சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், தற்போதைய காலி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பிரத்தியேக உதவியாளருமான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று முதல் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழு, அவரை நேற்று உடனடியாக பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றி இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்துள்ளது. ஊடகங்களில் பரவிவரும், முன்னாள் பிரதியமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக இருந்தபோது முன்னெடுத்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலொன்றின் ஒலிப்பதிவினால், இலங்கை பொலிஸ் சேவையின் நற்பெயருக்கு களங்கமேற்படுத்தினார் என்ற காரணத்துக்காக அவர் இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தொடர்பிலான குறித்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்து எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் குறித்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் விஷேட விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குப் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் விடிவெள்ளிக்குத் தெரிவித்தன.
எவ்வாறாயினும், இந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய ஒலிப்பதிவுகள் கிடைத்ததாகக் கூறப்படும், முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட சம்பவம், அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடமிருந்து சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
முன்னதாக இலங்கையின் மிக அனுபவமிக்க, முன்னணி குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை அந்தப் பதவியிலிருந்து நீக்கி காலி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக கடந்த 2019 நவம்பர் 21 ஆம் திகதி முதல் இடமாற்றம் வழங்கி தேசிய பொலிஸ் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை சி.ஐ.டி. பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பதவிக்கு பொலிஸ் சூழல் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ. திலகரத்ன தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2019 டிசம்பர் 20 ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர அந்நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றில் நஷ்டஈடு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே ரஞ்சன் ராமநாயக்க எம்.பி.யின் வீடு சோதனைக்குட்பட்ட போது சர்ச்சைக்குரிய குரல்பதிவுகள் சிக்கியதாக கூறப்படுகின்றது. அந்தக் குரல் பதிவுகளில் தீர்ப்பளிக்கப்பட்ட பாரத லக் ஷ்மன் கொலை விவகாரம் தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் தொடர்பிலேயே சர்ச்சை வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli
- எம்.எப்.எம்.பஸீர்