பதுளை, பசறை– மடுல்சீமை பிரதான வீதியின் ஆறாம் மைல் கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுக்குள்ளான 41 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் அப்பகுதி மக்களை மாத்திரமல்ல முழு இலங்கை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு தேவைகளுக்காகவும், கடமைகளுக்காகவும் பொதுப்போக்குவரத்து பஸ்களில் பயணிக்கும் மக்கள் இவ்வாறான அகோர விபத்துக்குள்ளாகி உயிரிழப்பது கவலைக்குரியதாகும்.
கடந்த திங்கட்கிழமை மாலை 5.20 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. பசறையிலிருந்து– மடுல்சீமை நோக்கி பயணித்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் பஸ் சாரதி லொறியொன்று முன்நோக்கிப் பயணிக்க இடம்கொடுக்க முற்பட்டபோதே பஸ் வண்டி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வீதிக்கட்டமைப்புகள் உரிய தரத்தினைக் கொண்டனவாக இல்லை. குறிப்பாக மலையகத்தின் வீதிகள் மிகவும் ஒடுங்கியனவாகவே காணப்படுகின்றன. இதன் காரணமாக விபத்துக்கள் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன என்பதை அரசும், பொறுப்பான அரச நிறுவனங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். விபத்து ஒன்று இடம்பெற்றதன் பின்பு நஷ்ட ஈடு வழங்குவோம் எனத் தெரிவிப்பது கேலிக்குரியதாகும். ஒருவரின் உயிருக்கான நஷ்ட ஈட்டினை எவ்வளவென்று எவராலும் தீர்மானிக்க முடியாது.
விபத்தில் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களில் 21 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள், 4 பேர் பிள்ளைகள் ஆவர். இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பஸ் வண்டியில் அதிகளவில் பாடசாலை மாணவர்களும் தொழில் முடிந்து வீடு திரும்புபவர்களுமே இருந்துள்ளனர்.
போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்கவுடன் விபத்து தொடர்பில் கலந்துரையாடியிருக்கிறார். விபத்தில் உயிழந்தவர்கள் மற்றும் காயங்களுக்குள்ளானவர்கள் தொடர்பில் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார். இதனடிப்படையில் போக்குவரத்துச் சபை உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறது. அத்தோடு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோருக்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்கும் தீர்மானித்திருக்கிறது.
பொதுப்போக்குவரத்துச் சேவையில் பழுதடைந்த, பழைய பஸ்கள் ஈடுபடுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அத்தோடு வீதிக் கட்டமைப்பை சீர்திருத்துவது தொடர்பிலும் அரசு தாமதியாது கவனம் செலுத்தவேண்டும். பஸ் சாரதிகளுக்கு விபத்துக்களைத் தவிர்ப்பது தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் நடாத்தப்படவேண்டும்.
நேற்று பசறை வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையும், விசாரணைகளும் இடம்பெற்றன. பதுளை நீதிவான் சமிந்த கருணாதாச விசாரணைகளை நடத்தினார். இலங்கை போக்குவரத்துச் சபைத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க விபத்து நடந்த இடத்துக்கு விஜயம் செய்து மேலதிக தகவல்களைத் திரட்டினார்.
நேற்று பசறை வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வைத்தியசாலை வளாகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குழுமியிருந்தனர்.
‘மோசமான, பழைய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாலே விபத்துக்கள் நிகழ்கின்றன. அதனால் புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்’ என அவர் மக்களிடம் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த மக்கள் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கோஷமிட்டனர். அதிகாரத்திலிருந்த போது எதுவும் செய்யாதவர்கள் இங்கு ஆறுதல் கூறி அரசியல் பேசவேண்டாம் என மக்கள் அவரை எச்சரித்தார்கள். இறுதியில் பொலிஸாரின் பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து வெளியேறினார்.
இவ்வாறான விபத்துக்களுக்கு அரசியல்வாதிகளும் பொறுப்புக் கூறவேண்டும். அவர்கள் மக்களுக்கு உரிய சேவையாற்றினால் பெரும்பாலான விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.-Vidivelli