உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்கள்: குற்றவியல் விசாரணைகளை தொடர்வதில் பின்னடைவு
சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. அதிகாரிகளின் தொடர் இடமாற்றங்களால் சிக்கல்
கடந்த வருடம் மேல், கிழக்கு மாகாணங்களில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் பாதிப்படையும் நிலையிலுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் சம்பந்தமான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவின் ஓய்வை அடுத்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.
கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவாபிட்டி – புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் ஆகியன தாக்குதலுக்கிலக்கான கிறிஸ்தவ தேவாலயங்களாகும்.
இதனைவிட கொழும்பு, காலி முகத்திடலுக்கு சமீபமாகவுள்ள ஷங்ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி ஆகிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. மேற்படி ஆறு தாக்குதல்களும் இடம்பெற்றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையிலான 45 நிமிட இடைவெளியிலேயே ஆகும்.
இந் நிலையில் அன்று பிற்பகல் 1.45 மணியளவில் தெஹிவளை பொலிஸ் பிரிவின் மிருகக்காட்சி சாலைக்கு முன்பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதாரண தங்கு விடுதி கொண்ட ஹோட்டலில் குண்டு வெடிப்புச் சம்பவம் பதிவானது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.15 மணியளவில், குண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைக்கு சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளை இலக்கு வைத்து தெமட்டகொட மஹவில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரியினால் தாக்குதல் நடாத்தப்பட்டது.
இந் நிலையில் இவை தொடர்பில் சி.ஐ.டி.இன் 15 சிறப்பு குழுக்களும் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்தன. இந்த அனைத்து விசாரணைகள் தொடர்பிலும் சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. ஆகியவற்றுக்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவே ஆலோசனைகளை வழங்கி மேற்பார்வை செய்து வந்தார். அவர் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு விசாரணைகளை கருத்தில் கொண்டு பதவி நீடிப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதனைவிட, இந்த விசாரணைகளை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் ஒருங்கமைத்த இரு பிரதான அதிகாரிகள் முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும், சி.ரி.ஐ.டி. முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்கவும் ஆவர். ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக் ஷ பதவி ஏற்று சில நாட்களிலேயே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர சி.ஐ.டி.யிலிருந்து மாற்றப்பட்ட நிலையில், தற்போது அவர் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்க, பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிலிருந்து பொலிஸ் ஒழுக்காற்று பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனைவிட, அவர்களின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் பலருக்கும் அவர்களது கடமையை முன்னெடுக்க தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் இந்த விசாரணைகளில் சர்வதேச விசாரணையாளர்களுடன் இணைந்து செயற்பட்ட இண்டர்போல் பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் அத்தியட்சகர் வெதசிங்கவும் பொலிஸ் நலன்புரி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந் நிலையில் 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பிலான அடிப்படை குற்றவியல் விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை இதுவரை முன்னெடுத்த வேகத்தில், கோணங்களில் முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமை யகத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்