முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகவே இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1907 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க விவாக (பொது) கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றையும் அவர் தனிநபர் சட்டமூலமாக நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். இதற்கமைய குறித்த கட்டளைச் சட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு முகவுரையில் காணப்படும் ‘முஸ்லிம்களின் திருமணம் தவிர்ந்த‘ என்ற வசனம் நீக்கப்பட வேண்டும் என ரதன தேரரின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அரசியலமைப்பில் 21 ஆம் 22 ஆம் திருத்தங்களை முன்வைத்து இரு வேறு தனி நபர் பிரேரணைகளை கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இதில் ஒன்று பாராளுமன்ற தேர்தலில் சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்குரிய வெட்டுப் புள்ளியை 5 வீதத்திலிருந்து 12.5 வீதமாக மீண்டும் அதிகரிப்பதற்கான தனி நபர் பிரேரணை முக்கியமானதாகும்.
மேற்படி இரு பாராளுமன்ற உறுப்பினர்களதும் தனிநபர் பிரேரணைகளினதும் நோக்கமானது சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டவை என்பது வெள்ளிடைமலையாகும்.
அதுரலியே ரதன தேரர் மிகப் பகிரங்கமாகவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரசாரத்தை முன்னெடுத்து வருபவராவார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் அவர் முன்னெடுத்த பிரசாரங்களையும் போராட்டங்களையும் இலகுவில் மறந்துவிட முடியாது. இந் நிலையில்தான் இன்று சட்டங்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான காய்நகர்த்தலை அவர் ஆரம்பித்துள்ளார்.
அதேபோன்றுதான் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவின் செயற்பாடுகளும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. சிறுபான்மை கட்சிகளும் சிறிய கட்சிகளும் தற்போதைய வெட்டுப் புள்ளி முறைமைக்கு அமைவாகவே ஓரளவேனும் தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. இது இலங்கைப் பாராளுமன்றத்தின் பன்மைத்துவத்திற்கு மிகவும் அவசியமானதொரு அம்சமாகும். ஆனால் இவரது பிரேரணைக்கமைய வெட்டுப் புள்ளி மீண்டும் 12.5 ஆக அதிகரிக்கப்படுமாயின் அது சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தையும் பெரும்பான்மை சமூகத்திலுள்ள மாற்று சக்திகளின் பிரதிநிதித்துவத்தையும் வெகுவாக குறைத்துவிடும் அபாயத்தை தோற்றுவிக்கும்.
மேற்படி இரு எம்.பி.க்களிதும் பிரேரணைகளினதும் வெற்றி தோல்விகள் ஒருபுறமிருக்க, இவர்களது இனவாத நகர்வுகள் கவலை தருவதாகவேயுள்ளன.
இந்தப் பிரேரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன்தான் முன்வைக்கப்பட்டுள்ளனவா? இவற்றுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பச்சைக்கொடி காட்டியுள்ளனரா? என்பது இதுவரை தெரியவில்லை. தற்போதைய பாராளுமன்ற காலத்தில் இல்லாவிடினும் அடுத்த பாராளுமன்ற பதவிக் காலத்தில் இவ்வாறான மேலும் பல சட்ட திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்கள் சிறுபான்மை சமூகத்திற்கெதிராக கொண்டுவரப்படலாம் என்ற அச்சம் இப்போதே எழத் தொடங்கியுள்ளது. இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் இடமளிக்கக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
‘‘நான் சகல மக்களையும் அரவணைத்துச் செல்லுகின்ற ஜனாதிபதி‘‘ என தனது பதவியேற்பு நிகழ்விலும் பாராளுமன்ற அக்கிரசான உரையிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அளித்த வாக்குறுதியை அவர் இலகுவாக மறந்துவிட முடியாது. அந்த வகையில் இவ்வாறான இனவாத நகர்வுகள் தொடர்பில் அவர் விழிப்புடன் இருப்பதும் சிறுபான்மை சமூகத்திற்கு சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-vidivelli