முன்னாள் அமைச்சர்கள் பதியுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ். ஹமீத், எம்.எச். மொஹமட், பாக்கிர் மாக்கார் போன்றவர்கள் மீது பெரும்பான்மைச் சமூகம் நம்பிக்கை கொண்டிருந்தது. அவர்கள் அடிப்படைவாதத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை. பின்பு அரசியலுக்கு வந்தவர்கள் இனம் மற்றும் மத ரீதியிலான அரசியலைச் செய்து அடிப்படைவாத அரசியலாக்கி விட்டார்கள். அரசியல் அடிப்படைவாதக் குப்பையாக மாறிவிட்டது என இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஏ.எல்.எம். பாரிஸின் கண்டிக் காரியாலயத்தை கண்டியில் திறந்துவைத்து அங்கு இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
‘பொதுஜன பெரமுன அடிப்படைவாதத்தை முற்றாக நிராகரிக்கிறது. நாம் அடிப்படைவாதத்தை ஒழிக்கும் அரசியலை கண்டியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அன்று முஸ்லிம்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையில் நிலவிய நல்லிணக்கம் மீண்டும் நிலைநிறுத்தப்படவுள்ளது.
அன்று பதியுதீன் மஹ்மூதுக்கு கல்வி அமைச்சு வழங்கப்பட்டது. அந்த அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டதை எவரும் எதிர்க்கவில்லை. அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். அன்று அவர் அடிப்படைவாதத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை. அடிப்படைவாதக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
தமிழ் சமூகத்தைச் சேர்ந்த கதிர்காமரை பிரதமராக்கும்படி பெளத்தர்கள் கூடக் கூறினார்கள். அன்று நிலவிய நல்லிணக்கம், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை இதுதான். இதனை பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவினாலேயே உருவாக்க முடியும்.
நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இனரீதியிலான வாக்குப் பலத்தையும் பிரதிநிதித்துவத்தையும் காட்டி பேரம் பேசும் அரசியல் இல்லாமல் செய்யப்பட வேண்டும். எங்களுக்கு வடக்கில் ஒரு பிரிவைத் தாருங்கள் என்று பேரம் பேசுவதனால் நல்லிணக்கத்தை நிலைநிறுத்த முடியாது. அடிப்படைவாதமற்ற அரசியலை உறுதிசெய்து கண்டியில் நல்லிணக்கத்தை உருவாக்கி இப்பகுதி மக்கள் நாட்டுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உரையாற்றுகையில்;
‘ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். ஜனாதிபதியும் பிரதமரும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களல்லர்.
ஹலீம் மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோருக்கு பெருமளவில் சிங்கள மக்கள் வாக்களிக்கிறார்கள். இவ்வாறான நிலையில் ஏன் முஸ்லிம்கள் எமக்கு வாக்களிக்க முடியாது. பொதுஜன பெரமுனவில் எதிர்வரும் தேர்தலில் பாரிஸ் ஹாஜியார் போட்டியிடவுள்ளார். அவரை வெற்றியடையச் செய்ய வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் தற்போது நிலைமை மாறிவிட்டது. ஜனாதிபதியின் பக்கம் முஸ்லிம்கள் அணிதிரள்கிறார்கள். ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு ஐக்கிய தேசிய கட்சியின் அழிவுக்கு காரணமாகிவிட்டது. இலட்சக்கணக்கான குரல் பதிவுகள். இதில் முன்னாள் அமைச்சர்களும் நீதிபதிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். நீதி சுயாதீனத்துக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் சமூகம் வியாபார சமூகமாகும். வர்த்தகத் துறையில் முஸ்லிம்கள் உயர்நிலையை அடைவதற்கு ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். கண்டியில் பொதுஜன பெரமுன முஸ்லிம் அபேட்சகரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பேசுகையில்;
‘ஜனாதிபதி ஒரு கட்சியிலும் அரசாங்கம் ஒரு கட்சியிலும் அமைந்தால் அது எமது அரசியலில் பாதிப்பாக அமையும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். எனவே எதிர்வரும் பொதுத் தேர்லில் பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்யவேண்டும்.
கண்டி அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றார்.
கண்டி மாவட்ட பொதுஜன பெரமுன அமைப்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் உரையாற்றுகையில்;
‘அரசியலில் முஸ்லிம்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய தவறான வழிகாட்டல்கள் அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ தனக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று கூறியுள்ளார். என்றாலும் தனக்கு ஆதரவு வழங்க 2 ஆவது சந்தர்ப்பம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எமக்கு இரண்டாவது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே இரண்டாவது சந்தர்ப்பமாகப் பொதுத் தேர்தலை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதிக்கு ஒரு தூரநோக்குண்டு. நாம் ஜனாதிபதியுடன் நெருக்கமாக வேண்டும். தற்போது முஸ்லிம் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் திட்டங்களில் நாம் பயன்பெற வேண்டும்.
ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ தெரிவு செய்யப்பட்டால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்படும் என்றார்கள். ஆனால் இன்று முஸ்லிம்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். ஜனாதிபதியை முஸ்லிம்கள் 100 வீதம் நம்பலாம் என்றார்.
நிகழ்வில் மெளலவி பஸ்ருல் ரஹ்மான் உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ. பரீல்
- ஜே.எம். ஹாபிஸ்