததுடன் பொருத்தமான தேசியகீதம் குறித்த அவரது முன்மொழிவு அன்றைய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஈ.ஏ.பீ. விஜேரத்னவின் தலைமையில் அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. ஜே.ஆர்.ஜயவர்தன இந்தக் குழுவில் அங்கம் வகித்ததுடன், ஜீ.ஜீ.பொன்னம்பலம் மற்றும் சீ. சிதம்பரம் ஆகியோரும் இந்தக் குழுவில் அங்கம் வகித்திருந்தனர்.
குறித்த குழு ஆனந்த சமரக்கோன் முன்னிலையில் கூட்டப்பட்டது. குறித்த கீதம் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டிருந்ததாலும் நாடு தற்போது பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருப்பதாலும் கீதத்தின் “நவஜீவன தெமினே” என்ற அடிப்படையில் வருகின்ற 10 ஆவது அடியை மாற்றியமைப்பது பொருத்தமாக அமையும் என்பதாக ஆனந்த சமரகோன் கருத்துத் தெரிவித்தார். அடிகளை மாற்றியமைப்பதற்காக விரும்பிய ஆனந்த சமரகோன் “நவ ஜீவன தெமினே நிதின அப புபுது கரன் மாதா” என்பதாக அதனை மாற்றியமைத்தார். கீதத்தின் தமிழ் பிரதியொன்றும் இருக்கவேண்டும் என்பதாக குழு தீர்மானித்ததுடன் தமிழ் பிரதியை உருவாக்குவதற்காக தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி என்பவர் தெரிவுசெய்யப்பட்டார்.
1952 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி சிங்களம், தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் தேசிய கீதத்தின் சிங்கள தமிழ், பிரதிகள் அறிவித்தல் ஒன்றாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. அதன்பின்னர் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற அரச நிகழ்வுகளில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்தது. ரேடியோ சிலோன் நிறுவனம் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளிலான தேசிய கீதம் இரண்டையும் இசைத்தட்டுகளாக வடிவமைத்தது. இங்கு தமிழ் தேசிய கீதத்திற்காக ஆனந்த சமரகோன் இசையமைத்த போதிலும் சங்கரி மற்றும் வீணா ஆகிய தமிழ் பாடகர்கள் தமிழ்த் தேசிய கீதத்தை பாடுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
1960 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தின்போது தேசிய கீதத்தின் ஆரம்ப வரிகளின் அமைவில் பொருத்தமின்மை இருப்பதாக (அசுபமான விதத்தில் ஆரம்பம் அமைந்திருப்பதாக) குறிப்பிட்டு ஆனந்த சமரகோனின் எதிர்ப்புக்கு மத்தியில் “நமோ நமோ மாதா” என்பதற்கு பதிலாக “சிறீலங்கா மாதா” என்பதாக மாற்றியமையக்கப்பட்டது.
ஆனந்த சமரகோன் தற்கொலை செய்துகொண்டதும் இந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பிணக்குகளின் காரணமாகவாகும். பிரபாகரன் வடக்கில் தேசிய கீதத்திற்குத் தடைவிதிக்கும் காலம் வரையில் வடக்கு, கிழக்கு மக்கள் தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தினை இசைத்துவந்தனர்.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது பொருத்தமானதா என்ற பிரச்சினையானது யுத்தவெற்றியின் பின்னர் முதன் முதலாக 2010 ஆம் ஆண்டில் தோன்றியது. தேசிய கீதமானது சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படவேண்டும் என்பதாகவே மஹிந்த ராஜபக் ஷவின் எண்ணமாக இருந்தது. நல்லாட்சி அரசாங்கம் குறித்த தடையை நீக்கிய போதிலும் இறுதியாக கோத்தாபய ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து குறித்த தடையானது மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.
1956 ஆம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டம் என்பது தற்போது அமுலில் இல்லை என்பதை தற்போதைய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 18, 19 ஆம் அத்தியாயங்களின் மூலமாக சிங்கள மொழிக்கு மாத்திரமன்றி தமிழ் மொழிக்கும் தேசியமொழி என்ற நிலை வழங்கப்பட்டிருக்கின்றது. சட்ட உருவாக்கம் மாத்திரமன்றி அரசின் அனைத்துக் கருமங்களுக்கும் இந்தக் கொள்கை ஏற்புடையதாகவும் இருந்துவருகின்றது.
தமிழ்மொழி மூலமாக தேசிய கீதம் இசைக்கப்படுவதனால் சிங்களத்துக்கோ அல்லது பௌத்தத்திற்கோ எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. சிறுபான்மையினர் நடத்தப்படுகின்ற விதத்தின் ஊடாக பெரும்பான்மையினது தன்மையினை மட்டிடலாம் என்ற மகாத்மா காந்தியின் கூற்றுக்கு அமைய இவ்வாறான நடவடிக்கைகள் சிங்கள இனத்தின் மதிப்பினை பாதிப்பதாக அமைக்யகூடும்.
விவசாய மீள்கட்டமைப்பு
“பாதகங்களை சாதகமாக மாற்றியமைத்தல்” என்ற தலைப்பில் கடந்த வாரம் எழுதியிருந்த கட்டுரை தொடர்பில் பலரிடமிருந்தும் அபிப்பிராயங்கள் கிடைக்கப்பெற்றன. விவசாய ஆய்வாளர் ஒருவரும் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தமை மகிழ்சிக்குரிய விடயமாக இருந்தது. பொதுவாக ஒரு விடயத்தில் அதனுடன் தொடர்பில்லாதவர்களின் கருத்துக்களைவிட அந்த துறைசார்ந்த விசேட நிபுணத்துவமுள்ளவர்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்கள் பெறுமதி வாய்ந்தவையாகும்.
குறித்த கட்டுரையில் விவசாயம் குறித்து குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்துடனும் தான் உடன்படுவதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை தற்போது முகம்கொடுக்கின்ற விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் மிக நீண்ட நேரம் கலந்துரையாடினோம்.
வனவிலங்குகள் ஊடாக கிராமிய விவசாயத்துக்குப் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. தற்போது வனவிலங்குகளினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை விவசாயிகளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. குரங்குகள், முள்ளம்பன்றிகள், மயில்கள், மர அணில்கள் போன்ற விலங்குகள் பல்கிப் பெருகுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது அவை பெருகுவதற்கு இடமளிக்கப்படுமாயின் இன்னும் ஐந்து வருடங்கள் கழியும்போது மிகச் சிக்கலான பிரச்சினையொன்றாக இது மாறிவிடலாம்.
இலங்கையின் தீர்வுகாணப்படவேண்டிய பிரச்சினைகள் அனைத்துமே உரிய நேரங்களில் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினால் பிரச்சினைகள் வளர்ந்து பிரமாண்டமாக மாறியிருக்கின்றன என்பதாகக் குறிப்பிடவேண்டும். இலங்கை தற்போதிருக்கின்ற பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்யவேண்டுமெனில் கிராமிய விவசாயத்துறையில் புத்துணர்வு ஏற்படுத்துவதற்கான திட்டமொன்று அமைக்கப்பட்டால் மாத்திரமே அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கமுடியும். குறித்த துறையின் ஊடாக மீளெழுவதற்கான சந்தர்ப்பமாகக் கருதி இளைஞர்களின் கவனம் திரும்புகின்ற அடிப்படையில் கவர்ச்சிகரமான வருமானங்களை ஈட்டிக்கொள்ளும் அடிப்படையிலான நவீன விவசாய முறையாக மாற்றியமைக்கப்படவேண்டும். இந்த நிலையை அடைவதற்காக வனவிலங்குகள் கட்டுப்படுத்தப்படுவது இன்றியமையாத ஒன்றாகக் கருதலாம்.
வனவிலங்குப் பிரச்சினைகளில் மத சிந்தனை சார்ந்துள்ளமையால் எந்த அரசாங்கமுமே அதற்குத் தீர்வு காண்பதில் பின்வாங்குகின்றன. ஆட்சி முறைகளில் தேவைக்கதிகமாக மத விடயங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது சிறந்ததொரு ஆட்சிக்கான வாய்ப்புக்கள் இல்லாமலாவதுடன், ஆட்சியாளர் நகைப்புக்கு உட்படுத்தப்படும் நிலையும் ஏற்படலாம். இலங்கையை பாலுற்பத்தியில் தன்னிறைவடைந்த நாடாக மாற்றியமைக்க முடியாமல் இருப்பதற்கும், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட அடிப்படையில் கிராமிய விவசாயத்தை மாற்றியமைப்பதற்கு முடியாமலிருப்பதற்கும் மத நம்பிக்கைகள் சார்ந்த பிற்போக்கு கொள்கைகளே காரணமாகின்றன.
நெற்செய்கை
நெல்லுற்பத்தி தொடர்பில் நாட்டில் நிலவுகின்ற தவறான நம்பிக்கைகள் விவசாயத்துறையிலும் கிராமப் பகுதிகளில் காணப்படுகின்ற வறுமை நிலையிலும் செல்வாக்குச் செலுத்துவதாகக் காணப்படுகின்றது. இலங்கையில் மேற்கொள்ளமுடியுமான அனைத்து பயிர்ச்செய்கைகளிலும் ஆகக் குறைந்த வருமானத்தைப் பெற்றுத் தருகின்ற பயிர்ச்செய்கையாக நெற்பயிர்ச் செய்கையைக் குறிப்பிடலாம். நெற்பயிர்ச் செய்கைக்கும் அதற்கான நீர்த்தேவை குறித்தும் பராக்கிரமபாகு காலத்தில் சிந்தித்தது போன்றே இலங்கை இன்றும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிக்கு அதிர்ஷ்டம் இருக்குமாயின் வயல் நிலமொன்றின் ஊடாக ஒரு போகத்தில் ஒரு ஏக்கருக்காக ரூபா 40,000 இலாபமாக பெற்றுக்கொள்ளலாம் என்பதாக விவசாயத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டொன்றிற்கு மூன்று போகங்கள் பயிரிடமுடியுமாயின் விவசாயியினால் 120,000 ரூபா ஆண்டுவருமானமாக ஈட்டிக்கொள்ளமுடியும். அந்த அடிப்படையில் மாதமொன்றிற்கான வருமானம் 10,000 ரூபா கிடைக்கப்பெறும். எனினும், ஒரு ஏக்கர் நிலத்தில் மிளகாய் பயிரிடப்படுமிடத்து ஒரு போகத்தில் மூன்று இலட்சம் ரூபா இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திசாநாயக்க, சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக பதவி பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் நெற்பயிர்ச்செய்கை தொடர்பான வெளியிட்ட கூற்று ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு “வறுமையைப் பயிரிடும் நெற்செய்கை” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தேன். நெற் செய்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதானது இலங்கையின் வறுமையை ஒழிக்க காரணமாக அமையாது என்பதுடன், அது மேலும் வறுமையை அதிகரிப்பதாகவே அமையும் என்பதனை தெளிவுபடுத்தியிருந்தேன். நான் அதனூடாகக் குறிப்பிட முனைவது, நெற்செய்கையானது முற்றுமுழுதாக கைவிடப்படவேண்டும் என்பதையல்ல. சோறு என்பது எமது பிரதான உணவாக இருப்பதன் காரணமாக நெற் செய்கையை முற்றுமுழுதாக நீக்கிவிட முடியாது.
எனினும், எமக்கு சோறு உண்ணும் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.
மூன்று வேளைகளும் சோறு உண்பது நாட்டு மக்கள் நோய் வாய்ப்படுவதற்கு காரணமாக அமைகின்றது. இரண்டாவது உலகமகா யுத்தத்தின் பின்னர் உலக நாடுகளில் மக்கள் சோறு உண்ணும் அளவைக் குறைத்துக்கொண்டு இறைச்சி வகை, மரக்கறிவகை, பழவகைகள் என்பவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளப் பழகினர். ஜப்பான் நாட்டவர்கள் சிறிய கோப்பை ஒன்றின் அளவே தற்போது சோறு உண்கின்றனர். ஜப்பான் அபிவிருத்தி அடைவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றது.
இலங்கைக்கு சோறு உண்ணும் அளவினை 50 வீதத்தினால் குறைத்துக்கொள்ளலாம். இறைச்சி, மரக்கறி, பழவகைகளை உட்கொள்வதன் ஊடாக அந்த இடைவெளியினைப் பூரணப்படுத்தலாம். இவ்வாறான ஒரு கொள்கை உருவாக்கப்படுமாயின் இலங்கைக்குத் தேவையான அரிசி உற்பத்திக்காக உலர்வலய நிலங்களை மாத்திரம் பயன்படுத்திக்கொள்ளலாம். பொருளாதார ரீதியில் நலன்களைத் தராத அமைப்பில் இருக்கின்ற ஈரவலய நிலங்களில் பொருளாதார ரீதியில் அதிக பயன்களைத் தருகின்ற பயிர்களை பயிரிடலாம்.
குறைந்தளவில் சோறு உட்கொள்வதானது சிறந்த ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைவதுடன், நாட்டின் அபிவிருத்திக்கும் கிராமிய விவசாயத்தின் அபிவிருத்திக்கும் காரணமாக அமையும்.
ஈரவலய வயல் நிலங்கள்
தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற பொருளாதாரப் பயிர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்ற நிலங்களிலும் பார்க்க கூடியளவிலான நிலப்பகுதி நெற்செய்கைக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக விவசாயத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெற்செய்கைக்காக 9,22,151 ஹெக்டயர் அளவு நிலம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் தேயிலைச் செய்கைக்காக 2,27,262 ஹெக்டெயர்களும், தென்னை செய்கைக்காக 2,45,552 ஹெக்டயர்களும் இறப்பர் செய்கைக்காக 2,07,628 ஹெக்டயர்களும் ஏனைய பொருளாதார பயிர்செய்கைகளுக்காக 1,46,181 ஹெக்டயர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரவலயத்தில் அதிகளவிலான வயல் நிலங்களில் நெற்செய்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
இது 40 சதவீதம் அளவிலானதாக இருக்கலாம். விவசாயத்திணைக்களம் 10 வருடங்களுக்கு ஒருமுறை கணக்கெடுப்புக்களை மேற்கொண்டு தகவல்களை வெளியிட்டு வந்தபோதிலும் 1981 ஆம் ஆண்டின் பின்னர் கணக்கெடுப்புக்கள் மேற்கொள்வதை நிறுத்திக்கொண்ட காரணத்தினால் பயிரிடப்படாத நிலத்தின் அளவை சரியாகக் குறிப்பிட முடியாமலுள்ளது. நான் அறிந்தமட்டில் களுத்துறை மாவட்டமானது 1948 ஆம் ஆண்டு முதலே நெற்செய்கை ஊடாக அதிக நட்டத்தை பெறுகின்ற மாவட்டமாக இருந்துவருகின்றது. களுத்துறை மாவட்டத்தில் நெற்செய்கையூடாக ஆகக்குறைந்த அளவிலான வருமானமே ஈட்டப்படுகின்றதாயின் அந்த மாவட்ட மக்களை நெற்செய்கையில் ஈடுபடுவதற்காக ஊக்குவிப்பதில் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.
ஈரவலயங்களில் நெற்செய்கை கைவிடப்பட்டிருக்கின்ற வயல் நிலங்களில் எந்தவிதமான மாற்றுப் பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.
வயல் நிலங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கின்ற இறுக்கமான சட்டங்கள் காரணமாக மாற்றுப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாத நிலையே காணப்படுகின்றன. அவ்வாறு பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் கைவிடப்பட்ட ஈரவலய நிலங்களின் அளவு இலட்சக்கணக்கான ஏக்கர்களாக இருக்கலாம். நெற்செய்கை மேற்கொள்ளுமிடத்து போதிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனாலேயே இவைகள் பொருளாதார ரீதியில் எந்தப் பயன்களும் பெற்றுக்கொள்ளப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன.
நிலப் பயன்பாடு
நிலம் என்பது ஒரு நாட்டின் அருமையானதும் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையானதுமான ஒரு வளமாகும். இருக்கின்ற நிலங்களை பொருளாதார ரீதியில் பயன்களைப் பெற்றுத்தரும் அடிப்படையில் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளாத நாடு வறுமைக்குள்ளாவது ஆச்சரியமான விடயமொன்றல்ல. ஈரவலய நிலங்களை பொருளாதார பயன் பெற்றுத்தரும் அடிப்படையில் பயன்படுத்தாது அதனை பொருளாதார ரீதியில் பயன் பெற்றுத்தரும் அடிப்படையில் சிறிய, நடுத்தர, பாரிய அளவுகளிலான பண்ணைகளை அமைக்கலாம். அதற்கேற்றவகையில் வயல் நிலங்கள் குறித்த சட்டங்கள் மாற்றப்படவேண்டியதுடன் அரசின் திட்டங்களும் செயற்படுத்தப்படவேண்டும்.
அதனூடாகத் தற்போது கைவிடப்பட்டிருக்கின்ற வயல் நில உரிமையாளர்களுக்கு தமது நிலங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு அல்லது குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக வருமானம் ஈட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் அமையலாம். அந்த நிலங்கள் நன்னீர் இறால்கள், மீன்கள் என்பன வளர்க்கின்ற பண்ணைகளாக மாற்றியமைக்கலாம். இந்திய எருமை மாடுகள் அல்லது ஏற்றுமதிக்கான வாத்துக்கள் வளர்க்கின்ற பண்ணைகளாகவும் மாற்றியமைக்கலாம்.-Vidivelli
- விக்டர் ஐவன்
தமிழில்: ராஃபி சரிப்தீன்