தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனான அரசாங்கத்தை எம்மால் ஸ்தாபிக்க முடியும். நல்லாட்சியில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்காத வடக்கு, மற்றும் மலையக அரசியல் பிரதிநிதிகளின் பாராளுமன்ற பிரவேசம் இம்முறை சந்தேகத்திற்குரியதென சக்திவலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் அதிகமானளவு தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்றார்கள். இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறாமைக்கு பல்வேறு அரசியல் மற்றும் பாரம்பரிய காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன.
தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பட வேண்டுமாயின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றம் தோற்றம் பெறவேண்டும். தற்போதைய தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்களை தெரிவு செய்த மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்படவில்லை. இதில் குறிப்பாக வடக்கு மற்றும் மலையக தமிழ் அரசியல்வாதிகளை குறிப்பிட வேண்டும். மக்களின் பிரதிநிதியாக செயற்பட முடியாதவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்.
அனைத்தின மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் எம்மால் ஸ்தாபிக்க முடியும். இம்முறை பொதுஜன பெரமுனவின் சார்பில் பொதுத்தேர்தலில் மூன்று இனத்தவர்களையும் போட்டியிடச் செய்யவேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் உரிய தீர்மானம் வெகுவிரைவில் எடுக்கப்படும்.
நிலையான அரசாங்கம் தோற்றம்பெற வேண்டுமாயின் மக்களின் விமர்சனங்களுக்குள்ளானவர்களை மக்கள் இம்முறை பொதுத்தேர்தலின் ஊடாகப் புறக்கணிக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தைப் போன்று நிர்வாகத்துறைக்கும் சட்டத்துறைக்கும் இடையில் முரண்பாடான அரசாங்கம் தோற்றம் பெற்றால் எவ்வித பயனும் ஏற்படாது என்றார்.-Vidivelli