குற்றங்களை தடுக்காது வேடிக்கை பார்க்கும் சமூகம்

0 1,307

”சமூகம் குற்­றங்­களை தயார் செய்து வைக்­கி­றது. குற்­ற­வா­ளிகள் அதனை செய்து முடிக்­கி­றார்கள்” என்­பது பிர­பல ஆங்­கில வர­லாற்­றா­சி­ரியர் ஹென்ரி தோமஸ் அவர்­க­ளது கூற்­றாகும்.

இலங்­கையின் கடந்த ஒரு வார காலத்­தினுள் இடம்­பெற்ற இள வய­தி­னரின் குற்­றங்கள் மற்றும் மர­ணங்கள் இந்தக் கூற்றை மெய்ப்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளன.

பேரு­வ­ளை­யி­லுள்ள முஸ்லிம் பாட­சாலை ஒன்­றினுள் மாணவத் தலைவர் ஒரு­வ­ருக்கும் மற்­றொரு மாண­வ­ருக்­கு­மி­டையில் ஏற்­பட்ட கைக­லப்பில், குறித்த மாணவத் தலைவர் பின்னர் உயி­ரி­ழந்தார். இச் சம்­பவம் பலத்த அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இது ஒரு திட்­ட­மிட்ட கொலைச் சம்­பவம் அல்ல; விபத்­துதான் என்ற போதிலும் இவ்­வா­றான சம்­ப­வங்­களின் போது சக மாண­வர்கள், ஆசி­ரி­யர்கள், அதி­பர்கள் , பெற்றோர் எந்­த­ளவு தூரம் முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் நடந்து கொள்ள வேண்டும் என்­ப­தற்கு இந்தச் சம்­பவம் ஒரு படிப்­பி­னை­யாகும். பாட­சா­லை­க­ளினுள் இடம்­பெறும் விபத்­து­க­ளின்­போது அலட்­சி­ய­மாக இருப்­பதோ அல்­லது மாண­வர்­க­ளுக்கு உரிய முத­லு­த­வி­க­ளையும் சிகிச்­சை­க­ளையும் பெற்றுக் கொடுக்­கா­தி­ருப்­பதோ உயி­ருக்கே உலை வைக்கும் என்­பதை சக­லரும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

மறு­புறம் மாத்­தறை, எல­வேல்ல பிர­தே­சத்தில் இரு மாணவர் குழுக்­க­ளி­டை­யே­யான மோதலில் பட்­டப்­ப­கலில் பலரும் பார்த்­தி­ருக்க வீதியில் வைத்தே மாணவர் ஒருவர் கத்­தியால் குத்திக் கொல்­லப்­ப­டு­கிறார். இந்தக் குற்­றத்தைச் செய்­ததும் மற்­றொரு மாண­வர்தான்.

அதே­போன்­றுதான் மொன­ரா­கலை – சுமே­த­வெவ பகு­தியில் 22 வய­தான தனது காத­லியை இளைஞர் ஒருவர் வீதியில் வைத்தே கழுத்து நெரித்துக் கொலை செய்­கிறார்.

உண்­மையில் மாத்­தறை சம்­ப­வத்தில் ஒரு பாட­சாலை மாண­வனை தனியார் வகுப்­பொன்­றுக்கு அருகில் வைத்து சம வய­தி­லான இன்­னொரு மாணவன் அல்­லது மாணவக் குழு தாக்கும் நேரத்தில், அப்­ப­கு­தியில் பலர் இருப்­பது அல்­லது அந்த பகு­தி­யூ­டாக பலர் செல்­வது சி.சி.ரி.வி. காணொ­லி­களில் காணக் கிடைக்­கின்­றது.

அதே போல் மொன­ரா­கலை சம்­ப­வத்தில் காத­லியை வீதியில், கழுத்து நெரிக்கும் போது, மிகக் கிட்­டிய தூரத்தில் இருந்து அதனை கைய­டக்கத் தொலை­பே­சியில் இருவர் அல்­லது இரண்­டுக்கு மேற்­பட்டோர் சேர்ந்து படம் பிடிக்­கின்­றனர். எனினும் இவ்­விரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் எவரும் குற்றம் ஒன்­றினை தடுக்க முன்­வ­ர­வில்லை. அல்­லது ஒரு உயிர் கொல்­லப்­ப­டு­கின்­றது என நன்கு அறிந்தும் அதனைக் காப்­பாற்ற எந்த வகை­யிலும் முயற்­சிக்­க­வில்லை என்­பது அச்­சம்­ப­வங்கள் தொடர்­பி­லான காணொ­லி­களை பார்க்கும் போது தெளி­வா­கின்­றது.

உண்­மையில் போக்­கு­வ­ரத்து விபத்­தொன்றின் போது, விபத்­தொன்­றினைத் தடுக்­காமை என தனி­யாக குற்­றச்­சாட்டு எழு­தப்­படும் எமது நாட்டில், குற்றம் ஒன்­றினை தடுக்க சக்­தி­யி­ருந்தும், அதனை வேடிக்கை பார்க்கும் சமூகம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளமை மிக வேத­னைக்­கு­ரி­யது.

எனவே இவ்­விரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் குறித்த குற்­றங்­களை தடுக்க சக்தி இருந்தும் அதனை வேடிக்கை பார்த்­தமை, அக்­குற்­றத்­துக்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­தா­கவே அர்த்தம் கொள்­ளப்­படும்.  குற்­றத்­துடன் நேர­டி­யாகத் தொடர்­பு­டை­ய­வர்­களை மாத்­திரம் கைது செய்­யாது, அவற்றை வேடிக்கை பார்த்து படம்­பி­டித்­த­வர்­களும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். எனவே அது குறித்தும் பொலிஸார் விரைவில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அப்­போ­துதான் இன்­னொரு இடத்தில் இவ்­வாறு வேடிக்கை பார்ப்­பது தவிர்க்­கப்­பட்டு குற்றம் ஒன்று தடுக்­கப்­படும் சூழல் உரு­வாக்­கப்­படும். பெறு­ம­திக்க உயிர்­களும் காப்­பாற்­றப்­படும்.

இந்த சம்­ப­வங்கள் நம்மைச் சூழ வாழு­கின்ற சமூ­கத்தின் மனோ­நிலை தொடர்­பான கேள்­வியை உரத்து எழுப்­பு­கின்­றன. கண் முன்னே உயிர் ஒன்று பறிக்­கப்­ப­டு­கையில் அதனை வேடிக்கை பார்க்குமளவுக்கு நமது சமூகத்தின் மனிதாபிமானம் எங்கே போனது?

அடிப்படையிலிருந்தே நமது சிறார்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் கல்வியறிவூட்டப்பட வேண்டும். இன்றேல் நாளை நமது உயிரும் பறிக்கப்படுகையில் சமூகம் வேடிக்கைபார்த்துக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது போய்விடும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.