சவூதி ‘சிலோன் ஹவுஸ்’ விவகாரம்: கொடுக்கல் வாங்கல்கள் எனது பதவிக் காலத்தில் இடம்பெறவில்லை
முன்னாள் அமைச்சர் ஹலீம் திட்டவட்டம்
‘புனித மக்கா நகரின் ஹரம் ஷரீப் பள்ளிவாசல் அபிவிருத்திப் பணிகளின் போது அப்பகுதியில் அமைந்திருந்த இலங்கையின் ‘சிலோன் ஹவுஸ்’ எனும் கட்டடம் சவூதி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு நஷ்ட ஈடாக சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாகவும் அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் இந்த கொடுக்கல்,வாங்கலுடன் முன்னாள் அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ள தாகவும் பிரசாரம் செய்யப்படுகிறது’இது தவறான பிரசாரமாகும். இந்தக் கொடுக்கல்,வாங்கல்கள் எனது பதவிக்காலத்தில் இடம்பெறவில்லை. நஷ்டஈடாக எவ்வளவு வழங்கப்பட்டது என்பது எனக்குத்தெரியாது. ஆனால் அஸீஸியாவில் கட்டடமொன்று கொள்வனவு செய்யப்பட்டு ‘சிலோன் ஹவுஸ்’ என்ற பெயரில் இயங்கி வருகிறது. அதை சவூதியிலுள்ள சாதிக் ஹாஜியார் பரிபாலித்து வருகிறார் என முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
ஹரம் ஷரீப் பாதை அபிவிருத்திப் பணிகளுக்காக இலங்கையின் முன்னாள் புத்திஜீவிகளால் கொள்வனவு செய்யப்பட்ட கட்டடத்துக்கான நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்காக சாதிக் ஹாஜியாரே மும்முரமாக செயற்பட்டிருக்கிறார். சவூதி நீதிமன்றில் நஷ்ட ஈட்டுக்காக சட்டத்தரணிகள் ஊடாக வாதாடியிருக்கிறார். ‘சிலோன் ஹவுஸ்’ தொடர்பாக எனது பதவிக்காலத்தில் சாதிக் ஹாஜியாருடன் கலந்துரையாடி யிருக்கிறேன். விசாரித்திருக்கிறேன்.
பெற்றுக்கொண்ட நஷ்டஈட்டின் மூலம் அஸீஸியாவில் கொள்வனவு செய்த கட்டடம் மூலம் கிடைக்கும் வருமானம் மத்ரஸா நடத்துவதற்கும் இலங்கை மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கும் செலவழிக்கப்படுவதாக அவர் கூறினார்.
சாதிக் ஹாஜியாரின் முயற்சியினாலே நஷ்டஈடு கிடைத்துள்ளது. அவரது முயற்சியை நாம் பாராட்டவேண்டும். அஸீஸியாவிலுள்ள சிலோன் ஹவுஸ் கட்டடத்தில் இலங்கையிலிருந்து செல்லும் வறிய ஹாஜிகளுக்கு தங்குமிட வசதிகள் வழங்குவதாகவும் அவர் கூறினார்.
இதனைப் பரிபாலிக்க சாதிக் ஹாஜியாரை உள்ளடக்கிய பணிப்பாளர் சபையொன்றை நியமிப்பதற்கு எனது பதவிக்காலத்தில் முயற்சிகளை மேற்கொண்டேன். இது தொடர்பாக சவூதியிலிருந்த அப்போதைய தூதருடனும், கொன்சியுலரிடமும் கலந்துரையாடினேன். என்றாலும் இதுவரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அன்று இதற்கென சாதிக் ஹாஜியாரை உள்ளடக்கி பணிப்பாளர் சபையொன்று நியமிக்கப்பட்டிருந்தால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்காது என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்