ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புகளைப் பேணியிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களுடன் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னாள் ஆளுநர்கள் அசாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாகவும் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்துமாறும் சிங்கள ராவய அமைப்பு பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டிருந்தது.
அம்முறைப்பாடுகள் தொடர்பிலான மேலதிக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவு அக்மீமன தயாரத்ன தேரரை அழைத்திருந்தது.
நேற்று முன்தினம் அவர் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலமளித்ததன் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவரது அமைச்சின் ஊடாக சஹ்ரான் குழுவினருக்கு குண்டு தயாரிப்பதற்காக உலோகம் மற்றும் செம்பு உலோகம் வழங்கியுள்ளார். இதன் மூலம் அவர் சஹ்ரான் குழுவினருடன் தொடர்புகளைப் பேணியுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளது.
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மாவனெல்லை புத்தர் சிலைகள் உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். பொலிஸ் உயரதிகாரிகாரியுடன் இது தொடர்பில் கதைத்திருக்கிறார். எனவே இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் இவருக்குத் தொடர்பு உள்ளமை நிரூபணமாகியுள்ளது.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவராக ஆர்.சம்பந்தன் செயற்பட்டதுபோல் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பிரதிநிதியாக செயற்பட்ட சஹ்ரானின் அரசியல் பிரிவுக்குப் பொறுப்பானவர்களாக ரிஷாத் பதியுதீன் போன்றவர்கள் செயற்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும்.
மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டபோது எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு சவாலுக்குள்ளாகியுள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதம் எமது நாட்டில் காலூன்றப் போகிறது.
அமைதி சீர்குலையப் போகிறது என்று அன்று நாங்கள் எதிர்வு கூறியிருந்தோம். மாவனெல்லை சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை விடுவிக்க அசாத்சாலி முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுமே பதில் கூறியாக வேண்டும் என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்