மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைத் தொடர்ந்து பாதுகாப்புக்கருதி கொழும்பிலிருந்து லண்டனுக்கு செல்லும் மற்றும் லண்டனிலிருந்து கொழும்பிற்கு வரும் விமானங்கள் ஈரான், ஈராக் நாடுகளின் வான்பரப்புகளைத் தவிர்த்துப் பயணம் செய்யும் விதமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் பாதைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
தற்போதைய நிலைவரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், அவதானத்துடனும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்நிறுவனம், அவசியமான தேசிய மற்றும் சர்வதேச அதிகாரக் கட்டமைப்புக்களுடன் தொடர்புகொண்டு பேசியிருப்பதாகவும், பயணிகள் மற்றும் விமானசேவை ஊழியர்களின் பாதுகாப்புக் குறித்து வலியுறுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
இதேவேளை, பல்வேறு ஆசிய விமானசேவை நிறுவனங்கள் தமது விமானப் போக்குவரத்தின்போது ஈரான் வான்பரப்பைத் தவிர்த்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஈராக்கில் தளம் அமைத்திருந்த அமெரிக்கத் துருப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக வெளியான அறிவிப்பையடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
தாய்வானின் சீனா எயார்லைன்ஸ் நிறுவனமும் தமது விமானங்கள் ஈராக், ஈரான் வான்பரப்பின் ஊடாகப் பயணிக்காதென்று அறிவித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli