ஈரானின் குத்ஸ் படையணியின் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலை குறித்து அதிக கரிசணை கொண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் மூலம் பிராந்தியத்தில் நிதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டுமெனவும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.
மேலும் பிராந்தியத்தில் உருவாகியுள்ள பதற்ற நிலைமையைத் தவிர்ப்பதற்காகவும் சமாதானம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும் அனைத்து தரப்பினரும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் இலங்கை அரசு கோரியுள்ளது.
ஈராக் தலைநகர் பக்தாதில் ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டமைக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இதேவேளை அமெரிக்கா ஈரானின் 52 கலாசார மையங்களைத் தாக்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள் உட்பட வெளிநாட்டுப் படைகள் அந்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டுமென ஈராக் பாராளுமன்றம் பிரேரணையொன்றினை நிறைவேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்