சிங்கள பௌத்த வாக்குகள் பெருவாரியாக கிடைக்காதது குறித்து ஐக்கிய தேசிய கட்சியும் சிறுபான்மை வாக்குகள் குறிப்பிட்டளவு கிடைக்காதமை தொடர்பாக ஜனாதிபதியும் சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கு சிங்கள மக்களின் பெரும்பான்மையாக கிடைக்கவேண்டியிருந்த வாக்குகள் ஏன் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஐக்கிய தேசிய கட்சி திரும்பிப்பார்க்க வேண்டும். அதேபோல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு குறிப்பிடத்தக்க சிறுபான்மை மக்களின் வாக்கு கிடைக்காதமை தொடர்பாகவும் சுயவிசாரணை செய்துபார்க்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு ஆதரவாக செயற்பட்டவர்களை அடிப்படைவாதிகளாக சுட்டிக்காட்ட முற்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
மேலும் ஸ்திரமற்ற அரசுகள் உருவாவதை தடுக்க விகிதாசார தேர்தல் முறையை மாற்ற வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் எண்ணிக்கையில் சிறிய வேறுபாடுகள் ஏற்படும்போது இணக்கப்பாட்டு அரசுகள் உருவாவது பாதகமானவையல்ல. அதேவேளை, அதிபெரும்பான்மையுடன் அமைக்கப்பட்ட அரசுகளால் நாட்டுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதையும் மறக்கமுடியாது.
அத்துடன் நானும் தற்போது ராஜாங்க அமைச்சராக இருக்கும் வாசுதேவ நாணயக்காரவும் ஒரே அமைச்சரவையில் இருக்கும்போது, அன்று தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது அதற்கு எதிராக குரல்கொடுப்பதற்கு எங்கள் இருவருக்கும் ஏற்பட்டது. ஆனால் அந்தப் பிரச்சினை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாகவே தெரிகின்றது.
அத்துடன் இனவாத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை நிராகரிக்கவேண்டுமென ஜனாதிபதியின் உரையில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் உரையில் உள்ளடக்கத்தின் உண்மையான விடயங்களை செயற்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம். அதேநேரம் ஒரு கட்சியின் பெயரில் தனது இனத்தின் பெயர் இருப்பதன் மூலம் அந்தக் கட்சி இனவாதக் கட்சியெனத் தெரிவிக்க முற்படுமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அத்துடன் சிங்களம் மாத்திரம் நிலைப்பாட்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க கட்சி உருவாக்கி வெற்றிபெற்றார். சிங்களம் மட்டும் என்ற பிரசாரம் விகாரை தோறும் அன்று மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்டது மொழியின் மீதிருந்த ஆர்வத்திலா?. அல்லது அதிகாரத்துக்கு இருந்த மோகத்திலா? என்பது வரலாற்றை திரும்பிப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். அதனால் நாங்கள் மீண்டும் கடந்த காலத்துக்கு செல்லவேண்டியதில்லை.
அத்துடன் சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளால் வெற்றிபெறும் நிலை ஏற்பட்டதென ஜனாதிபதி தெரிவித்த கருத்து உண்மையாகும். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று இனவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாமென அக்கிராசன உரையில் ஜனாதிபதி கோரியிருந்தார். ஆனாலும் எந்த அரசியல் கொள்கையை பெரும்பான்மை சிங்கள மக்கள் மீது பிரசாரம் செய்து ஜனாதிபதி வெற்றிபெற்றார் என்பதும் எல்லோருக்கும் தெரியும் என்றார்.-Vidivelli
- ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்