பயங்கரவாத சந்தேக நபரை விடுவிக்க அழுத்தம் பிரயோகித்த விவகாரம்: ரிஷாத்துக்கு எதிராக விசாரணை ஆரம்பம்
நீதிமன்றுக்கு அறிவித்தது மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு, பயங்கரவாத தடை சட்டம், ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர் ஒருவரை விடுவிக்க பாதுகாப்புத் தரப்புக்கு அழுத்தம் பிரயோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்தனர். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2,3,4,5 ஆம் அத்தியாயங்களின் கீழும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில்,அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் (ஐ.சி.சி.பி.ஆர்.) 3 (1), 3 (2) ஆம் அத்தியாயங்களின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 486 ஆம் அத்தியாயத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றமொன்றைப் புரிந்துள்ளாதாகக் கருதியே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாடு, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஊடாக மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்டு அவரின்கீழ் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அந்த விசாரணைப் பிரிவினரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபரை விடுவிக்க அப்போதைய அமைச்சரான ரிஷாத் பதியுதீன், அப்போதைய இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவுக்கு தொலைபேசியில் அழைத்தமை சட்டத்தின் ஆட்சி மீதான பாரிய தாக்குதலென முறைப்பாட்டாளர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும், இதேபோன்று மேலும் பல பயங்கரவாத சந்தேக நபர்களை விடுவிக்க ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்தாரா என்பது குறித்தும் தேட வேண்டுமென அவர் கோரியுள்ளதாகவும் பொலிஸார் மன்றுக்கு நேற்று விஷேட அறிக்கையூடாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரிஷாத் பதியுதீன் சந்தேக நபரை விடுவிக்க அழுத்தம் கொடுத்தமை தொடர்பில் அப்போதைய இராணுவத் தளபதி செய்தியாளர் சந்திப்பொன்றினை நடாத்தி வெளியிட்ட கருத்துக்கள் ஊடகங்களில் வெளியான நிலையில், அவற்றை ஒளிபரப்பிய 5 ஊடக நிறுவனங்களிலுள்ள செம்மைப்படுத்தப்படாத அந்த செய்தியாளர் சந்திப்பின் காணொலிகளை விசாரணைகளுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டுமென இதன்போது விசாரணையாளர்களால் நீதிவானிடம் கோரப்பட்டது.
அந்தக் கோரிக்கைக்கு அனுமதியளித்த பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன, இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார். -Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்