சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் சபைக்கு நாமலின் மாமா, ரோஹிதவின் மாமி நியமனம்
ஜனாதிபதியின் பதில் என்னவென்று முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி
சிவில் விமானசேவைகள் பணிப்பாளர் சபைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் குடும்ப உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ குடும்ப உறுப்பினர்களை ஒருபோதும் உயர்பதவிகளுக்கு நியமிக்கமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அரசாங்கத்தின் உண்மைத்தன்மை வெளிப்பட ஆரம்பித்து விட்டதென முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பல நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தது. தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அரச ஊழியர்களுக்கு சாதகமான நிலமை தோற்றம் பெறுமென்று குறிப்பிடப்பட்டன. ஆனால் இன்று அரச ஊழியர்களே பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை கடந்த அரசாங்கம் சீன நிறுவனத்திற்கு தாரை வார்த்ததாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் அரசாங்கம் ஆட்சிக்குவந்து 2மாத காலத்திற்குள் எவ்வித விலைமனுக் கோரலுமின்றி கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலுக்கு அருகாமையிலுள்ள 3 ஏக்கர் அரச காணி சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 99வருட கால ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் நாட்டு மக்களின் கவனத்திலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக மறைக்கவும், மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல் பதிவுகள் பரவலாக அரசியல் களத்தில் பேசப்படுகின்றன. இவ்விடயத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்.
அரச அதிகாரத்தை பிரயோகித்து குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட மாட்டாதென்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ குறிப்பிட்டார்.
ஆனால் இரகசியமான முறையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் மாமா, ரோஹித ராஜபக் ஷவின் மாமி ஆகியோர் சிவில் விமான சேவைகள் சபையின் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 2015ஆம் ஆண்டுக்கு முன்னரான அரசாங்கத்தின் சுயரூபம் தற்போது தோற்றம்பெற ஆரம்பித்து விட்டது.
தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இனி மேற்கொள்ளாது. கடந்த அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களும் இனி இல்லாதொழிக்கப்படும். இன நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தனது அக்கிராசன உரையில் குறிப்பிடவில்லை என்றார்.-Vidivelli