ஈரானை தாக்க அமெரிக்க கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் தரித்துள்ளன
ஜனாதிபதி பொறுப்பு கூற வேண்டும் என்கிறார் முஜிபுர் ரஹ்மான்
இன்று அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம் ஈரான் இராணுவத் தளபதிமீது தாக்குதல் நடத்தி கொலை செய்திருக்கின்றது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராகத்தாக்குதல் மேற்கொள்ள அமெரிக்க யுத்தக்கப்பல்கள் இலங்கையை சுற்றியிருக்கும் இந்து சமுத்திரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டால் 2007இல் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி இனவாதத்தை எதிர்ப்பதாகத் தெரிவிக்கின்றபோதும் அவருடன் இருக்கும் ஒரு சிலர் அதனை போஷித்து வருகின்றனர். ஏப்ரல் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற பின்னர் அதனை பயன்படுத்திக்கொண்டு தேர்தல் மேடைதோறும் இனவாதத்தை தூண்டியே தேர்தல் பிரசாரங்களில் அவர்கள் ஈடுபட்டுவந்தனர். இனங்களுக்கிடையில் வைராக்கியத்தை ஏற்படுத்தியவர்களும் குரோதத்தை வளர்த்துவந்தவர்களும் இன்று ஜனாதிபதியுடனே இருக்கின்றனர். இந்த சக்திகள் ஒன்றிணைந்தே கோத்தாபய ராஜபக் ஷவை வெற்றிபெறச் செய்தார்கள்.
அன்று பண்டாரநாயக்கவும் இவ்வாறு செயற்பட்டே 1956இல் வெற்றிபெற்றார். இதனால் இறுதியில் அவர் இனவாத, மதவாத முன்னணிகளுடன் கூட்டிணைந்து செயற்பட்டதால் தனது உயிரையும் இல்லாமலாக்கிக்கொண்டார். அதனால் அரசியல் வரலாற்றில் பண்டாரநாயக்கவின் பயணத்தை சற்றுப் பின்நோக்கிப் பார்க்கவேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
ஜனாதிபதி இன்று இணைந்திருப்பது இவ்வாறான விஷப்பாம்புகளுடனாகும். அவர்களுடன் இணைந்தே பயணிக்கின்றார். அதனால் அந்த விஷப்பாம்புகள் எந்த நேரம் அவருக்கு எதிராக செயற்படுமெனத் தெரிவிக்கமுடியாது.
ஏனெனில் அவர் உருவாக்கியிருக்கும் இனவாதக் கூட்டணியை மீண்டும் நல்வழிக்குத் திருப்புவது இலகுவான விடயமல்ல. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் எதனையும் பேசலாம். ஆனால் தேர்தலை வெற்றிகொள்ள அடிப்படையாக கடைப்பிடித்தது, இனவாதத்தையும் மதவாத்தையும் என்பதை மறந்துவிடவேண்டாம். அதனால் அந்த வெற்றியின் பெறுபேறு மிகவும் பயங்கரமானதாகும். அதனால் ஜனாதிபதி தனது பயணத்தை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட இறுவட்டுக்களின் ஒலிப்பதிவுகள் இன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. பொலிஸாரிடமிருந்த இந்த இறுவட்டுக்கள் எப்படி அரசியல்வாதிகளின் கரங்களுக்கு சென்றன?. அப்படியானால் பொலிஸாரை யார் தங்களின் தேவைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
மேலும், இன்று அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவம், ஈரான் இராணுவத் தளபதிமீது தாக்குதல் நடத்திக் கொலை செய்திருக்கின்றது. ஆனால், ஏகாதிபத்தியவாதத்துக்கு விரோதமானவரெனத் தெரிவிக்கும் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன இதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை. ஈரானுக்கு எதிராகத் தாக்குதல் மேற்கொள்ள அமெரிக்க யுத்தக்கப்பல்கள் இலங்கையை சுற்றியிருக்கும் இந்து சமுத்திரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.
அவ்வாறு அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல் மேற்கொண்டால், 2007இல் அமெரிக்காவுடன் மேற்கொண்ட எக்சா ஒப்பந்தத்தில் யுத்தத்துக்கு தேவையான வசதிகளை மேற்கொண்டமையே காரணமாகும். அவ்வாறு இடம்பெற்றால் 2007இல் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.-Vidivelli
- ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்