இந்நாட்டில் முஸ்லிம்களுக்கென்று தனியான சட்டங்கள் இருக்கக் கூடாது. நாட்டு மக்கள் அனைவரும் பொதுவான சட்டத்தின் மூலமே ஆளப்பட வேண்டும் என இனவாத பெளத்த குருமார்களினால் நீண்ட காலமாக குரலெழுப்பப்பட்டு வந்துள்ளது.
இந்தக் கோரிக்கை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதன் ஆரம்பமாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் பிரேரணை ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் பிரேரணையாகவே இது சமர்பிக்கப்பட்டுள்ளது.
அத்துரலியே ரதன தேரர் 1907 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விவாக (பொது) கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையொன்றினையும் சமர்ப்பித்துள்ளார். இச்சட்டத்தின் முகவுரையில் காணப்படும் ‘முஸ்லிம்களின் திருமணம் தவிர்ந்த’ என்ற வசனம் நீக்கப்பட வேண்டுமென பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்கள் பல நூற்றாண்டு காலமாக முஸ்லிம் தனியார் சட்டத்தின் மூலமே ஆளப்பட்டு வருகிறார்கள். எமது நாட்டில் இனவாத அமைப்புகளும் பெளத்த குருமாரும் தலையெடுத்ததன் பின்பே முஸ்லிம் தனியார் சட்டம் சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
முஸ்லிம் சமூகம் ஒரு தசாப்த காலமாக ஆராய்ந்து முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை சிபாரிசு செய்துள்ளது. அத்திருத்தங்களை கடந்த ஆட்சியில் அமைச்சரவையும் அங்கீகரித்துள்ளது. அத்திருத்தங்கள் சட்டவரைஞர் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு காத்திருக்கையில் அச்சட்டத்தை முழுமையாக நீக்கி விடவேண்டும் என்ற கோரிக்கையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இது நாட்டில் இன நல்லிணக்கத்துக்கு விழுந்துள்ள பாரிய அடியாகும்.
அத்துரலியே ரதன தேரரின் தனிநபர் பிரேரணை அடிப்படை மனித உரிமை மீறலாகும். உயர் நீதிமன்றில் இதற்கான அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துரலியே ரதன தேரரின் தனிநபர் பிரேரணையை தற்போது அரசில் அங்கம் வகிக்கும் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்துள்ளனர். ‘‘இது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கொள்கைப் பிரகடனத்துக்கு முரணானது. இப்பிரேரணை மீளப்பெறப்பட வேண்டும்‘‘ என பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பிரேரணை விவாதத்துக்கு வந்தால் பல்லினச் சூழலை ஆதரிக்கும் அனைத்து கட்சிகளும் சேர்ந்து பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
‘ரதன தேரரின் தனிநபர் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. அது தோல்வியிலேயே முடியும்’ என பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். அரசாங்க தரப்பில் இப்பிரேரணைக்கு ஆதரவு கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
‘ரதன தேரர் இனமுறுகலை உருவாக்க முயற்சிக்கிறார். அவரது பிரேரணை இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் வாழ முடியாது என்ற செய்தியை கூறுவது போன்றுள்ளது. ஜனாதிபதியும் பிரதமரும் இந்த இனவாத நடவடிக்கையைத் தடுக்க வேண்டும்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
ரதன தேரரின் தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் மக்கள் பிரதிநிதிகள் பிரேரணையைத் தோற்கடித்து இனவாதிகளை ஓரம் கட்ட வேண்டும்.
‘முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கு பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் தீர்வு காணப்படும்’ என நீதி சட்ட மறுசீரமைப்பு மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சட்ட திருத்த சிபாரிசு குழுவின் திருத்தங்களும் பாதிப்பற்ற வகையில் நிறைவேற்றப்படும் எனவும் கூறியுள்ளார். அமைச்சரின் உறுதி மொழிகள் முஸ்லிம் சமூகத்தை ஆறுதல் படுத்தியுள்ளன.
முஸ்லிம் சமூகம் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை எதிர்பார்த்திருக்கின்றதேயன்றி அதனை முற்றாக நீக்குவதற்கு ஒருபோதும் உடன்படப் போவதில்லை. அரசியல் களத்தில் முஸ்லிம்களின் ஆதரவைக் கோரும் ஜனாதிபதியும், பிரதமரும், அரசாங்கமும், அவர்களுடன் இணைந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.-Vidivelli