அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் முக்கிய தளபதி காசிம் சுலைமானியின் ஜனாஸா நல்லடக்கத்தில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கிழக்கு ஈரானின் கெர்மான் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 200 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.காசிம் சுலைமானியின் உடல் ஈரானிலுள்ள அவரது சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது இறுதிச்சடங்கில் மில்லியன்கணக்கான மக்கள் கொண்டனர்.
சன நெரிசலுக்கான காரணம் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால் சுலைமானியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்தும் மக்கள் பெருமளவில் கெர்மான் நகர வீதிகளில் கூடியிருந்ததாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஈரானின் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா கொமைனி நேற்று முன்தினம் தெஹ்ரானில் நடைபெற்ற ஜனாஸா தொழுகைக்கு தலைமை தாங்கினார். ஒரு கட்டத்தில் அவரும் தேம்பித் தேம்பி அழுதார்.
சுலைமானியின் மரணத்திற்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என ஈரான் உறுதிபடத் தெரிவித்துள்ளது. மேலும் 2015 ஆம் ஆண்டு கையெழுத்திட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்தும் ஈரான் விலகியுள்ளது.
சுலைமைானியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஈரான் மக்கள் ”அமெரிக்காவிற்கு மரணம்” என்ற முழக்கங்களோடு ஊர்வலமாகச் சென்றனர்.-Vidivelli